ஜெயமோகனும் பத்மஸ்ரீ விருதும்

படைப்பாளிகளும் விருதுகளும்
          

image

பத்மஸ்ரீ
    எழுத்தாளர்  ஜெயமோகன் பத்மஸ்ரீ விருதினை மறுத்தது பற்றி நிறைய கருத்துகள்.இணையத்தில் சும்மாவே ஜெமோ என்றால் அவல்தான்.இப்போது நன்கு மெல்கிறார்கள்.மென்று துப்புங்கள்.அப்படியாவது உங்கள் உள்ளங்கள் மேன்மையுறட்டும்.
        ஒரு படைப்பாளியாக ஒரு விருதினை ஏற்பதற்கும் மறுப்பதற்கும்  அவருக்கு உரிமையுண்டு.ஆனால் இங்கு அவருமே மன வருத்தத்துடனே மறுக்கிறார். அதற்கு காரணமான இலக்கிய வட்டார காழ்ப்புணர்வுகளே வருந்தத்தக்கவை.
       நம் நாட்டில் அனைத்து விருதுகளும் அரசியலாக்கப்பட்டு விட்டன என்பது அனைவரும் அறிந்ததே.அதிலும் இலக்கியம் தொடர்புடைய விருதுகள் எனில் அதில் தனிப்பட்ட காழ்ப்புணர்வுகளும் இனம் மதம் மொழி வட்டாரம் என்று ஏகப்பட்ட தடைகளத் தாண்டியே ஒவ்வொரு  படைப்பாளியும் செல்லவேண்டியிருக்கிறது என்பது மறுக்க இயலா உண்மை. இவையனைத்தையும் மீறி ஏன் விருதுகள் முக்கியத்துவம் பெறுகின்றன என்றால் தமிழ்ச்சூழலில் எழுத்தாளர்களுக்கு அங்கீகாரம் என்பதே இல்லை.இத்தகைய விருதுகள் மூலம் பொதுவெளியில் ஒரு படைப்பாளிக்குச் சிறிதேனும் அடையாளம் கிடைக்கும் என்பதே அடிப்படை.
          ஜெயமோகனையோ ஜெயகாந்தனையோ அவரது ஒரு சிறுகதையையோ ஒரு பத்தியையோ வாசித்துவிட்டு அறிதியிட இயலுமா.ஆனால் இங்கு நடப்பது அது தான்.ஜெயமோகனை இந்துத்துவா ஆதரவாளர் ஆர் எஸ் எஸ்.அபிமானி என்றெல்லாம் பேஸ்புக்கிலும் இணையத்திலும் வசைபாடுபவர்கள் எவருக்கும் அவர் எழுத்துலகம் பற்றி எதுவுமே தெரியாது என்பதே நிதர்சனம்.பொது மனங்களை விட மேம்பட்டு சிந்திப்பவனை எழுதுபவனை நீயும் சராசரியே என்று இழுக்கும் நடுத்தர மனநிலையின் வெளிப்பாடே இவர்களின் இத்தகைய செயல்கள்.
       தமிழ் இலக்கிய உலகில் முப்பதாண்டு காலம் தீவிரமாய் இயங்கி வரும் ஜெயமோகனைப் போன்ற ஒரு படைப்பாளியின் முக்கியத்துவம் என்ன என்பது ஒரு சிறந்த வாசகனுக்கு நன்கு தெரியும்.சினிமா வெட்டி அரட்டை என்றிருந்த எத்தனையோ பேரை தீவிர இலக்கிய உலகிற்குள் வழிநடத்திக் கொண்டு வந்தவை அவரது எழுத்துக்கள் என்பது யாராலும் மறுக்க இயலா உண்மை.அவரது இணையதளத்தின் இலட்சக்கணக்கான வாசகர்களே அதற்கு சாட்சி.அவரது வாசகர் வட்டமே ஒரு மிகத் தகுதியான விருதினை வழங்கும்போது இத்தகைய விருதுகள் அவருக்கு சாதாரணமானவையே.ஒரு எழுத்தாளராக இளையோரையும் வாசிப்பில் ஆர்வங்கொண்டவர்களையும் தனிப்பட்ட சந்திப்புகளிலும் இலக்கிய கூடுகைகளிலும் இணைத்து மிகச்சிறப்பாக வழி நடத்தும் அவரது இலக்கியப்பணி இதுவரையிலும் எவரும் செய்யாதது என்பதே அவர் மீது உருவாகும் காழ்ப்புணர்வுகளின் அடிப்படை என்றே நான் எண்ணுகிறேன்.ஜெயமோகன் ஒரு தனிப்பட்ட ஆளுமையாக இல்லாமல் ஒரு இயக்கமாகவே உருக்கொண்டதை தாங்க இயலா போலி முகங்களின் அவலங்களே இத்தகைய வெளிப்பாடுகள்.மகாபரதத்தையும் இந்திய மரபினையும் எழுதினால் வலதுசாரியா?வெண்முரசு எத்தனை மேம்பட்ட முயற்சி என்று அதன் வாசகர்கள்  அறிவார்கள்.
ஜெயமோகனின் விஷ்ணுபுரம் கொற்றவை பின் தொடரும் நிழலின் குரல் காடு இன்றைய காந்தி வெண்முரசு என்றெல்லாம் தீவிரமாக செல்லாமல் அவரது அறம் சிறுகதைகளில் ஏதேனும் ஒன்று,சோத்துக்கணக்கு,நூறு நாற்காலிகள், பத்ம வியூகம் நதி போன்ற சிறுகதைகளில் ஏதேனும் ஒன்றே இவ்விருதுக்கு போதுமானது எனலாம்.இந்தேசத்தின் பெருநிலத்தை ஞானமரபை தொன்மங்களை அவரை விட அதிகமாக எவரும் நவீன இலக்கியத்தில் பதிவிடவில்லை.எனவே இந்த நாட்டின் அங்கீகாரத்திற்கு அவர் முற்றிலும் தகுதியானவரே என்பதை இவர்கள் உணர வேண்டும்.
        ஒரு இலக்கிய ஆளுமையாய் விருதினை மறுப்பது அவரது தனிப்பட்ட கருத்து.அதன் விளக்கத்தைக் கூட முழுமையாக உணராமல் கூவும் இவர்களின் அறிவினை எண்ணி வியக்கிறேன்.விட்டால் ஜெயமோகனை தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையிலடைத்து (!)விடுவார்கள் போல.
      ஜெயமோகனின் தீவிர வாசகியாய் அவர் விருதினை ஏற்றிருந்தால் உளம் மகிழ்ந்திருப்பேன்.இவ்விருது தேசிய அளவிலான அங்கீகாரம். ஆனால் விருதினை அவர் மறுத்திருப்பது அவரை நன்கறிந்த யாருக்கும் அவர் அப்படித்தானென்றே உணரத்தோன்றும்.ஏனெனில் அவரது எழுத்துகளில் அறச்சீற்றமும் உண்மையும் தீவிரமும் அவர் பின்பற்றும் நெறிகளே.இந்த அரசால் வழங்கப்படும் எந்த விருதினையோ அங்கீகாரத்தையோ ஏற்க மாட்டேன் என்று அறிவிக்குமளவிற்கு சகிப்பின்மை சர்ச்சையில் அவரை நெருக்கியவர்களும் இப்போது வசைபாடும் குழுக்களே.
        வசைகளின் நடுவே என்று அவர் ஏற்கனவே எழுதியதை இப்பொழுதும் காண்கிறேன்.ஒரு இலக்கியகர்த்தாவை ஓரளவேணும் வாசித்து புரிந்து கொண்டு  அவரது படைப்புகளை பற்றி விமர்சியுங்கள் கண்மூடித்தனமாக அவரையல்ல.
     பத்ம விருதுகள் இந்தியநாட்டு மக்களால் வழங்கப்படும் அங்கீகாரமே எனினும் ஒரு படைப்பாளியின் தார்மீகக் கோபத்தால் அதை மறுக்கும் அவரது மனவலிமையை அவரது நலம் விரும்பிகள் அனைவருமே வணங்குகிறோம்.
      தமிழ்ச் சமூகமும் முக்கியமாக இலக்கிய வட்டாரங்களும் அவர் விருதினை மறுத்ததன் காரணத்தை விமர்சிக்க வேண்டுமே தவிர அவரை அல்ல.
     

மோனிகா மாறன்

Advertisements

தாரை தப்பட்டை-பாலாவின் அற்புத உலகு

தாரை தப்பட்டை-பாலாவின்
உலகு

image

    தமிழ் சினிமாவின் அனைத்து முறைமைகளையும் அபத்தங்களையும் உடைக்கும் பாலாவின் முத்திரை அழுத்தமாக பதிக்கப்பட்ட படம் இது.தாரை தப்பட்டை வாசிக்கும் கரகாட்டக் கலைஞர்களின் வாழ்வை மிக இயல்பாய் பதிவு செய்துள்ளார் பாலா.சசிகுமார் ஒரு கலைஞனின் கோபத்தை இயலாமையை ஒவ்வொரு காட்சியிலும் வெளிப்படுத்துகிறார்.
        வரலட்சுமி சூறாவளியாகவே வாழ்ந்திருக்கிறார்.உண்மையான கரகாட்டக் கலைஞர்களை பார்த்தவர்கள் அதை நன்கு உணரலாம்.ஆட்டக்காரிக்கே உரிய உடல்மொழி,காதலையும் இயலாமையையும் வெளிப்படுத்தும் அவரது முகம் மட்டுமே போதும் மொத்த கதையையும் சுமப்பதற்கு.
    எனக்குச் சாமியே நீதான மாமா.நடுவுல எதுக்கு இந்தக் கல்லெல்லாம் என்று கேட்கையில் அவரது ரியாக்சன் ஒன்றே போதும் மாமன் மீதான வெறிகொண்ட காதலைக் கூற.
        இளையராஜாவின் இசைபற்றி தனியாக ஒரு பதிவே எழுதலாம்.பிண்ணனி இசை ஒவ்வொரு பிரேமிலும் கதையைத் தாங்குகிறது.பாருருவாய் இதரினும் என்று கிளாசிக் இசையிலும் கரகாட்டப் பாடல்களின் குத்துகளிலும் இராஜாவின் இசை நம்முள் ஏற்படுத்தும் மாற்றம் அவரது வெற்றி.
      விளிம்பு நிலை மனிதர்கள் நடுத்தர குடும்பங்கள் அறியாத உலகம் என்று பாலாவின் திரையுலகு எப்பொழுதும் மிக உன்னதமானது.தமிழ் சினிமாவின் ஆபாசமான குத்துப் பாடல்களை பாலா செய்திருக்கும் பகடி மிக நுட்பமானது.
         சாமிப்புலவனாக வரும் ஜி.எம். குமாரின் பாத்திரம் உண்மாயான கலைஞனின் படைப்பாளியின் கோபங்களையும் நுட்ப நகைச்சுவை உணர்வையும் அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கிறது.
       கமர்சியல் வசூல் என்பதையெல்லாம தாண்டி தமிழ் சினிமா கொண்டாட வேண்டிய திரைப்படங்களில் இதுவும் ஒன்று.
        கீழ்த்தட்டு மக்களின் வாழ்வு அவர்களின் உடைகள் பேச்சு என்று மிக அற்புதமாய் மிகச் சரியாய் பதிவிட்டிருக்கும் பாலாவிற்கு பாராட்டுகள்.ஏன் இத்திரைப்படம் மற்றவற்றிலிருந்து மாறுபடுகிறது?
      எந்தக் கலைஞனாக இருந்தாலும் பணத்தை மீறி அவனுக்குத் தன் திறமையின் மீதுள்ள ஈடுபாட்டை,பற்றுதலை மிகச்சரியாய் கூறுகிறது இத்திரைப்படம்.வரலட்சுமி சரக்கு இருக்கா என்று எல்லா இடங்களிலும் விசாரிப்பதும் மாமனுடன் சேர்ந்து குடிப்பதும் வசைமொழிகளும் எத்தனை உண்மையானவை என்று அவற்றை நேரில் பார்ப்பவர்கள் நன்கு அறிவர்.
      உயர்தட்டு மக்களும் நடுத்தரவாசிகளும் வாழும் பொய்யான அபத்த வாழ்வையும் அவர்கள் கடந்து செல்லும் மக்களின் உண்மையான பண்புகளையும் பதிவு செய்யும் பாலா  உண்மையான கலைஞன்.காதலையும் சுயமரியாதையையும் அறச் சீற்றத்தையும் இத்தனை நுட்பமாத் திரையில் காண்பிக்க பாலாவால் மட்டுமே இயலும்.
         இசையையும் ஒளிப்பதிவையும் இத்தனை அழகாக ஒருங்கிணைக்க சிறந்த இயக்குனரால் மட்டுமே இயலும்.
    ஒரு படைப்பாளியாக இதை என்னால் கூறாமல் இருக்க முடியவில்லை.தமிழ் இலக்கியத்தில் குமாஸ்தாக்களும் கன்னி மாடங்களும் அரசர்களும் தூய இலட்சியவாத கதாநாயகர்களும் பதிவிடப்பட்ட காலத்தில்,எளிய மக்களையும் திருடர்களையும் ரிக்ஷாக்காரர்களையும் விபச்சாரிகளையும் அன்றாடம் பிழைப்புத்தேடி அலைபவர்களையும் பதிவிட்டு அவர்கள் வாழ்வின் உணர்வுகளை எழுதிய ஜெயகாந்தனைப் போன்றே பாலாவும் தமிழ்

சினிமாவின் கம்பீர முகம்.
           

மோனிகா மாறன்

ரோஹித் வெமுலாவின் சாட்சி

ரோஹித் வெமுலா

    
DATE

இளங்கவிஞனின் கடைசிக் கவிதை

image

இயற்கையை நட்சத்திரங்களை விரும்பாத கவிஞர்களுண்டா.ஒரு தேர்ந்த படைப்பாளியின் நடையினைப்போன்ற தற்கொலை வாக்குமூலத்தை வாசித்த எவருக்கும் ஒருநொடி அதன் இழப்பு மனதில் அழுத்தாமலிருக்குமா?
    ஒரே ஒரு வெமுலாவின் உள்ளமா அக்கடிதம்? புரையோடிப் போயிருக்கும் இத்தேசத்தின் கோர யதார்த்தத்தில்    ஒவ்வொரு நொடியும் அழுத்தப்பட்டு மூச்சுத் திணறிக்கொண்டிருக்கும் லட்டோபலட்சம் உயிர்களின் குரலன்றோ.
     பகவத் கீதையும் அத்வைதமும் அறநெறிகளும் உலகிற்கு அளித்த தேசமென்று கூறிக்கொள்ளும் பாரதத்தின் மனசாட்சியை பார்த்து வெமுலா எழுப்பிய கேள்விகளுக்கு யார் பதிலளிக்க இயலும்.
   தாழ்த்தப்பட்ட மக்கள் உயர் கல்விக்கோ உயர் அதிகாரங்களுக்கோ வருவதை ஏற்றுக்கொள்ள இயலா இடைநிலை, உயர்சாதி மனநிலைகளுக்கு பலியானவனே வெமுலா.
       இன்றும் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் விடுதிகளிலும் பணியிடங்களிலும் சாதியின் பெயரால் ஒதுக்கப்பட்டே உள்ளனர் தாழ்த்தப்பட்டோர் என்பதே உண்மை.
     அரசியல் சட்டங்களில் மட்டும் இட ஒதுக்கீடு அளித்துவிட்டால் ஆண்டாண்டு காலமாய் இருக்கும் சாதிப் பிளவுகள் மாறிவிடுமா?அவை வெறும் ஓட்டு வங்கியாக மாற்றப்பட்டுவிட்டன.மக்களின் மனங்களில் சமூகத்தின் பார்ஙையில் மாற்றங்கள் வர வேண்டும். அதற்கான விழிப்புணர்வு வந்தால் மட்டுமே இதற்குத் தீர்வு.
     ஆளும் அதிகாரங்களும் சாதிய உணர்வாளர்களும் எங்களை எதுவும் செய்ய இயலாதென இறுமாந்திருக்கும் மத வெறியர்களும் குற்றமற்ற ஆத்துமாவின் இரத்தத்திற்கு என்ன பதில் கூறப்போகிறார்கள்.
    பதினெட்டாம் பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் இந்தியாவில் கூட்டங்கூட்டமாய் மக்கள் மதம் மாறியதன் அடிப்படை இத்தலைமுறைக்கும் தெரியட்டுமே.சாக்கடைப் புழுக்களென எண்ணப்பட்ட சேரிகளின் மக்களை உணவும் கல்வியும் ஈர்த்ததில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்.நீ வேறு மதத்தில் சென்று வசதியாய் மாறிவிடக்கூடாது.எம் மதத்தில் உனக்கு எந்த உரிமையும் அளிக்க மாட்டோம் என்பது எந்த நியாயம்.
      இந்தியாவின் போலி முகங்களை இனியும் மறைக்க முடியாது.
   காற்றில் கரைந்துவிட்ட இளம் ரோஹித்களின் மரணம் இன்னும் எத்தனை காலம் தொடரும்.

வானங்களையும் நட்சத்திரங்களையும் நேசித்த நீ
மண்ணிற்கு அன்பை கற்பிக்கச் சென்றுவிட்டாய்!!
சமத்துவத்தை சட்டத்தில் மட்டும் பகட்டாய் கொண்ட
ஒரு சமூகத்தின் 
உண்மை நரகலை,
பலகோடி உயிர்கள் அன்றாடம் உழலும் யதார்த்தத்தை,
நிணமும் குருதியுமான அதன் 
குரூர உள்ளத்தை 
உலகிற்கு இயம்பிச் சென்றுவிட்டாய்!!!
நீங்கள் என்றென்றும் 
அதிகார மட்டத்தை அடைய இயலா
மிக அற்பமான எம் கால்களின் தூசி போன்ற கல்வியையும் 
எங்கள் மேசைகளின் கீழ் சிதறும் துணிக்கைகளையும் பொறுக்கிக் கொள்ள யாமளித்த
பெரும்பேற்றை உவகித்து 
எம்மை தலைமுறைகளாய்
வணங்கிக் கொண்டிருங்களென்று
பெருங்கருணை(!)
காட்டிய பழம்பெருமை பேசும் 
இத்தேசத்தின் முகரூபத்தை 
காண்பிக்கும் சிறு துளியாய் 
காற்றினில் கலந்துவிட்டாய்!!
எவர் கூற இயலும் 
உன் அம்பாறத்தூணியின் 
கேள்விகளுக்கு விடையை!!
என் செய்யப்போகிறோம் வெமுலா  
குற்றமற்ற  
இரத்தசாட்சியாய் மரித்த 
உன் இளநெஞ்சின்
முடிவற்ற கனவுகளுக்கு!!!

மோனிகா மாறன்
வேலூர்.

மோனிகா மாறன்.

மோனிகா மாறன்

7 Jan 2016

சாயாவனம் – சா.கந்தசாமி

மோனிகா மாறன்

இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையிலான பிணைப்பு, போராட்டங்கள் பற்றிய படைப்புகள் தமிழில் குறைவானவையே. அவ்வகையில் சாயாவனம் மிக நுட்பமான விவரங்கள் கொண்ட நாவல். சுதந்திரத்திற்கு முன்பான  தமிழக கிராமங்களில் இருந்த வாழ்வு முறைகள், சாதிய கட்டமைப்புகள், பொருளாதாரச் சிக்கல்கள்,உறவுகள் பற்றிய சுவாரசியமான பதிவு .வாசிப்பவரை கானகத்தின் உள்ளே அழைத்துச் சென்று அதன் ரகசியங்களை அறிந்நு கொள்ள வைக்கும் அற்புத அனுபவத்தை அளிப்பது இப்படைப்பின் உண்மையான வெற்றி.ஆசிரியரின் குரல்  ஒலிக்காமல் வாசிப்பவரின் மனதில் கதைக்களம் விரிந்து ஒட்டுமொத்த தரிசனத்தைப் பெறுவது நல்ல இலக்கிய அனுபவம்.

மிகச்சிறிய வயதிலிருந்தே வாசிப்புலகில் ஆழ்ந்துவிட்ட எனக்கு இலக்கியங்கள் காண்பிக்கும் கனவுலகும் தரிசனங்களும் நுண்மைகளும் என்றென்றுமான மனவுலகு. ஒரு விதத்தில் புத்தகங்கள் மட்டுமே நான் வாழும் முழுமை என்று எண்ணுவதுண்டு. தீவிர வாசிப்புலகிற்குள் நான் வந்தபோது வாசித்த முக்கிய புத்தகங்களில் சாயாவனமும் ஒன்று.கானகமும் செடிகளும் என்னை மூழ்கடித்து என்னுள் பரவசத்தை உண்டாக்கிய நூல் இது. 

தஞ்சையின் ஒரு சிறு ஊரான சாயாவனத்திற்கு இலங்கையிலிருந்து வரும் சிதம்பரம் , அவ்வூரின் ஒரு வனத்தை கொஞ்சங் கொஞ்சமாக அழித்து கரும்பாலை ஒன்று கட்டுவதே கதைக்களம். சிதம்பரத்தின் அம்மாவின் சொந்த ஊர் அது என்றாலும் அவன் இலங்கையிலே பிறந்து வளர்ந்தவன் என்பதால் அனைத்து பழக்கங்களும் மனிதர்களும் அவனுக்கு விநோதமாகவே தெரிகின்றனர்.

“மாமா செத்தெ இஞ்ச வாங்க

 அத்தாச்சி சுருக்க வாங்க

 வேங்கைப்புலி கூட்டமில்லே உங்கம்மா?”

 மொட்டாணிக் கூட்டம்னு அம்மா சொல்லுவாங்க”

 போன்ற தஞ்சை வட்டார வழக்கும்

அம்மா வாத்து குளுந்துட்டா “

போன்ற இலங்கை மொழியும் உரையாடல்களுக்கு உயிர் தருகின்றன.

        

கிராமப்புறங்களில் ஓயாமல் பேசப்படும் கதைகளும் வம்புகளும் அடுத்தவர் வாழ்வை அறிய அவர்கள் காட்டும் ஆவலாதிகளும் சிதம்பரத்தை சலிப்புறச் செய்கின்றன. வேறு நாட்டிலிருந்து வந்த அவன் சோர்வின்றி உழைக்கிறான். இம்மக்களின் சோம்பேறித்தனம் அவனுக்கு அலுப்பூட்டுகிறது. இது இன்றளவும் ஓரளவு நம் கிராமங்களில் உண்மைதான். சிறு வேலையைச் செய்வதற்கே பெரிதாய் அலட்டிக் கொண்டு நாள் முழுவதும் பொழுது போகாமல் அமர்ந்து பேசுபவர்களைக் கண்டிருக்கிறேன்.குறிப்பிட்ட பணியில் ஆர்வங்கொண்டவனால் சும்மா அமர்ந்திருக்க முடியாது என்பதற்கு சிதம்பரம் நல்ல உதாரணம். அவன் செய்யும் காரியம் அழிவென்றாலும், மனதில் இரக்கம்,அன்பு, நெகிழ்ச்சியற்ற எந்திரத் தன்மை கொண்டவனாக இருந்தாலும், சிதம்பரம் பெரும் உழைப்பாளி. சிதம்பரம் அக்கானகத்தை தனி மனிதனாக அழித்து புதிய ஆலையை உருவாக்க எண்ணுகிறான். “தானே வலிய ஏற்றுக் கொண்ட நித்தியப் போராட்டம், வாழ்வோ சாவோ வனத்தோடு பிணைக்கப்பட்டிருக்காறது”…என்றெல்லாம் அவன் மனதுடன் எண்ணுவதே அதிகம். எப்பொழுதும் பேசும் கிராமத்தாரிடையே குறைவாகப் பேசும் சிதம்பரம் தனித்திருக்கிறான்.அவனுடன் சிறுவர்கள் இருவர் மற்றும் அவன் உறவினர் சிவனாண்டித் தேவர். பழனியாண்டி கலிய பெருமாள் என்ற இரு சிறுவர்களிடமிருந்து காயத்திற்கு மருந்து போடும் செடி போன்றவற்றைக் கற்றுக் கொள்கிறான் சிதம்பரம்.

சாயாவனம் என்ற பெயரே அவ்வூரின் காட்டினைக் குறிப்பதே. காட்டுக் கொடிகளும், புதர்களும்,குறுமரங்களும் பெரியவிருட்சங்களும் நிறைந்த அவ்வனத்தின் ஒவ்வொரு பகுதியும் நம் கண்ணில் தோன்றுகின்றன. ஊணாங்கொடிகளும்,காட்டுக்கொடிகளும் தாழைப்புதர்களும் நிறைந்த சாயாவனத்தின் அழகு, மனிதப் பேராசையால் இவை அழிகின்றனவே என நம்மைப் பதற வைக்கிறது. ஈச்ச மரங்களும் மூங்கில் புதர்களும் அசோக மரங்களும் இலந்தை மரங்களும் விளா மரங்களும் அடர்ந்து தரையெங்கும் காரைப் புதர்கள் படர்ந்திருக்கும் அவ்வனமே நாவலின் உண்மையான மையப் பாத்திரம். நண்பகலில் கூட சூரிய ஒளி ஊடுருவ இயலாத அடர்ந்த கானகம் சிதம்பரத்தின் பேராசையால் அழிக்கப்படுகிறது.

நம் தேசம் எப்படி அழிக்க்பபட்டது என்பதே இந்த நாவலின் நுட்பக் குறியீடு என்கிறார் பாவண்ணன் இதன் முன்னுரையில். நம் இந்தியா மட்டுமின்றி உலக இயற்கையே இவ்வாறுதான் அழிக்கப்பட்டு ஆலைகளும் தொழிலகங்களும் உருவாக்கப்பட்டன. ஒரு காலகட்டத்தில் இவையெல்லாம் வளர்ச்சிகளாக எண்ணப்பட்டன.ஆனால் நாம் இன்று தான் உணர்கிறோம் அவற்றின் பலன்களை. அதனாலேயே வனத்தை அழிக்கும் ஓங்வொரு முயற்சியும் நமக்கு பதற்றத்தை உண்டாக்குகின்றன.

             

காட்டின் சின்னஞ்சிறு மலரையும் நாம் உணர வைப்பதே இப்படைப்பின் சிறந்த அனுபவம்.சரக்கொன்றை மரங்களும் அவற்றிலிருந்து விழும் மஞ்சள் பூக்களும், ஊணாங்கொடிகளும்,குறிஞ்சாக் கொடிகளும் அவற்றின் சிறு பூக்களும்,மேகவண்ண நொச்சிப் பூக்களும், சப்பாத்தி முட்களும், காட்டாமணக்கு, நொச்சி, நுணா, எருக்கு,காரைப் புதர்களும்,நாணற் பூக்களும்  நம் கைகளில் படும் அனுபவத்தைத் தரவல்லது சா.கந்தசாமி அவர்களின் விவரணைகள்.

“ஒளி வீச்சில்  அழகிய இனிமை வாய்ந்த பொழுது மெல்ல மெல்ல உருவாகிக் கொண்டிருந்தது”போன்ற வரிகள் நம் உள்ளத்தை  மௌனிக்கச் செய்யும்  துக்கத்தை உருவாக்க வல்லவை.சிதம்பரத்திற்கு காட்டை அழிக்க இரும்புக் கோடாரிகளும், அலக்குகளும், அரிவாள்களும் தேவைப்பட்டன. மனித உழைப்பும் அவனுக்கு வேண்டியதே. அவனிடம் இருந்த பணத்திற்கு அங்கு மதிப்பே இல்லை என்பது அக்காலகட்ட வாழ்வை நமக்கு காண்பிக்கிறது. வேலையாட்கள் கூலியாக நெல்லைத் தான் கேட்கின்றனர்

சிவனாண்டித் தேவருக்கும் சிதம்பரத்திற்கும் இடையிலான முரண்கள் தலைமுறை இடைவெளியாக ஒவ்வொரு காலகட்டத்திலும் உணர்வதே. வார்த்தைகளால் ஒருவரை ஒருவர் ஆழம் பார்ப்பது கதையெங்கும் பிணைந்துள்ளது.நான் ஆசிரியப் பணியில் முதன்முதலில் சேர்ந்தபோது உடன் பணியாற்றும் மூத்தவர்களிடமிருந்து இத்தகைய அலட்சிய மனநிலையை அனுபவித்துள்ளேன். நீ எத்தனை அறிந்திருந்தாலும் என் வயதிற்கும் அனுபவத்திற்கும்  முன் நீயெல்லாம் சாதாரணம் என்ற மனப்பாங்கு. கொஞ்சங்கொஞ்சமாகவே நம் இருப்பை திறன்களை உணர்வார்கள்..அனேகமாக இவ்வனுபவம் நிறைய பேருக்கு கிடைத்திருக்கும்.சிதம்பரம் வெட்டி அழித்த செடிகளையும் மரங்களையும் பார்த்து “தம்பி எத்தனை வேலை செஞ்சிருக்கு”என சிவனாண்டித் தேவர் பிரமிக்கும் காட்சி அத்தகையதே.

         

பகல் முழுவதும் மரங்களை வெட்டிய சிதம்பரத்திற்கு இரவில் உறக்கம் வரவில்லை. எனவே இரவிலும் காட்டிற்கு செல்கிறான. இரவு நிலவில் தனியாக நின்று அவன் ஒரு அசோக மரத்தை வெட்டும் காட்சி முக்கியமானது. அதுவே அவன் வெட்டும் முதல் மரம். அவன் வெட்டிய மரம் அடர் வனத்திற்கும் வெளியிடத்திற்கும் ஒரு பாலம் போல விழுகிறது. அடர் வனத்திற்குள் செல்வது சிதம்பரம் மட்டுமல்ல. மனித குலமே அப்படித் தான் இயற்கையை அழித்தது.

              

ஒரு நள்ளிரவில்  பிரப்பங்காட்டைத் தாண்டி உள்ளே செல்லும் சிதம்பரம் நிலவொளியில் சமவெளியைக் காண்பது நாவலின் அற்புத காட்சி.காத்தவராயன் எருதும் பசுவும் சீறிக் கொண்டு துள்ளும் காட்சிகள் எவரையும் ஈர்ப்பவை.நாவலெங்கும் வரும் சிறு உயிர்களான ஈச்சம் பாம்புகள், பூச்சிகள், குரங்குகள், நரிகள், புழுக்கள், பறவைகள், சிட்டுக்குருவிகள், மடையான்கள் என்று ஒவ்வொன்றும் இயற்கையில் உயிர்ப்பரவலையும் அனைத்து உயிர்களுக்கும் வாழும் உரிமை இங்கு  உண்டு என்பதற்கும் குறியீடு.

       

அந்நாளில் இருந்த எளிய, நம்பிக்கையான பண்டமாற்றினை இப்படி விவரிக்கிறார் சா.கந்தசாமி..” சாயாவனத்தின் தெற்கு மூலையில் இரண்டு மளிகைக் கடைகள். ஒன்று அப்பு செட்டியாருடையது; மற்றொன்று மொகதீன் ராவுத்தருடையது. நெய் விளக்கு முனையில் கோமுட்டி செட்டிக் கடை.பிரசவ மருந்திற்கு பெயர் போனது கோமுட்டி செட்டிக்கடை.

கம்பு, கேழ்வரகு, தினை, கரும்பு  இவைகளை வெளியூர்க்காரர்கள் வண்டியில் கொண்டு வந்து விற்றார்கள்.சாயாவனத்து மக்கள் தங்களிடம் அதிகம் உள்ளதைக் கொடுத்து தேவையானதை வாங்கிக் கொண்டார்கள்.

     

புளிக்கு  ஐயர் தோட்டத்தில் உலுக்கித் தேவர் கொண்டு வந்து தருவார்.வீட்டுக் கொல்லையில் மிளகாய் பயிராகும்.செட்டியார் காணம் போட்டு நல்லெண்ணெய் தருவார்.அதற்கு கணக்கில்லை.செக்கடிக்குப் போனால் வேண்டுமென்ற முறையில் கொண்டு வரலாம்; கேள்வி முறை கிடையாது. துணிகளுக்கு மாயவரம் போகவேணும். பத்து மைல் வண்டியில் போனால் செட்டியார் வீட்டு வாசலில் இறங்கலாம். ,செட்டியார் வீட்டுத் தறி. சொந்தத் தறி போல-தேவையானபோது வேட்டி புடவை துண்டு எடுத்துக் கொண்டு அறுவடைக்குப் பிறகு நான்கைந்து பேர் சேர்ந்து வண்டியில் நெல் அனுப்புவார்கள்.இதற்கெல்லாம் துல்லிய கணக்கு கிடையாது.நினைவும் வார்த்தையும் தான் கணக்கு.”

      

வாசிக்கும்போதே அக்காலகட்டம் நமக்குத் தெரிகிறது. இத்தகைய ஊரில் சிதம்பரம் பணம் தரும்போது அதை யாரும் வாங்கவில்லை. எனவே அவனே கடை   வைத்து பணப்புழக்கத்தை அறிமுகம் செய்கிறான்.

வாழை இலைச்சருகில் பிழிந்து வைக்கப்பட்ட பழையதும் கெட்டி எருமைத் தயிரும் சுண்டக் குழம்பும் கருக்கிய இளஞ்சூடான வஞ்சனக் கருவாடும் சென்னாக்குன்னி பொடியும் என்று விவரிக்கப்படும் அக்கால உணவுகளும் ரசிக்க வைக்கின்றன.

        

இத்தகைய நுட்பமான எளிய செய்திகளே இந்நாவலின் அழகியல். காட்டினை நெருப்பு வைத்து சிதம்பரமும் தேவரும் அழிக்கும் காட்சி மிக அற்புதமாய் விரிவடைகிறது. அவர்கள் எதிர்பாரா அளவில் மரங்களும் காடும் அழிகிறது.ஆரம்பத்தில் விவரிக்கப்பட்ட புளிய மரங்களும்,இலுப்ப மரங்களும், மூங்கில் குத்துகளும் பிரப்ப மரங்களும் எரிந்து கரிக்கட்டைகளாய் நிற்கும் காட்சி   இரக்கமற்ற எதார்த்த உலகை நமக்கு காண்பிக்கிறது. துள்ளித் திரிந்த காத்தவராயன் மாடுகளும் நரிகளும் குரங்குகளும் பாம்புகளும் குருவிகளும் தாழம் புதர்களும் அழிந்து சாயாவனம் வெறுமையாகிறது. புதிய ஆலை கட்டப்படுகிறது. பொருளாதார வளர்ச்சி வேலை வாய்ப்புகள் என்று பெருகி அவ்வூரின் முகம் மாறுகிறது. இறுதியில் ஊரில் புளிய மரங்களே அற்று பல ஊர்களுக்கு வண்டி அனுப்பி சிதம்பரம் புளி வாங்குகிறான். தித்திப்புப் புளி, புளிப்புப் புளி,செங்காய் எல்லாம் கலந்து அடித்து புளியின் சுவையே மாறிவிடுகிறது. கனகலிங்கம் செட்டியார் வீட்டுக்குப் போன ஐந்து தூக்குப் புளி மறுநாளே திரும்ப வருகிறது.

நல்ல புளியா பாத்து அனுப்பறேன் ஆச்சி எனும் சிதம்பரத்திடம்,செட்டியார் வீட்டு ஆச்சி “ அதான் எல்லாத்தையும் கருக்கிட்டையே இன்னமே எங்கயிருந்து  அனுப்பப்போற? “என்று கேட்பதுடன் முடிகிறது சாயாவனம். ஆம் அக்கேள்விக்கு பதிலே இல்லை என்பதே நிஜம்.

மிக உன்னதமான வாசிப்பனுபவம். சிதம்பரத்தின் சித்திரத்தை அவன் பின்னணியை, மற்றும் கிராமத்தில் நடக்கும் திருமணம், இறப்பு, ஆண் பெண் உறவுச்சிக்கல்கள் என வாசிக்க வாசிக்க நம்மை ஈர்க்கும் சிறந்த கதையமைப்பு.

        

தனிப்பட்ட முறையில் காடும், நெடிதுயர்ந்த மரங்களும  புல்லிதழ்களும் காட்டுப் பூக்களும் கொடிகளும், செடிகளும் ,முட்களும்,சிற்றுயிர்களும் என இந்நாவலில் வருவது போன்ற சூழலிலேயே வளர்ந்ததால் எனக்கு மிகவும் நெருக்கமான புனைவு இது.வடார்க்காட்டில் இருந்தாலும்  ஈராண்டுகள் காவிரி தஞ்சை கடலூர் சுற்றுப் புறங்களில் இருந்ததால் எனக்கு அந்த ஊர்களும் வட்டார மொழியும் மிக ஈர்ப்புடையவை. ஆகவே என்னளவில் நான் ரசித்து வாசித்த புத்தகம் இது. காலச்சுவடு கிளாசிக் பதிப்பாக வந்துள்ள சாயாவனம் கட்டாயம் வாசிக்க வேண்டிய நாவல்.

சாயாவனம் – சா.கந்தசாமி | காலச்சுவடு பதிப்பகம் |இணையத்தில் வாங்க

Natarajan Venkatasubramanian at 21:21

Share

 

No comments:

Post a Comment

Home

View web version

Powered by Blogger.

மோனிகா மாறன்