மண்மொழி-குறுந்தொகை -1

குறுந்தொகை 138, கொல்லன் அழிசி, மருதத் திணை – தோழி சொன்னது – தலைவன் கேட்குமாறு, தலைவி சொல்லுவதைப் போன்று, தோழி சொன்னது 
கொன்னூர் துஞ்சினும் யாந் துஞ்சலமே
எம் இல் அயலது ஏழில் உம்பர்
மஊழ்த்தயிலடி இலைய மா குரல் நொச்சி
அணி மிகு மென் கொம்பு
மணி மருள் பூவின் பாடு நனி கேட்டே

image

சிறு வயதில் எப்பொழுதும் நான் இருக்குமிடம் ஏரிக்கரைதான்.எங்கள்  வீட்டிலிருந்து ஐம்பதடி தொலைவில் வனத்துறையின் மரக்கன்றுகள் வளர்க்கும் நர்சரியைத் தாண்டினால் ஏரிதான்.சிறிய நீர்ப்பரப்புதான் எனினும் அது என்னுள் நிறைந்தது.மாலை வேளையில் சூரியன் தங்க நிறங்கொண்டு சிவந்து ஏரி நீரில்   உண்டாக்கும் தோற்றங்கள் எவரையும் ஈர்ப்பவை.அவ்விடமும் அங்கிருக்கும் பறவைகளும்,சின்னஞ்சிறிய பூக்களும்,மீன்களும்,அல்லி மலர்களும்,கரையாரத்தில்மஞ்சளும் சிவப்புமான புளியம்பூக்களும் ,காட்டுவாகை மரங்களும் எனக்களிக்கும் அந்தரங்க
மகிழ்வினை நான் மீண்டும் பெற்றது சங்க இலக்கியத்தில் தான்.அம்மொழியும் இயற்கையும் அளிக்கும் பேருவகை என்றும் மாறாதவை.
இக்குறுந்தொகைப்பாடலில் தலைவி இரவில் உறங்காமல் விழித்திருக்கிறாள்.ஊர்துஞ்சும் யாமப்பொழுதுகள் காதலிப்பவர்களுக்கு சுகமான துயர்களே.இயற்கையுடன்,பூக்களுடன்,விலங்குகளுடன் இணைந்த வருணணைகளே சங்க இலக்கியங்களை செவ்வியல்கள் ஆக்குகின்றன.நொச்சிமரத்தின் இலைகள் மயிலின் கால்கள்
போன்ற வடிவம் கொண்டவை என்பது மயிலையும் நொச்சியையும் நுட்பமாய் கவனிப்பவருக்கே புரியும்.வளமையான அழகிய நொச்சிமரங்களைக் காண்கையிலேயே அது விளங்கும்.நொச்சி மரத்திலிருந்து பூக்கள் விழும் மெல்லிய சத்தத்தை கேட்டவாறு படுத்திருக்கிறாள்.அது துயரத்தை விவரிக்கும் ஒலியாகவே இங்கு கூறப்படுகிறது.நொச்சி மலர் கிளையினின்று வீழ்வதைப் போன்று அவள் மனதிலிருந்து காதலனின் மீதான அன்பு விழுகிறது.மனம் ஆற்றாத துயருறுகிறது என்பதை எத்தனை அழகாக விவரிக்கிறார்.இப்பாடல்கள் அந்தரங்கமான வாசிப்பனுபவத்தை அளிக்க வல்லவை.

Advertisements

கபாலி -லப்பம்

    

image

எழுத்து வாசிப்பு இலக்கியம் பின் முன் நவீனத்துவம் தால்ஸ்தோய்,மௌனி என்றிருக்கும் என் மன உலகு சில வேளைகளில் சலிப்புற்று வெளியேறும்.அவ்வேளைகளில் நான் பார்க்கும் பாடல்களையும் காமெடிகளையும் சொன்னால் சிரிப்பார்கள்.அது ஒரு மனநிலை.அவ்வளவு தான்.
       அப்படிப்பட்ட வேளைகளில் சமூக வலைதளங்களில் இணையப்பக்கங்களில் என்ன நடக்கிறது என்று பார்ப்பதுண்டு.அப்படித்தான் கபாலி திரைப்படத்தின் நெருப்புடா என்ற பாடலின் ஒரு வரி லீக் ஆகிய(!) அறிய தகவலைப் பார்த்தேன்.அப்பப்பா என்ன சிலாகிப்பு.அந்த ஒரு வரிப் பாடலை வைத்து லட்சம் வார்த்தைகள்.காபலி என்ற பெயர் அறிவிக்கப்பட்டதிலிருந்தே திட்டமிட்டு  செய்யப்படும் ப்ரமோ இது.இப்பொழுது அனைத்து திரைப்படங்களுக்குமே இப்படித்தான்.ரஜினிகாந்த் என்றால் செலவில்லா விளம்பரம்.
       மிக்க அறிவாளிகள்,உலகப்படங்கள் தெரியும் என்ற அளவில் பேசுபவர்களும் தலைவர்டா  என்று புளகாங்கிதமடைவது உச்சகட்ட நகைச்சுவை.
         எங்களூரில் அந்த நாட்களில் மர ஆச்சாரி கட்டில் நாற்காலி எல்லாம் மரக்கட்டைகளை இழைத்துச் செய்வதைப் பார்த்திருக்கிறேன்.அப்பவெல்லாம் மெஷின் பயன்பாடு குறைவு.ஆச்சாரிகள் கட்டைகளை இழைத்து கொஞ்சங்கொஞ்சமாய்  மெருகேற்றுவார்கள்.பார்ப்பதற்கு அருமையான பொழுது போக்கு.இரண்டு பேர் ஆளுக்கொரு பக்கம் நின்று இழைப்பதே  நாட்டியம் மாதிரி இருக்கும்.அப்போது விழும் மரச் செதில்களைப் பொறுக்க காத்திருப்போம் .சுருள் சுருளாய் அழகாக இருக்கும்.அடுப்பு பற்றவைக்க உதவும்.இழைத்த மரக்கட்டைகளில் அழகான வரிகள் இருக்கும்.மரங்களின் வாழ்வு வளையங்கள்.சில இடங்களில் சமமாக இல்லாமல் மேடு பள்ளங்கள்,சொத்தை என்று குறைபாடுகள் இருக்கும்.அதைச் சரி செய்ய லப்பம் என்று சொல்லும் ஒரு பூச்சினை ஆச்சாரிகள் தடவுவார்கள்.மைதாமாவு பிசைந்த பதத்தில் இருக்கும்.கட்டைகளில் அதைப் பூசினால் குறைகள் சரியாகிவிடும்.
     எனக்கு கபாலி ரஜினிகாந்தைப் பார்த்தால் அந்த ஞாபகம் தான் வருகிறது.  பாவம் அறுபத்தைந்து வயதில் முகமெல்லாம் சுருங்கிய ரஜினிகாந்தை லப்பம் தடவி இருபத்தைந்து வருடத்திற்கு முன்னிருந்த மாதிரியே திரும்ப வந்திருக்கிறார் என்று  அவரது ஆழ்மனதில் நம்ப வைத்திருக்கிறார்கள்.தள்ளாத வயதில் பதினான்கு வயது குமரிகளுடன் எம்ஜிஆர் ஆடியதை விட இது கொடுமையாக இருக்கு.முன்னணிக் கதாநாயகர்கள் தங்கள் வயதிற்கு ஓரளவேணும் பொருந்துமாறு நடிக்க வேண்டும்.
     இதில் ரஞ்சித் இயக்குகிறார் என்பதால் குறியீடுகள் வேறு.ஒடுக்கப்பட்ட  மக்களின் வாழ்க்கை என்ற பெயரில் இவர்கள் செய்யும் அரசியல் என்றால் அடிக்க வருவார்கள்.அட்டகத்தி,மெட்ராஸ் இவற்றில் ரஞ்சித் காண்பித்த தலித் அரசியல் உண்மையில் ரீச் ஆகியதா.கதையில் எங்கோ ஓரிடத்தில் ,வசனத்தில் நுழைத்துவிட்டு குறியீடுகள் என்பதெல்லாம் என்ன மாதிரியான தந்திரம்.சிறந்த திரைக்கதை,காட்சியமைப்பு,இயக்கம் என்பதில் ரஞ்சித் திறமையான இயக்குநரே.ஆனால் தலித் குறியீடு என்பதெல்லாம் ஓவர்.
    கபாலியும் அப்படிப்பட்ட படமாகவே இருக்கும்.படம் வெளிவந்தவுடன் சாமானியர் முதல் அறிவுஜீவி எழுத்தாளர் வரை,இணையப் பக்கங்கள் தொடங்கி,இலக்கிய வணிக இதழ்கள் வரைக் குறியீட்டு விமர்சனங்கள் எழுதிக் குவிக்கப் போகிறார்கள்.இதைத்தான் அவர்கள் எதிர்பார்ப்பது.
       எனக்கு ஆச்சரியம் என்னவென்றால் தமிழ் சமூகத்தில் படித்தவர்கள் இளைஞர்கள் எல்லோரும் இப்படி சினிமா மோகத்தில் இருப்பது தான்.இவ்வளவு ரசனையற்றதா தமிழ் கூறும் நல்லுலகு.டிவி,சினிமாவைத் தவிர்த்து வேறு பொழுதுபோக்குகள் இருப்பது தெரியாத இரண்டு தலைமுறைகள் உருவாகிவிட்டன.ஏன் இவர்களுக்கு எழுத்தாளர்கள,படைப்பாளிகள் பற்றியெல்லாம் தெரியவில்லை.நம் கல்வி முறையே இலக்கியத்தை ஒதுக்கிவிட்டது.கதைப் புத்தகங்கள் என்ற மட்டமான பெயரை உண்டாக்கியது யார்?
       திரைப்படங்கள் பற்றி ஆர்வங்கள் இருக்கலாம்.ஆனால் அதைத்தவிர வேறு எதுவுமில்லை என்பது எத்தகைய மனநிலை.முப்பதாண்டுகளுக்கு முன் கல்வியறிவு குறைவு,பொருளாதார  வசதிகள் குறைவு,உலகைப் பற்றிய அறிதல்கள்,எக்ஸ்போஷர் குறைவு.அதானால் சினிமா மட்டுமே தெரிந்திருந்தது. ஆனால் இன்றைய பொருளாதார ,தொழில் நுட்ப முன்னேற்றத்திலும் ,நவீன பேஸ்புக்கும் ட்விட்டரும் இணையமும் சினிமா விவாதங்களுக்குமே,சினிமா கதாநாயகர்களுக்கே முக்கியத்துவம் அளிக்கின்றன எனில் அது நம் சமூகத்தின் சீழ்பிடித்த நோய்க்கூற்றின் வெளிப்பாடே.கபாலியை இப்படி போற்றுவது எல்லாரின் ரசனையும் என்னைப் போன்றதே என எண்ணவைக்கும் சாமானிய,நடுத்தரவர்க்க உளவியலே.அதிகபட்ச அறிவே  இதுதான் என நம்பும் குறுகிய மன நோய்.
   படைப்பாளிகள்,அறிவு ஜீவிகள் பற்றிய தவறான புரிதல்கள்,மற்றும் சிலரின் தவறான முன்னுதாரணங்களே நம் சமூகக் கும்பல் மனநிலையின் தரமற்ற ரசனையின் வெளிப்பாடு.அரசியல் இலக்கியம் எல்லாம் ஒன்றாகக் கலந்து கீழ்த்தரமான ரசனையை உருவாக்கிவிட்டது.திராவிட அரசியலின் போலி மொழிப்பற்று,மாநாடுகள்  அடிவருடிகள்  உண்டாக்கிய தவறான விழுமியங்கள்,நடைமுறைகள் மக்களை இலக்கியம் தமிழ் எழுத்து என்பதெல்லாம் கெட்ட வார்த்தைகள் என்ற மனநிலைக்குத் தள்ளிவிட்டன.
     இணையவெளியின் கட்டற்ற இக்காலகட்டத்திலாவது தரமான இலக்கியம் வாழ்வை எப்படி சீராக்கும்,உண்மையான அறம்,சிந்தனைகள் ,எளிமையின் உண்மையான பண்புகள் பற்றியெல்லாம் அறிய வைக்கும் என்பதை சரியாக இளைஞர்களிடம் சேர்ப்பது இலக்கியவாதிகளின் கடமை மட்டுமன்று,அனைவரின் பொறுப்பு.
    புத்தகக் கண்காட்சி பற்றிய பதிப்பாளர்களின்  பேட்டிகள் கண்ணீரை வரவழைப்பவை.அரசின் கோடிக்கணக்கான நிதியைப் பெறும் நூலகத்துறையும்,செம்மொழி த் துறையும் சரியாக செயல்பட்டால்,அரசியல்வாதிகளின் தலையீடின்றி நடைபெற்றால் அரசே புத்தகக் கண்காட்சிகளை நடத்தலாம்.உண்மையான பலன்கள் உண்டாகும்.
      கபாலி படம் வெளியாகும் காலகட்டத்தில் இணையம் பக்கமே செல்லாமலிருப்பதே என்னாலான தப்பித்தல்.ஹாஹாஹா,..

தினமணி-கவிதைமணி

தினமணி -கவிதைமணி

10 June 2016 02:26 PM

இ-பேப்பர்

முகப்பு கவிதைமணி

ஒரு கவிதையின் டைரி: -மோனிகா மாறன்

By dn

First Published : 05 June 2016 05:54 PM IST

1

உருளும் சிறு விழியில்
ஒளிரும் குழல் பிசிறில்
சுழிக்கும் சிறு இதழில்
வெண்சங்காய் மடியும்
தொடைச்சதையில்
சிவந்த பாதத்தில்
மறைந்திருக்கும்
மழலை  முதல்வரியாக

சிறு தண்டை ஒலிக்க
சிறு உடை அசைய
கைவளைகள் ஒலிக்க
நடக்கும்
அவள் நடை  சந்தமாக

நடுவகிடெடுத்து
விரித்துவிட்ட கூந்தலும்
நெற்றியில் சிறு சந்தனத் தீற்றலுமாய்
வெள்ளிக்கிழமைகளில்
ஆகாய வண்ணப்
பட்டுப்பாவாடையில்
சிற்றாடை சிதற
திரும்பிப்பார்த்தவாறு
சிரிக்கும் அவள் பார்வை  எதுகையாக
   
அழும் மகவை 
இடுப்பில் அணைத்து
பேருந்து நெரிசலில்
வியர்வை வழிய 
நிற்கையில் உணரும்
யதார்த்தத்தில்  மோனையாக

கருவளையம் விழுந்து
வரிவரியாய் தோல்வறண்டு
பிரபஞ்சவெளியில்
மரணத்தின் சாயலை
உணர்கையில்
முடிகிறது
இக்கவிதையின் டைரி…..
புரட்டிப்பார்க்கும்
காற்றும் உணர்கிறது

அவள் வாழ்வின் கற்பனையை..

புத்தகக்கண்காட்சி

     

image

பல ஆண்டுகளாகச் சென்றாலும் புத்தகக் கண்காட்சி என்ற அறிவிப்பு வந்ததுமே திட்டமிட்டுவிடுவேன்.அத்தனை புத்தகங்களைக் காண்கையில் இன்னமும் வாசிப்பும் புத்தகங்களும் முக்கியத்துவம் பெறுவது மகிழ்வாகத் தான் இருக்கிறது.
        இம்முறை உலக இலக்கியங்கள் மட்டுமே என்ற முன் முடிவுடன் சென்றேன்.காரணம் தமிழின் அனைத்து முக்கிய புத்தகங்களும் என் நூலகத்தில்.இனியும் வாங்கினால் வைக்க இடமில்லை.
     ஆனால் எனக்கு ஏமாற்றமே.தால்ஸ்தாய் தஸ்தவேயஸ்கி,காபா என்று அனைத்துப் புத்தகங்களுமே விலை மிக அதிகம்.சலுகை விலைக்குறைப்பும் இல்லை.எல்லாப் புத்தகங்களும் கிடைக்கவுமில்லை.வழக்கமான சமையல்,வெற்றிக்கு வழி,மற்றும் பிரபல எழுத்தாளர்களின் அதே புத்தகங்கள்.என்னைப் போன்று தேடி அலையும் ஆர்வங்கொண்டவர்களுக்கு தேவையான கலக்ஷன் இல்லை என்றே கூறலாம்.
     போரும் வாழ்வும் வாங்கினேன்.இன்னும் ஹெமிங்வே,ஓரன் பாமுக் தஸ்தவேயஸ்கி என்று தேர்ந்தெடுத்து வாங்கினேன்.அதிக நேரம் இருக்க முடியவில்லை.வெயில்.
       திரும்பி வருகையில் தீவுத்திடல் மீதி பழைய மரப்பாலத்தில் கூவம் கால்வாயின் மீது நடக்கையில் ஐயையோ நம் வெயிட் தாங்குமா என்று சிரித்தவாறே வந்தோம்.ஆனால் நாங்கள் கடந்த பன்னிரண்டு மணி நேரத்தில் தனியார் நிறுவன மாரத்தான் ஓட்டத்தில் அப்பாலம் இடிந்து கூவத்தில் விழுந்திருக்கறது.இது எச்சரிக்கையா….  அன்றே விழுந்திருந்தால் என்ன ஆகியிருப்போம் …என்ன ஆகிவிடப் போகிறது இதை எழுதியிருக்க முடியாது..காலையில் அவசரமாக பள்ளிக்குச் செல்லத்தேவையில்லை..இலக்கியமில்லை …கடமைகள் இல்லை.,ஜாலியாகத்தான் இருந்திருக்கும்..

வேர்களைத்தேடி..

மூன்று நாளாய் போஸ்டரில் ரசித்து,
விறகெடுத்து தண்ணீர் சுமந்து அம்மாவிடம் காசுசேர்த்து ஐந்துமணிக்கே சாப்பிடுகையில்  ‘விநாயகேன பாடல் காற்றில் பரவ மனம் படபடக்கும்….
எங்களூர் டெண்ட் கொட்டகையில் டிக்கெட்டிற்கு பொந்தில் கைநுழைத்து 
மூங்கில் தட்டி வரிசையில் நின்று
மண்குவித்து அமர்ந்து
வெற்றிலையும் பீடிப்புகையும் சூழ
கொஞ்சம் கொஞ்சமாய் குண்டு பல்பு வெளிச்சம் குறைய ‘ஏவிஎம் பெருமையுடன் வழங்கும் முந்தானை முடிச்சு’ என்ற எழுத்துகளை பார்க்கும்போது மனதில் தோன்றிய பரவசத்தை எப்படி கூறுவேன்?  ஹோம் தியேட்டரில் ‘அவதார்’பார்க்கும் என் சின்ன ஓவியாவிற்கு,