வெண்முரசு

L              காண்டீபம்.

-மிதந்தலைபவனின் தேடல்

image

ஜெயமோகனின் வெண்முரசு நூல் வரிசையில் காண்டீபம் அர்ச்சுனன் பற்றிய தனித்தன்மை கொண்ட நாவல்.அர்ச்சுனன் தனியாக அலைந்து திரியும் வனவாசம் ஜெயமோகனின் எழுத்துகளில் உயிர்பெற்று புதிய உலகிற்கு வாசிப்பவரை கைபிடித்து அழைத்துச் செல்கிறது.
சுஜயன் எனும் அரசகுல மைந்தனுக்கு மாலினியால் கூறப்படும் அர்ச்சுனனின் வீர வரலாறாகத் தொடங்குவது முதலில் செல்வது நாக உலகிற்கு.காலங்கள் இடம் பொருளற்று நம்மை அலையவைக்கும் ஜெயின் வர்ணணைகள் ஒவ்வொன்றும் புதிது புதிதாய் முளைக்கின்றன.நாகர்களின் கானகத்தில் அர்ச்சினன் காணும் விருட்சங்களும் அருவிகளும் நீர்ப்பரப்புகளும் நம் உடலால் உணரக்கூடிய மெய்நிகராக எழுதப்பட்டுள்ளன.உலூபி எனும் நாக கன்னிகையுடனான பார்த்தனின் உறவு காதல் பிரேமம் என்ற வரையரைகளையெல்லாம் உடைத்து பூச்சுகளற்ற பாவனைகளற்ற தூய பிணைப்பினை மிக இயல்பாக காண்பிக்கிறது.அவளை விலகி அவன் ஓடினாலும் உண்மையில் இன்னும் இன்னும் அவளை நெருங்கும் முரண்பட்ட நிலையை அடர் கானகத்தில் பெய்யும் மழையுடன் வாசிக்கையில் நானும் அவ்விடத்தில் நனைந்து உரு மாறுவதாகவே உணர்ந்தேன்.உலூபி அர்ச்சுனன் கதை தனிப்பட்ட நாவலாகவே வெளிவரலாம்.” காடு” நாவலின் நீலியின் வடிவாகவே  உலூபியையும் இடும்பியையும் கொள்ளலாம்.காட்டில் இயல்பாக. செயற்கை நாணங்களற்று,எதிர்பார்ப்புகளற்று உண்டாகும் இயற்கையான பெண்ணின் குணங்களுடன் காணும் இக்கதை மிக அற்புதமானது.

image

நாகர்களின் உலகில் அர்ச்சுனன் சென்று மூதன்னையரால் ஏற்றுக்கொள்ளப்படுவதும் அங்கு நடைபெறும் சடங்குகளும் மாய உலகில் நாமிருப்பதாகத் தோன்றவைக்கின்றன.ஜெ எப்பொழுதும் வலுவூடடும் தொல்குடிகளின் அன்னையர் வழிபாடே இங்கும் முதன்மை.கொற்றவையிலிருந்து அவர் பெண் தெய்வங்களையே நம் பழங்குடி வழக்கில் தொன்மங்களில் போற்றப்படுவதையே மீண்டும் மீண்டும் பதிவிடுகிறார்.உண்மையில் நம் மரபில் பெண் இப்படி போற்றப்பட்டாளா இத்தனை அதிகாரமிக்கவளா என்று நான் அவருக்கு ஏற்கனவே எழுதியிருந்தேன்.அதற்கு பதிலும் கிடைத்தது.அவர் படைப்புகளின் தனித்தன்மையாக நான்  விரும்புவது தொன்மங்களின் தொடர்ச்சியான இத்தகைய கூறுகளைத் தான்.ஒரு படைப்பு செவ்வியல் தன்மையை அடைவது இத்தகைய அக உணர்வில் தன்னியல்பான மானுட நீட்சியில் தான் என்றே நான் கருதுகிறேன்.
அரவங்களின் ஆண் பெண் இருமைத் தன்மையை உலூபி அர்ச்சுனன் இருவரும் உணரும் அவர்களின் உறவு மிகச்சிறப்பான இணைப்பு.உலூபியின் மகனான அரவாணுக்குத் தரப்பட்ட அழகான வரவேற்பு இப்பகுதி.அவன் மகாபாரதப் போரிலே களப்பலி ஆக்கப்படுவதும் இளையோனாக அர்ச்சுனனின் எண்ணங்களில் காட்டப்படுகிறது.ஆணும் பெண்ணுமான ஈருடலின் உணர்வுகள் எத்தனை மேன்மையாக வெளிப்படுகின்றன.இது இன்றைய உலகில் உணரப்பட வேண்டிய தன்மை.அவர்களின் எண்ணங்களின் மிக உண்மையான எழுத்து.
அடுத்து அர்ச்சுனன் ஃபால்குனை என்னும் பெண்ணாகச் செல்லும் பயணம்.நிலக்காட்சிகளும் அவற்றின் துல்லிய வருணணைகளும் ஜெயமோகனுக்கு மிகச் சாதாரணம் என அவரைத் தொடர்ந்து வாசிப்பவர்கள்  நன்கு அறிவர். ஆனாலும் வெண்முரசின் ஒவ்வொரு இடங்களும் புதியவையே.மலை நிலங்களும் காடுகளும் பாதைகளும் பழங்குடிகளும் அவர்களின் வணிக யாத்திரைகளும் ஃபால்குனையுடன் நம்மை பயணிக்க வைக்கின்றன.
ஃபால்குனையின் பேரழகும் அவள் பாடலும் நடனங்களும் அவளின் ஒவ்வொரு அசைவும் நம்மை ஈர்க்கின்ற பொழுதில் அவளின் வில்லாற்றலை போர்த்திறத்தை வெளிப்படுத்தும் போர்.மணிப்புரியில் மரங்களில் மறைந்து அம்புகளால் நாகர்களை அவள் தனத்து வெல்லும் போர் ஒரு சிறந்த மாயாஜால வண்ணம்..   அர்ச்சுனன்  பெண்ணாகவும் ,சித்ராங்கதன் ஆணாகவும் உருக்கொண்டாலும் இருவரின் உள்ளுணர்வுகளும் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்கின்றன.மணிப்புரியின் லோக்தத் தடாகத்தின் மிதக்கும் தீவுகளில் இருவரும் போர்க்கலை பற்றி பேசும் இடம் நுட்பமானது.சுற்றிலும் மிதக்கும் தீவுகளும்,அவற்றின் அலையும் வேர்களும், மூங்கில் அரண்மனைகளும் கனவுலகை உண்டாக்குகின்றன.ஏரி நீரில் பொன்னொளிர் சூரிய ஒளியும் பறவைகளும் ஜெயமோகனின் எழுத்தில் நம்மை மூழ்க வைக்கின்றன.உளமார்ந்த வாசிப்பனுபவம்.நிலையற்று அலைபவனின் பயணம்.

மோனிகா மாறன்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s