ஜெயகாந்தன் -நினைவுகள்-2 ஆலமரம்

    
image

ஜேகெவும் அவர் நண்பர்களும் நிறைய பயணங்களில் நிறைந்த நாட்களில் அவர்கள் ஜவ்வாது மலையில் முகாமிட்ட நாட்களிலெல்லாம் அவள் தன் தந்தையுடன் அம்மாபெரும் மனிதருடன் சில பொழுதுகள் கழித்ததுண்டு.அவரின் தலைப்பாகையும் முறுக்கிய மீசையைத் தடவியவாறு அமர்ந்திருக்கும் கம்பீரமும் அவளைப்போன்றதொரு சிறுமியின் உள்ளத்தில் பதிந்திருக்கும் என்று கூட அவர் அறிந்திருக்க மாட்டார்.அவள் தந்தை ஜேகெ இவள் இப்பவே உங்களை வாசிக்கிறாள் என்று கூறியபோது,அவருக்கே உரிய சிரிப்புடன் அவள் தலையைத் தடவினார்.அது அவள் வாழ்வின் பெரும் பேரல்லவா?
          ஏரிக்கு ஓடிச்சென்று மீன் வாங்கி வருகிறாள்.ஜெகேவுக்கு மீன்குழம்பு என்றால் பிடிக்கும் என்று அவள் அம்மாவுக்கு உதவிகள் செய்கிறாள்.அவளும் அவள் தம்பியும்,சின்ன தங்கையும் பங்களாவிற்கும் வீட்டிற்கும் ஓடுகிறார்கள்.புகைநடுவினிலே ஜெகேவை பார்க்கிறார்கள்.இவர்களைப் பார்த்துச் சிரிக்கிறார்.
          மூளைக்காய்ச்சலால் உடல் இயக்கத்தை இழந்து படுக்கையில் இருந்த ஸ்பென்சர் என்ற மூத்த சகோதரன் அவளுக்கிருந்தான்.அவனுக்கு எல்லா அறிவும் இருந்தது.படுக்கையில் இருந்தாலும் அவனுக்கும் ஜெயகாந்தனின் கதைகளை அவள் வாசித்துக் காட்டியிருக்கிறாள்.நாய்க்குட்டியை வைத்து அவர் எழுதிய தோத்தோ என்ற கதையை அவர்கள் ரசித்திருக்கிறார்கள்.
        அவர்கள் வீட்டிற்கு வந்த ஜேகெ ஸ்பென்சரின் படுக்கையருகே ஏறத்தாழ ஒருமணி நேரம் அமர்ந்து அவனைப் பார்த்தவாறு அமர்ந்திருந்தார்.ஒரு வார்த்தையும் கூறவில்லை.அன்பு வார்த்தைகளில் மட்டுமா வெளிவரும்?அந்த மாபெரும் இலக்கியகர்த்தா அவ்வாறு அமர்ந்திருந்த கோலம் அவள் மனப்பதிவுகளில் அப்படியே நிலைக்கிறது…
              அவருடைய நண்பர் குழாமின் மற்றொரு ஜவ்வாது மலைப் பயணத்தில் ,பயணத்திட்டம் முடிந்து கிளம்பிய ஜேகே சிறிது தூரம் சென்றதும் ஒரு ஆலமரத்தையும்,சிறிய ஓடைக்கரையையும் கண்டவுடன் இங்கு ஒருநாளிருக்கலாம் என்று நின்றுவிட்டார்.
      வெறும் கொள்ளுக்கஞ்சி போதும் வேறெதுவும் வேண்டாமென்றுவிட்டார்.அன்று முழுவதும் அவர்கள் அங்கிருந்தார்கள்.அத்தகைய தருணங்களில் அவருடன் மிக முக்கிய மனிதர்கள் பலர் உடனிருந்தனர்.அவருக்கு அனைவரும் ஒன்றே எல்லோரும் தன்னை ஜேகே என்றே அழைக்க விரும்பினார்.
          எளிய உணவுகளையே அவர் விரும்பியதை அவள் பார்க்கிறாள்.கரும்புத் தோட்டத்திலே என்று அவர் பாடுவதையும் கேட்டு உருகி நிற்கிறாள்.
       அந்த ஆலமரத்தடியில் அவரின் விருப்பமான  பாடல்களில் ஒன்றான ஆலமரம் பாடலை குரல் வளம் கொண்ட அவள் தந்தை பிரின்ஸ் நீலைப் பாடச்சொல்கிறார்.கலைஞனின் மனம் அப்படிப் பட்டது தானே..,
 

ஆலமரம் ஆலமரம் பாலூற்றும் ஆலமரம்!
காலத்தின் கோலமெல்லாம்
கண்டுணர்ந்து நிற்கும் மரம்!
பவளமணி போல பழம்
பசுங்கிளிக்குத் தந்த மரம்
சுவையறிந்த பறவையெல்லாம்
சூழ்ந்து நின்று வாழ்த்தும் மரம்!
தன் நிழலில் நின்று கொண்டு
தன் கிளையை வெட்டுகின்ற
கண்படைத்த பாவியர்க்கும்
கருணைநிழல் தந்த மரம்!
விபச்சாரி பாய்விரிக்க
விரும்பி நிழல் தந்த மரம்
அபச்சார நிலைகடந்த
அத்வ யோக ஆலமரம்!!!
     
    ஆம் அவரே அனைவருக்கும் அடைக்கலமளித்த மாபெரும் ஆலமரம் தான்!!!!
         அக்கலைஞனின் கண்ணீர் நினைவுகளுடன்….
                          மோனிகா மாறன்
              நினைவுகள் தொடரும்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s