ஜெயமோகனும் பத்மஸ்ரீ விருதும்

படைப்பாளிகளும் விருதுகளும்
          

image

பத்மஸ்ரீ
    எழுத்தாளர்  ஜெயமோகன் பத்மஸ்ரீ விருதினை மறுத்தது பற்றி நிறைய கருத்துகள்.இணையத்தில் சும்மாவே ஜெமோ என்றால் அவல்தான்.இப்போது நன்கு மெல்கிறார்கள்.மென்று துப்புங்கள்.அப்படியாவது உங்கள் உள்ளங்கள் மேன்மையுறட்டும்.
        ஒரு படைப்பாளியாக ஒரு விருதினை ஏற்பதற்கும் மறுப்பதற்கும்  அவருக்கு உரிமையுண்டு.ஆனால் இங்கு அவருமே மன வருத்தத்துடனே மறுக்கிறார். அதற்கு காரணமான இலக்கிய வட்டார காழ்ப்புணர்வுகளே வருந்தத்தக்கவை.
       நம் நாட்டில் அனைத்து விருதுகளும் அரசியலாக்கப்பட்டு விட்டன என்பது அனைவரும் அறிந்ததே.அதிலும் இலக்கியம் தொடர்புடைய விருதுகள் எனில் அதில் தனிப்பட்ட காழ்ப்புணர்வுகளும் இனம் மதம் மொழி வட்டாரம் என்று ஏகப்பட்ட தடைகளத் தாண்டியே ஒவ்வொரு  படைப்பாளியும் செல்லவேண்டியிருக்கிறது என்பது மறுக்க இயலா உண்மை. இவையனைத்தையும் மீறி ஏன் விருதுகள் முக்கியத்துவம் பெறுகின்றன என்றால் தமிழ்ச்சூழலில் எழுத்தாளர்களுக்கு அங்கீகாரம் என்பதே இல்லை.இத்தகைய விருதுகள் மூலம் பொதுவெளியில் ஒரு படைப்பாளிக்குச் சிறிதேனும் அடையாளம் கிடைக்கும் என்பதே அடிப்படை.
          ஜெயமோகனையோ ஜெயகாந்தனையோ அவரது ஒரு சிறுகதையையோ ஒரு பத்தியையோ வாசித்துவிட்டு அறிதியிட இயலுமா.ஆனால் இங்கு நடப்பது அது தான்.ஜெயமோகனை இந்துத்துவா ஆதரவாளர் ஆர் எஸ் எஸ்.அபிமானி என்றெல்லாம் பேஸ்புக்கிலும் இணையத்திலும் வசைபாடுபவர்கள் எவருக்கும் அவர் எழுத்துலகம் பற்றி எதுவுமே தெரியாது என்பதே நிதர்சனம்.பொது மனங்களை விட மேம்பட்டு சிந்திப்பவனை எழுதுபவனை நீயும் சராசரியே என்று இழுக்கும் நடுத்தர மனநிலையின் வெளிப்பாடே இவர்களின் இத்தகைய செயல்கள்.
       தமிழ் இலக்கிய உலகில் முப்பதாண்டு காலம் தீவிரமாய் இயங்கி வரும் ஜெயமோகனைப் போன்ற ஒரு படைப்பாளியின் முக்கியத்துவம் என்ன என்பது ஒரு சிறந்த வாசகனுக்கு நன்கு தெரியும்.சினிமா வெட்டி அரட்டை என்றிருந்த எத்தனையோ பேரை தீவிர இலக்கிய உலகிற்குள் வழிநடத்திக் கொண்டு வந்தவை அவரது எழுத்துக்கள் என்பது யாராலும் மறுக்க இயலா உண்மை.அவரது இணையதளத்தின் இலட்சக்கணக்கான வாசகர்களே அதற்கு சாட்சி.அவரது வாசகர் வட்டமே ஒரு மிகத் தகுதியான விருதினை வழங்கும்போது இத்தகைய விருதுகள் அவருக்கு சாதாரணமானவையே.ஒரு எழுத்தாளராக இளையோரையும் வாசிப்பில் ஆர்வங்கொண்டவர்களையும் தனிப்பட்ட சந்திப்புகளிலும் இலக்கிய கூடுகைகளிலும் இணைத்து மிகச்சிறப்பாக வழி நடத்தும் அவரது இலக்கியப்பணி இதுவரையிலும் எவரும் செய்யாதது என்பதே அவர் மீது உருவாகும் காழ்ப்புணர்வுகளின் அடிப்படை என்றே நான் எண்ணுகிறேன்.ஜெயமோகன் ஒரு தனிப்பட்ட ஆளுமையாக இல்லாமல் ஒரு இயக்கமாகவே உருக்கொண்டதை தாங்க இயலா போலி முகங்களின் அவலங்களே இத்தகைய வெளிப்பாடுகள்.மகாபரதத்தையும் இந்திய மரபினையும் எழுதினால் வலதுசாரியா?வெண்முரசு எத்தனை மேம்பட்ட முயற்சி என்று அதன் வாசகர்கள்  அறிவார்கள்.
ஜெயமோகனின் விஷ்ணுபுரம் கொற்றவை பின் தொடரும் நிழலின் குரல் காடு இன்றைய காந்தி வெண்முரசு என்றெல்லாம் தீவிரமாக செல்லாமல் அவரது அறம் சிறுகதைகளில் ஏதேனும் ஒன்று,சோத்துக்கணக்கு,நூறு நாற்காலிகள், பத்ம வியூகம் நதி போன்ற சிறுகதைகளில் ஏதேனும் ஒன்றே இவ்விருதுக்கு போதுமானது எனலாம்.இந்தேசத்தின் பெருநிலத்தை ஞானமரபை தொன்மங்களை அவரை விட அதிகமாக எவரும் நவீன இலக்கியத்தில் பதிவிடவில்லை.எனவே இந்த நாட்டின் அங்கீகாரத்திற்கு அவர் முற்றிலும் தகுதியானவரே என்பதை இவர்கள் உணர வேண்டும்.
        ஒரு இலக்கிய ஆளுமையாய் விருதினை மறுப்பது அவரது தனிப்பட்ட கருத்து.அதன் விளக்கத்தைக் கூட முழுமையாக உணராமல் கூவும் இவர்களின் அறிவினை எண்ணி வியக்கிறேன்.விட்டால் ஜெயமோகனை தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையிலடைத்து (!)விடுவார்கள் போல.
      ஜெயமோகனின் தீவிர வாசகியாய் அவர் விருதினை ஏற்றிருந்தால் உளம் மகிழ்ந்திருப்பேன்.இவ்விருது தேசிய அளவிலான அங்கீகாரம். ஆனால் விருதினை அவர் மறுத்திருப்பது அவரை நன்கறிந்த யாருக்கும் அவர் அப்படித்தானென்றே உணரத்தோன்றும்.ஏனெனில் அவரது எழுத்துகளில் அறச்சீற்றமும் உண்மையும் தீவிரமும் அவர் பின்பற்றும் நெறிகளே.இந்த அரசால் வழங்கப்படும் எந்த விருதினையோ அங்கீகாரத்தையோ ஏற்க மாட்டேன் என்று அறிவிக்குமளவிற்கு சகிப்பின்மை சர்ச்சையில் அவரை நெருக்கியவர்களும் இப்போது வசைபாடும் குழுக்களே.
        வசைகளின் நடுவே என்று அவர் ஏற்கனவே எழுதியதை இப்பொழுதும் காண்கிறேன்.ஒரு இலக்கியகர்த்தாவை ஓரளவேணும் வாசித்து புரிந்து கொண்டு  அவரது படைப்புகளை பற்றி விமர்சியுங்கள் கண்மூடித்தனமாக அவரையல்ல.
     பத்ம விருதுகள் இந்தியநாட்டு மக்களால் வழங்கப்படும் அங்கீகாரமே எனினும் ஒரு படைப்பாளியின் தார்மீகக் கோபத்தால் அதை மறுக்கும் அவரது மனவலிமையை அவரது நலம் விரும்பிகள் அனைவருமே வணங்குகிறோம்.
      தமிழ்ச் சமூகமும் முக்கியமாக இலக்கிய வட்டாரங்களும் அவர் விருதினை மறுத்ததன் காரணத்தை விமர்சிக்க வேண்டுமே தவிர அவரை அல்ல.
     

மோனிகா மாறன்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s