கபாலி -லப்பம்

    

image

எழுத்து வாசிப்பு இலக்கியம் பின் முன் நவீனத்துவம் தால்ஸ்தோய்,மௌனி என்றிருக்கும் என் மன உலகு சில வேளைகளில் சலிப்புற்று வெளியேறும்.அவ்வேளைகளில் நான் பார்க்கும் பாடல்களையும் காமெடிகளையும் சொன்னால் சிரிப்பார்கள்.அது ஒரு மனநிலை.அவ்வளவு தான்.
       அப்படிப்பட்ட வேளைகளில் சமூக வலைதளங்களில் இணையப்பக்கங்களில் என்ன நடக்கிறது என்று பார்ப்பதுண்டு.அப்படித்தான் கபாலி திரைப்படத்தின் நெருப்புடா என்ற பாடலின் ஒரு வரி லீக் ஆகிய(!) அறிய தகவலைப் பார்த்தேன்.அப்பப்பா என்ன சிலாகிப்பு.அந்த ஒரு வரிப் பாடலை வைத்து லட்சம் வார்த்தைகள்.காபலி என்ற பெயர் அறிவிக்கப்பட்டதிலிருந்தே திட்டமிட்டு  செய்யப்படும் ப்ரமோ இது.இப்பொழுது அனைத்து திரைப்படங்களுக்குமே இப்படித்தான்.ரஜினிகாந்த் என்றால் செலவில்லா விளம்பரம்.
       மிக்க அறிவாளிகள்,உலகப்படங்கள் தெரியும் என்ற அளவில் பேசுபவர்களும் தலைவர்டா  என்று புளகாங்கிதமடைவது உச்சகட்ட நகைச்சுவை.
         எங்களூரில் அந்த நாட்களில் மர ஆச்சாரி கட்டில் நாற்காலி எல்லாம் மரக்கட்டைகளை இழைத்துச் செய்வதைப் பார்த்திருக்கிறேன்.அப்பவெல்லாம் மெஷின் பயன்பாடு குறைவு.ஆச்சாரிகள் கட்டைகளை இழைத்து கொஞ்சங்கொஞ்சமாய்  மெருகேற்றுவார்கள்.பார்ப்பதற்கு அருமையான பொழுது போக்கு.இரண்டு பேர் ஆளுக்கொரு பக்கம் நின்று இழைப்பதே  நாட்டியம் மாதிரி இருக்கும்.அப்போது விழும் மரச் செதில்களைப் பொறுக்க காத்திருப்போம் .சுருள் சுருளாய் அழகாக இருக்கும்.அடுப்பு பற்றவைக்க உதவும்.இழைத்த மரக்கட்டைகளில் அழகான வரிகள் இருக்கும்.மரங்களின் வாழ்வு வளையங்கள்.சில இடங்களில் சமமாக இல்லாமல் மேடு பள்ளங்கள்,சொத்தை என்று குறைபாடுகள் இருக்கும்.அதைச் சரி செய்ய லப்பம் என்று சொல்லும் ஒரு பூச்சினை ஆச்சாரிகள் தடவுவார்கள்.மைதாமாவு பிசைந்த பதத்தில் இருக்கும்.கட்டைகளில் அதைப் பூசினால் குறைகள் சரியாகிவிடும்.
     எனக்கு கபாலி ரஜினிகாந்தைப் பார்த்தால் அந்த ஞாபகம் தான் வருகிறது.  பாவம் அறுபத்தைந்து வயதில் முகமெல்லாம் சுருங்கிய ரஜினிகாந்தை லப்பம் தடவி இருபத்தைந்து வருடத்திற்கு முன்னிருந்த மாதிரியே திரும்ப வந்திருக்கிறார் என்று  அவரது ஆழ்மனதில் நம்ப வைத்திருக்கிறார்கள்.தள்ளாத வயதில் பதினான்கு வயது குமரிகளுடன் எம்ஜிஆர் ஆடியதை விட இது கொடுமையாக இருக்கு.முன்னணிக் கதாநாயகர்கள் தங்கள் வயதிற்கு ஓரளவேணும் பொருந்துமாறு நடிக்க வேண்டும்.
     இதில் ரஞ்சித் இயக்குகிறார் என்பதால் குறியீடுகள் வேறு.ஒடுக்கப்பட்ட  மக்களின் வாழ்க்கை என்ற பெயரில் இவர்கள் செய்யும் அரசியல் என்றால் அடிக்க வருவார்கள்.அட்டகத்தி,மெட்ராஸ் இவற்றில் ரஞ்சித் காண்பித்த தலித் அரசியல் உண்மையில் ரீச் ஆகியதா.கதையில் எங்கோ ஓரிடத்தில் ,வசனத்தில் நுழைத்துவிட்டு குறியீடுகள் என்பதெல்லாம் என்ன மாதிரியான தந்திரம்.சிறந்த திரைக்கதை,காட்சியமைப்பு,இயக்கம் என்பதில் ரஞ்சித் திறமையான இயக்குநரே.ஆனால் தலித் குறியீடு என்பதெல்லாம் ஓவர்.
    கபாலியும் அப்படிப்பட்ட படமாகவே இருக்கும்.படம் வெளிவந்தவுடன் சாமானியர் முதல் அறிவுஜீவி எழுத்தாளர் வரை,இணையப் பக்கங்கள் தொடங்கி,இலக்கிய வணிக இதழ்கள் வரைக் குறியீட்டு விமர்சனங்கள் எழுதிக் குவிக்கப் போகிறார்கள்.இதைத்தான் அவர்கள் எதிர்பார்ப்பது.
       எனக்கு ஆச்சரியம் என்னவென்றால் தமிழ் சமூகத்தில் படித்தவர்கள் இளைஞர்கள் எல்லோரும் இப்படி சினிமா மோகத்தில் இருப்பது தான்.இவ்வளவு ரசனையற்றதா தமிழ் கூறும் நல்லுலகு.டிவி,சினிமாவைத் தவிர்த்து வேறு பொழுதுபோக்குகள் இருப்பது தெரியாத இரண்டு தலைமுறைகள் உருவாகிவிட்டன.ஏன் இவர்களுக்கு எழுத்தாளர்கள,படைப்பாளிகள் பற்றியெல்லாம் தெரியவில்லை.நம் கல்வி முறையே இலக்கியத்தை ஒதுக்கிவிட்டது.கதைப் புத்தகங்கள் என்ற மட்டமான பெயரை உண்டாக்கியது யார்?
       திரைப்படங்கள் பற்றி ஆர்வங்கள் இருக்கலாம்.ஆனால் அதைத்தவிர வேறு எதுவுமில்லை என்பது எத்தகைய மனநிலை.முப்பதாண்டுகளுக்கு முன் கல்வியறிவு குறைவு,பொருளாதார  வசதிகள் குறைவு,உலகைப் பற்றிய அறிதல்கள்,எக்ஸ்போஷர் குறைவு.அதானால் சினிமா மட்டுமே தெரிந்திருந்தது. ஆனால் இன்றைய பொருளாதார ,தொழில் நுட்ப முன்னேற்றத்திலும் ,நவீன பேஸ்புக்கும் ட்விட்டரும் இணையமும் சினிமா விவாதங்களுக்குமே,சினிமா கதாநாயகர்களுக்கே முக்கியத்துவம் அளிக்கின்றன எனில் அது நம் சமூகத்தின் சீழ்பிடித்த நோய்க்கூற்றின் வெளிப்பாடே.கபாலியை இப்படி போற்றுவது எல்லாரின் ரசனையும் என்னைப் போன்றதே என எண்ணவைக்கும் சாமானிய,நடுத்தரவர்க்க உளவியலே.அதிகபட்ச அறிவே  இதுதான் என நம்பும் குறுகிய மன நோய்.
   படைப்பாளிகள்,அறிவு ஜீவிகள் பற்றிய தவறான புரிதல்கள்,மற்றும் சிலரின் தவறான முன்னுதாரணங்களே நம் சமூகக் கும்பல் மனநிலையின் தரமற்ற ரசனையின் வெளிப்பாடு.அரசியல் இலக்கியம் எல்லாம் ஒன்றாகக் கலந்து கீழ்த்தரமான ரசனையை உருவாக்கிவிட்டது.திராவிட அரசியலின் போலி மொழிப்பற்று,மாநாடுகள்  அடிவருடிகள்  உண்டாக்கிய தவறான விழுமியங்கள்,நடைமுறைகள் மக்களை இலக்கியம் தமிழ் எழுத்து என்பதெல்லாம் கெட்ட வார்த்தைகள் என்ற மனநிலைக்குத் தள்ளிவிட்டன.
     இணையவெளியின் கட்டற்ற இக்காலகட்டத்திலாவது தரமான இலக்கியம் வாழ்வை எப்படி சீராக்கும்,உண்மையான அறம்,சிந்தனைகள் ,எளிமையின் உண்மையான பண்புகள் பற்றியெல்லாம் அறிய வைக்கும் என்பதை சரியாக இளைஞர்களிடம் சேர்ப்பது இலக்கியவாதிகளின் கடமை மட்டுமன்று,அனைவரின் பொறுப்பு.
    புத்தகக் கண்காட்சி பற்றிய பதிப்பாளர்களின்  பேட்டிகள் கண்ணீரை வரவழைப்பவை.அரசின் கோடிக்கணக்கான நிதியைப் பெறும் நூலகத்துறையும்,செம்மொழி த் துறையும் சரியாக செயல்பட்டால்,அரசியல்வாதிகளின் தலையீடின்றி நடைபெற்றால் அரசே புத்தகக் கண்காட்சிகளை நடத்தலாம்.உண்மையான பலன்கள் உண்டாகும்.
      கபாலி படம் வெளியாகும் காலகட்டத்தில் இணையம் பக்கமே செல்லாமலிருப்பதே என்னாலான தப்பித்தல்.ஹாஹாஹா,..

Advertisements

One thought on “கபாலி -லப்பம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s