கவிதை – பதாகை இணைய இதழ்

மறைந்து…
– மோனிகா மாறன் –

நாமாக அலைந்து
நானாகிப் போன அந்த
குளிர் இரவில்
நம்மிடையே அமர்ந்திருந்தது

நடுங்கிய என் விரல்களில்
அடங்காமல்
வழிந்தோடிய
இதழ்களில்,

கங்குலில் மறைந்திருக்கும்
தான்றி மரத்தின்
காய்ந்த விதைகளில்

உதிரச்சுவையறிந்த
வேங்கையின
நாவில்

அசையும் தூளியிலிருந்து
நீளூம் காலின்
வெள்ளிக் கொலுசொலியில்

பொங்கும் யவனத்தின்
பூரிப்பில்

ஸ்பரிசங்களும்
களைதல்களும் ஒன்றான
மௌனத்தில்

நீர்த்தாரைகள் ததும்பும்
ஏரிக்கரை சதுப்பின் வாசத்தில்

கருவறையில்
அமுதுணவில்
நீள்மூச்சில்
நெடுங்கனவாய்
நிறைந்திருந் தது

எட்டிப் பார்த்த முதல் நரையில்
கிறுகிறுத்து விழுந்த நான் அறிகிறேன்
அது நமக்குள் உறைந்திருந்த மரணத்தின்
முதல் சாய லென்று

பகிர்க
TwitterFacebookGooglePocketEmail
Loading…

Posted in எழுத்து, கவிதை, மோனிகா மாறன் on May 2, 2016 by பதாகை. Leave a comment

சுஜாதா-என்றும் இளமை

     

image

சுஜாதா என்றதும் அவரது எழுத்து நடைதான் நினைவில் தோன்றும்.மறைந்த பின்பும் பல ஆண்டுகளாய் நினைக்கப்படும் சில எழுத்தாளர்களில் இவர் முதன்மையானவர்.
     சுஜாதாவின்  பத்திகளை அறிவியல் புனைவுகளை சுவாரசியமாக்கிய அவரது எழுத்து நடை இளமை ததும்பியது.அதுவே அவரது வாசகர்களை ஈர்த்தது.மிகப்பெரிய சிக்கலான அறிவியலையும் ஒன்றுமில்லை இதுதான் என்று உடைத்து எழுத்தில் புரிய வைத்தவர்.இலக்கிய வாசிப்பின் ஆரம்பகால இளைஞர்கள் புதிய வாசகர்களைக் கட்டி இழுக்கும் திறன் கொண்டவை அவரது எழுத்துகள்.சங்கப்பாடலோ,ராக்கென் தொழில்நுட்பமோ,இணைய சிக்கல்களோ எல்லாவற்றிற்கும் அவரிடம் பதில் இருக்கும்.
     இவற்றை மீறி அவரது எழுத்தின் இலக்கியத்தரம் என்ன என்பதில் பலருக்கும் முரண்பட்ட கருத்துகள் உண்டு.அவருக்கு சாகித்ய அகாடமி வழங்கப்படவில்லை என்று கோபமடையும் வாசகர்களும் உண்டு.
   கணையாழியில் ஷ்ரீரங்கம் எஸ் ஆர் என்று அவர் எழுதிய கடைசிப் பக்கங்கள் ஷ்ரீரங்கத்து தேவதைகள்  போன்ற சில படைப்புகள் அவரது மேலான இலக்கியத்தரத்திற்கு ஆதாரம்.இவை என்றெனெறும் மனதில் நிற்பவை.ஆனாலெ நிறைய துப்பறியும் நாவல்கள் வணிக எழுத்தாகிவிடுகின்றன.
   எப்படியாயினும் பல்வேறுபட்ட எழுத்துகளை சோதித்து பார்த்தவர்.மிகச் சுவாரசியமான எழுத்து என்பதில் எந்த மாற்றுக் கருத்துகளுமில்லை.இளைஞர்களின் எழுத்துலக கதாநாயகனாக என்றும் அவர் எழுத்துகள் நின்றிருக்கும்.