தேன்… சிறுகதை

       தேன்
         -மோனிகாமாறன்

           உயர்ந்து வளர்ந்திருந்த மூங்கில் புதரின் மேலெல்லாம் பனித்துளிகள்.ஜவ்வாது மலையின் மையத்தில் இருந்த அவ்விடத்துக்குக் காலையிலேயே வந்து விட்டார்கள் கோயிந்தனும்,அனுமனும்.
அவ்விடத்தின் தனிமையை இன்னும் அதிகமாக்குவது போல இருந்த மஞ்சம்புல் குடிசையின் அருகில் போகிறார்கள்.வீட்டைச் சுற்றிலும் மஞ்சளாய் எள்ளுச்செடிகள்.பார்வை எங்கும் மஞ்சள்.காலை வெளிச்சத்தில் சமவெளியெங்கும் சிறு சிறு வண்டுகள் மொய்த்தது போல்  எள்ளுப்பூக்கள் நிறைந்து   
   செழித்திருந்தன.
       ‘வாடா மனா கோரு.ரவ கூள்த்தண்ணி வாத்துக்கறயா”  காட்டுவாளக் கெளவிக் கேக்குறா.

     “  வாணாம் ஆசா,சீயன் எங்க பூடுச்சி?”

     “ ,எங்க பூடுவான் கையில தழைய வச்சி கசக்கினு கடப்பான்.மாங்கா மரத்தான பாரு.”

                செண்டுமல்லிப் பூச்செடிகளையும்,கிழவி சாம்பலில் துலக்கி பள பளவென வேலிக்குச்சிகளில் மாட்டியிருந்த ஏனங்களையும் தாண்டிப் போகிறார்கள்.
கெவுறுக் கொல்லை மூலையில் மண் சிலும்பியை இழுத்தவாறு காலை வெய்யிலில்  குந்தியிருந்தனர் பீமக்கவுண்டனும்,சின்னப்பையனும்…

   “ சீயா  தேன் காட்டுக்கு இட்னு போறன்னு சொன்னியே?”கோயிந்தன் கேட்கிறான்.
           பீமனின் கண்கள் கோவம்பழமாய்ச் சிவந்துள்ளன.கலைந்த மஞ்சு போன்றத் தாடியைத் தடவிக்கொண்டே இருமியவாறு,”இஸ்கோலு இல்லியா மனா?
ரீவா” என்கிறான்.
     “ஆமா”
     “இரு அய்த்த சோறாக்கியிருப்பா துண்ணுட்டு போவலாம்.”
    “நா போறன் மசான்.ஆட்ட இட்னு பூட்டு அந்திரிக்கு வரேன்.பயனி தழை எடுத்தாருவான் கொணாறேன்.சின்னப்பையன் சொல்லிக்கொண்டு போகிறான். .
      கொய்யாக்கப்பு வேலிப்படப்பைத் தாண்டி இவர்கள் வருவதைப் பார்த்தக் கெழவி “தொளசி சோத்த எடுத்தா” என்று குரல் கொடுக்கிறாள்.அய்த்த போட்ட சாம சோத்தையும்,எக்கிரி சாற்றையும் ருசித்து உண்கின்றனர்.தொட்டுக்கொள்ள புளியம்பிஞ்சும்,ஊசி மொளகாயும் வச்சி கல்உப்பு சேத்தரச்ச ஊறகாய வைத்தாள் அய்த்த.மண்டை வரை உரைக்கும் அந்த புளிப்பும்,காரமும் இன்னும் உண்ணவைக்கிறது.

image

        மூவரும் நெல்லிவாசல் காட்டைத் தாண்டி உள்ளே செல்கின்றனர்.பெரிய எட்டிமரங்களும்,தூங்கு மூஞ்சி மரங்களும் பசுங்கொடிகளால் மூடப்பட்டுள்ளன.எருக்கம்புதர்களும்,கோட்டாமணக்குச் செடிகளும் அடர்ந்துள்ளன.ரண்டானாப்புதர்களில மலர்ந்துள்ள சிவப்புப் பூக்களை மட்டும் பறித்துச் செண்டு செய்தவாறு செல்கிறான் கோயிந்தன்.
      நான் சின்னசா கடக்கயில இங்கல்லாம் சந்தன மரமா இக்கும்.இந்த எடத்துலயே தேனீங்க ரும்னு பறக்கற சத்தம் கேக்கும் பீமன் சொல்கிறான்.
      சீயனுக்கு எழுவது வயசுக்கு மேல இருக்கும்.கதையெல்லாம் அவன் வாலிப வயசுலயேத் தொடங்கும்.கெட்ட வார்த்தைகள் வரிக்கு ஒருக்கா வரும்..
   “தேவடியாப் பசங்க என்னிக்கு இந்த பாதருங்களும்,கெவர்மண்டு பாரஸ்ட் காரனுங்களும் வந்தாங்களொ அத்தோட அல்லாம் ஒண்ணொண்ணா பூடுச்சி.இப்ப இங்கத் தேனும் இல்ல ,சந்தனமும் இல்ல….பீமக்கவுண்டன் தொண்டையைக் கமறித் துப்புகிறான்.துண்டில்  முகத்தைத் துடைத்தவன்  அப்படியே தலையில் சுற்றிக் கட்டிக் கொள்கிறான்.
பீமக் கவுண்டனை  தலைப்பாகையின்றி  பார்க்கமுடியாது.
    “அப்பல்லாம் நான் சின்னப்பையன், இஸ்கோல் அல்லாங்கடயாது.காட்ல ஆடு மேச்சிக்கினு,சாமக்கி ஏர் ஓட்டினு கடப்போம். வரசத்துக்கு ரண்டு வாட்டி அல்லாரும் ஒட்டுக்கா வந்து தேனெடுப்பம்.எங்க தாத்தன் ஆண்டி கவுண்டன் தான் அல்லாருக்கும் நாட்டாமக்காரு.
          அனுமன் அவனை மறித்து  “போ சீயா நீங்கல்லாந்தான் கவுண்டருண்றீங்க.எங்க சட்டிகேட்ல அல்லாம் எஸ்டி,மலையாளின்னு தான் தராங்க.இதே மாறி தான் தகரகுப்பம் வெள்ளயன் மாமன் திருப்புத்தூர்ல ரயில்வேல வேல செய்யல அதும் பசங்கள இஸ்கோல்ல கவுண்டருன்னு சொல்லிட்டு எம்பிசி சட்டிகேட் குடுத்துட்டாங்க.மாத்தவே மிடியல”
.
       “கெவுர்மண்ட் ஆயிரஞ்சட்டம் சொல்லட்டுண்டா நாமல்லாம் கவுண்டரு தான்.நம்ப ஊடு அரசரு,அண்ணாமலையா வூடு கணக்கரு,சகாதேவன் வூடு சேவுகரு.காளியாத்தா தான் நம்பள இந்த மலைக்கு பைரவன வழிகூட்டி இட்டாந்தா”.
                         மூங்கில் புதர்அடர்ந்திருந்தது.அதன் பசுமையும்,மரத்திலிருந்த மண் வண்ண தவுட்டுக் குருவிகளின் சிறகடிப்பும் மூங்கில்கள் ஒன்றுடன் ஒன்று உரசும் ஓசைகளும் அவ்விடத்தை   நிறைத்தன.மூங்கில் புதரில் கீரி ஒன்று ஓடியது.
அதைத்தாண்டி நடந்ததும் பசும் புல்வெளி.பல வண்ண மலர்கள் .ஊதாவும்,நீலமும், மஞ்சளும் ,வெண்மையுமாய் அவ்விடமே வண்ணக்கலவையாய் இருந்தது.பல வண்ணப் பட்டாம்பூச்சிகளும்,தேனீக்களும்,குளவிகளும்,தும்பிகளும் பறந்தன.இவர்களைப் பார்த்ததும் குரங்கு ஒன்று ஓடியது.பசிய வெப்பளாமரத்தின் கிளையில் கொடி போலத் தொங்கிக் கொண்டிருந்த பச்சைப்பாம்பு ஒன்றைப் பார்த்த அனுமன் பயந்து பேச முடியாமல் காண்பிக்கிறான்.பளீரென்ற பச்சை உடல் கொடி அசைவது போல மெல்லியதாய் கிளையில் ஆடுகிறது.அதன் பிளந்த வாய் சிவந்திருக்கிறது.வேகமாய் கிளைகளுக்குள் மறைந்த விட்டது.

   “அது கண்ணுகொத்தி, எங்கையில கடக்குற இந்த தழ வாசனைக்கு எந்தப் பூச்சியும் கிட்ட வராத பூடும்.
இங்க தான் பேராண்டித் தேன் எடுப்போம்.உயர்ந்து வளர்ந்திருந்த நெட்டிலிங்க மரம் ஒன்றின் கீழ் அமர்ந்த பீமன் அந்த பள்ளத்தாக்கைக் காட்டினான்.கோயிந்தனும் அனுமனும் அத்தனை அளகான இடத்தை பார்த்ததே இல்லை.உயர்ந்த மரங்களும்,குட்டை மரங்களும் புதர்களும்,அவற்றை இணைப்பது போல் படர்ந்திருந்தக் கொடிகளும்,சில கரிய வண்ணத் தேனடைகளுமாய் இருந்தது.
“அப்பல்லாம் நாங்க வயசுப் புள்ளிங்க .ஊர்ல அல்லாரும் சேந்து நாள் குறிச்சுட்டு கும்பலாய் வருவோம்.காளியாத்தா சரின்னு சொல்லனும் அப்பதான் தேன எடுக்கலாம்.ஏழு கன்னிமாரு இருப்பாளுங்க ஒவ்வொருத்திக்கும் ரெத்த காவு குடுக்கனும்.ஊர்ல இருந்தே சாவக்கோளி எடுத்தாந்து கீறி ரெத்தத்தை ஒவ்வொரு மரமா உடனும்.யாரு மேலயாவது தேவம் வந்து எடுங்கடான்னா தான் மரத்தில ஏறுவம்.அம்மாங்கட்டுப்பாடா இருந்திச்சி.அப்புடி எடுக்கற தேனு எங்களுக்கு வரசத்துக்கும் சரியாப் பூடும்.
அப்பத்தா(ன்)பாரஸ்ட் காரங்க,தொரைங்க,சிலவ போட்ட பாதருங்க அல்லாம குதரயில் வர ஆரம்பிச்சாங்க.அவுங்கல்லாம் ஊருக்குள்ள வந்தா பொம்பிளங்க ஓடிப்போயி ஒளிச்சுக்குவாங்க.நாங்க சின்னப் புள்ளிங்கல்லாம் மரத்துமேல ஏறிக்குனு பாக்குவம்.
நாங்க அவுங்க போட்னிருந்த துணியெல்லாம் பாத்ததே இல்ல.நாங்க சோமம்(வேட்டி) மட்டுந்தான கட்டுவம்,சரட்டு கூட கடையாது.குளுருக்கு ரட்டிப்பையப் போத்திக்குவம்.கம்பஞ்சோறு,சாமச்சோறு தான்.கெவுறு இல்லன்னா கம்பங்களி களாறி உளுவல புளி போட்டுக் கடஞ்சி துண்ணுவம்.கோளி,ஆடெல்லாம் திர்நாவுக்கு காவு குடுக்கறப்ப துண்றது தான்.காட்டுல மொசலு,எலி,உடும்பு,அணிலு ,காட்டுக்கோளி அல்லாம் வேட்டயில புடுச்சிச் சுட்டுத் தின்னுவம்.”
      அப்பறம் கொஞ்சங்கொஞ்சமாத் தேனு பொட்டி குடுத்தாங்க.தேனீய புடிச்சிப் பொட்டில வச்சி அதுங்கள ஏமாத்தித் தேன எடுத்தாக் காசி கெடச்சிச்சி. எவ்ளோ நாள் ஏமாத்த மிடியும். நாங்கல்லாம் தேன வரசத்து ரண்டு வாட்டி தான் எடப்பம்.சந்தன மரம் எங்களுக்குக் காட்டு தேவம் தொடக்கூட மாட்டம்.
          ஐசக்குனு ஒரு வெள்ளக்காரனும்,ஈப்பன் ஆபிராம்னு ஒரு கேரளா மலையாளத்தானும் வந்தாங்க.அவுனுங்க ரண்டு பேருமே மஞ்சாளா இருப்பானுங்க.அப்டி நெறத்த நாங்க பாத்ததே இல்ல.ஐசக்கு ஒசரம்னா ஏளடி இருப்பான் கண்ணு நீலமா இருக்கும்.சீப்பு காருல சராயி,பூட்சு அல்லாம் போட்னு அவங்க வந்தாலே நாங்கல்லாம் பின்னாடியா ஓடுவம்.பால் பவுடரு,ரொட்டினு ஊர்ல அல்லாருக்கும் குடுத்தானுங்க.அந்த ருசி எங்குளுக்கல்லாம அவ்ளோ புடிச்சிச்சி. களுத்தில சிலவய மாட்டிகினு கருப்பா பொஸ்தகத்த வச்சிக்கினு இன்னான்னாவோ சொன்னானுங்க.கிறஸ்தவங்களா மாறனா துணி,வேல ,படிப்பு அல்லாம் தரன்னானுங்க.நம்ப தேவத்த அல்லாம் சாத்தான்னு சொன்னானுங்க.
நம்பாளுங்க செல பேரு அவங்க கூட போனாங்க.அந்த ஐசக்கு ராவுல வெளிநாட்டு சாராயத்தக் குடிச்சுட்டு பாடிக்கினே தூங்கிடுவான்.அவன் எதிர்க்க கம்முனு கடக்கற ஈப்பன் ,அதுக்கப்பறந்தான் வெளில வருவான். வந்து துட்டுக் குடுத்து பொம்பள தேடுவான்.அல்லாரையும் அதிகாரம் பண்ணுவான்.ஜாட்டய தூக்கினு அடிக்க வருவான்.”
      பீமக்கவுண்டன் கதையயை நிறுத்திக் கீழே பார்க்கிறான்.
   “அதோ பாரு மனா அந்த மரத்தடி தான் ரேணுகாம்பா எடம். சிறிது நேரம் அமைதியாய் இருந்து விட்டு பெருமூச்சு விடுகிறான்.காகிதப் பொட்டலத்தைப் பிரித்துக் காய்ந்த கஞ்சா இலைத்துகள்களை எடுக்கிறான்.இடதுஉள்ளங்கையில் வைத்து,வலது கட்டை விரலால் கசக்குகிறான்.மண் குழலில் சிறிய கல்லைப் போட்டு தூளை நிரப்புகிறான் .அனுமனும் கோவிந்தனும் அவன் செய்வதை ஈர்ப்புடன் பார்க்கின்றனர்.சிறிய துணியை சிலும்பியின் பின்புறம் மூடிப் பற்ற வைத்து இழுக்கிறான்.அவ்விடமெங்கும் கஞ்சா புகை பரவி மணங்கமழுகிறது.சிலும்பியில் கனன்ற தீயின் செம்மை பீமக்கவுண்டனின் கண்களில் ஜொலிக்கிறது.
              “எனுக்கு அப்ப பதனாலு வயிசிருக்கும்.வயிசெல்லாம் கணக்கு சரியா வச்சிக்க மாட்டம்.வயிசு கணக்க சொன்னா ஆயுசு கொறையும்னு எங்க அப்பஞ்சொல்லுவான்.எனுக்கு மாமம்பொண்ணு ரேணுகான்னு இருந்தா.அழகுன்னா அம்மாம் அழகு.நல்ல கருப்பா,ஒசரமா,நீள முடியோட இருப்பா.அவ மூஞ்ச பக்கவாட்டில பாத்தா அந்தக் கண்ணும்,மூக்கும்,ஒதடும் அப்பிடியே சாமி செலயாட்டம் இருக்கும்.அவ அழகப் பத்தி பேரப்புள்ளிங்க உங்க கட்ட சொல்ல மிடியாது.என் வயிசில அப்டி ஒரு பொண்ண பாத்ததில்ல.அவ அப்பனுக்கு மவகட்ட அவ்ளோ உசுரு.மூனாவது பொண்ணு முத்தமெல்லாம் பொன்னுன்னு அவ அம்ம சீட்ட அல்லார்கட்டயும் சொல்லுவா.அவளும் எங்க பெரியாப்பன் மவன் ஜம்புவும் ஆச வச்சிருந்தாங்க.எங்க பெரியாப்பனுக்கு பொண்ணு சீரு குடுக்க வசதி இல்லாத, ஆறு மாசங்களிச்சி தையில தாலி கட்டுனு பேசி வச்சிருந்தாங்க.
    அப்பத்தான் அந்த ஈப்பன் கண்ணுல அவ பட்டுட்டா.எங்க ஊருகட்டுப்பாட்டப் பத்தியெல்லாம் அவன் கண்டுக்கல.
ஆடித் திருநா வந்தப்ப மானு வேட்டக்கி ஊரு ஆம்பளங்க அல்லாரும் காட்டுக்கு பூட்டோம்.மானு கெடைக்கற வரைக்கும் ஆரும் ஊருக்கு வரக்கூடாது.ஊருல பொம்பிளிங்களும்,கொழந்தப்புள்ளிங்களும்,கெழவனுங்களும் மட்டுந்தான்.அன்னிக்கு ஆடு மேச்சிட்டு அந்திரிக்கா ரேணுகா வரவும்,ஈப்பன் தொர இவ பின்னாடியே வந்திருக்கான்.இவ ஓடி வந்துட்டா.
      “அடியே நாயின்ட மோளே நாள ராத்ரிக்குள்ள உன்ன ஞான் பிடிக்கலன்னா ஈ எடத்த விட்டு போயின்னு” கத்திட்டு போயிருக்கான். ராவிக்கல்லாம் அழுதுகினேக் கடக்கறா ரேணுகா ,இன்னாடின்னு கேட்ட அவ அம்ம கட்ட என் சரப்பணி தாரவாந்துடுச்சின்னு சொல்றா.அம்ம போனா போது உட்றீ,பித்தள தானன்னு தேத்தியிருக்கா தொண்டைநைக் காறித் துப்புகிறான் பீமக்கவுண்டன்.

       மக்யாநா காலீல காட்டுக்கு வந்த ரேணுகா நெருப்பு மூட்டி அதுல குதிச்சிட்டா.ஊரே அடிச்சிகினுஅழுவுது.அப்பத்தான் அவ கூட ஆடு மேச்ச புள்ளிங்க சொல்லி அல்லாருக்கும் விஷயந்தெரியுது.திர்நா நின்னுடிச்சி.ஜம்பு அந்த ஈப்பனத் தேடிப் போறதுக்குள்ள அவன் ஓடிட்டான்.
        ,
         ஊரே சேந்து அவள சாந்தமாக்க அவ செத்த எடத்துல ரேணுகாம்பாவ தேவமா வச்சாங்க. அந்த மரத்தடியப் பாரு.
கோவிந்தனுக்கும் அனுமனுக்கும் அதைப்பார்க்கும்போதே உடல் பதறியது.தூரத்திலிருந்தே ரேணுகா தேவியைப் பார்க்கிறார்கள்.நெருப்பு சுவாலை கூந்தலாய் எழும்பக் கண்களில் உக்கிரத்துடன் இரு புறமும் நீட்டிய பற்கள் கொண்ட வாயுடன் அமர்ந்திருக்கும் அம்மனைப் பார்க்கிறார்கள்.

image

            பீமன் தொடர்கிறான, இந்த ஜவ்வாது மலையோட பனிக்கும்,பூவுங்களுக்கும் தேனு நல்லா கெடைக்கும்.ஊரியாவக் கொட்டி கொட்டித் தேனீங்களே இல்ல.இப்ப இங்கத் தேனே இல்ல ,அல்லாம் வெல்லப்பாகக் காச்சித் தேனுன்னு விக்கறாங்க.சந்தன மரம் ஒண்ணு கூட இல்ல …..இங்க நாங்க காட்ட கும்புட்டுகினு ,மரஞ்செடி,பூச்சி,குருவி அல்லாத்து கூடவும் ஒண்ணாக் கடந்தோம்.நம்ப ஊருங்க பேரு கூடப்பாரு தேக்கமரத்தூரு, பலாமரத்தூரு,எட்டி மரத்தூரு,மாமரத்தூரு,நெல்லிமரத்தூரு,ஜம்புநாகமரத்தூரு,பீஞ்ச மரத்தூரு,வாழக்காடு அப்பிடின்னு மரம் பேராத் தானிருக்கும்.ஆனா காட்ட மதிக்காத ஜனம் வந்து இப்ப எல்லாமே பூடுச்சி….”
      அவன் குரல்  அம்மலையெங்கும் பரவி வனங்களினூடே  ஊடுருவி உயர்ந்த மரங்களில் படர்ந்து ஒளியாய் வழிந்தோடும் நீரூற்றுகளில் இறங்கி பசுமை அடர்ந்த    பள்ளத்தாக்கில் சென்று மறைகிறது…

மனா-மகனே
கோரு-உட்காரு
ரவ-சிறிது
ஆசா-ஆயா
சீயன்-தாத்தா
கெவுறு-கேழ்வரகு
மசான்-மச்சான்
அந்திரி-அந்திவேளை
எக்கிரி-கீரை
இஸ்கோலு-பள்ளி
ரீவு-லீவ்
ஊறகா-துவையல்
சாவக்கோளி-சேவல்
தேவம்-தெய்வம்
வரசம்-வருடம்
ரெட்டிப்பை-சாக்குபை
திர்நா-திருவிழா
உளுவல்-கொள்ளு
சரப்பணி-கழுத்தணி
தாரவாந்து-தொலைந்து
ஊரியா-யூரியா.

நன்றி : திண்ணை இணைய இதழ். நவம்பர்:2014

Advertisements

காதல் வழிச் சாலை

மலர்கள்
         மோனிகா மாறன்

image

நிலாக் கிரணங்களாய் 
மிதந்த ஒளிர்வண்ண உன்
தீண்டலால் மலரவைத்தாய்
என் பெண்மையை
என் உடலெங்கும் பூக்கள்!
பிரபஞ்சப் பெருவெளியில்
காத்திருக்கிறேன காலங்காலமாய்
பெண்மையாய்……
ஆலமரமாய்,
அரச இலையாய்
பிறந்த மகவின் உதடு மடிப்பாய்
பூஞ்சிட்டின் மயிர் பிசிறாய்
ஏரி நீரின் பொன் வண்டல் மென்மையாய்
அகல் விளக்கின்
பொன்னிற சிலிர்ப்பாய்,
வாழைப்பூ மடலின்
வாசமாய்,
முதல் துளி வீழ்ந்தவுடன் 
பொங்கும் மண்மணமாய்

உவகையாய்

என் உணர்வுகளை 
நிறைத்த நீ
சென்று விட்டாய்
புன்னகையுடன்…..
உன் மாறாப் பெருங்காதலை
அணிந்திருக்கிறேன்
கைவளையாய்,கழுத்தணியாய்,காதணிகளாய்…,
மலர வைத்தவனுக்கு
கொய்ய மனமில்லையா?
நினைவழியும் முன்
எப்போதும் போல்
எதிர்பாரா கணத்தில்
வந்துவிடுவாய்
என்னை  நாணமுறச்செய்யும்

ரகசிய   பார்வைகளுடன்!!!

மோனிகா மாறன்