திருப்பாவை பாசுரம் -2உடல் வருத்தும் உன்னதம்

2. வையத்து வாழ்வீர்காள்!

வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம்பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத் துயின்ற பரமனடி பாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம்முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமா றெண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.
     

          ஆண்டாளின்


 தமிழ் புலமை அவர் வளர்ப்புத் தந்தையான பெரியாழ்வாரிடமிருந்து பெற்றது.திருவில்லிப்புத்தூர் வடபத்ரசாயி எனும் பரந்தாமனுக்கு மாலை கட்டி வணங்கிய பெரியாழ்வாரின் வளர்ப்பு மகளான ஆண்டாளின் இறை பக்தி காதல் அனைவரும் அறிந்ததே.ஆண்டாளின் மொழி நம்மை இழுத்து அவள் உலகிற்குள் கட்டிப் போடும்.மார்கழி மாத பாவை நோன்பின் சில முறைகள் இப்பாடலில் கூறப்படுகின்றன.தம்மை வருத்தி இறைவனை எண்ணி தோன்பிருப்பது எல்லா இனங்களிலும்,வழிபாடுகளிலும் உண்டு.

   பாற்கடலில் துயிலும் பரமனின் அடி பணிந்து அதிகாலையில் நீராடுவோம் என்கிறாள்.மார்கழி மாதக்குளிரில் அதிகாலையில் நீராடுவது இறைவனின் அருளைப் பெற,அவன் அன்பைப்பெற.நெய்,பால் எல்லாவற்றையும் தவிர்க்கிறாள்.கண்களுக்கு அஞ்சனம் தீட்டாமல்,கூந்தலில் மலர்கள் சூடாமல் தோன்பினை பின்பற்ற வேண்டுகிறாள்.

        எந்த செயலுக்கும் இத்தகைய அர்ப்பணிப்பு,தன்னை வருத்தி முழுமையாக ஈடுபடல் என்பது மிகச்சிறந்த முறையாகும்.இன்றைய நவீன வாழ்வு முறையில் எதற்காகவும் காத்திருக்கவோ,தம்மை வருத்திக்கொள்ளவோ எவருக்கும் விருப்பமில்ல.

      ஆண்டாள் கூறும் உடலை ஒடுக்கும்,மனதை கட்டுப்படுத்தும் நோன்பு முறையானது சங்க காலம் முதலே நம் மரபில் உருவாகி வந்ததே.புற நானூறு,குறுந்தொகைப் பாடல்களில் பாவை நோன்புகள் கூறப்படுகின்றன.

    எனில் எதற்காக இவ்வருத்துதல்கள்.நான் சிறுவயதில் எங்கள் ஊரில் ஐயப்பனுக்கு மாலை போட்டவர்கள் அதிகாலையில் நீராடுவதைப் பார்த்திருக்கிறேன்.எங்கள் ஜவ்வாது மலையின் கடுங்குளிர்  டிசம்பர் மாதத்தில் வெந்நீரில் கைவைக்கவே யோசிக்க எண்ணுகையில் சாதாரணமாக நான்கு மணி  காலையில் நீராடுபவர்கள் எனக்கு மாபெரும் ஆச்சர்யமாகவே இருந்தனர்.இரவுகளின் குளிர் தரையையும் கூரைகளையும் துளைத்து நம்மை நடுங்க வைக்கும்.அக்குளிரில் தரையில் வெறும் பாயில் உறங்கும் பக்தர்களின் மனம் எத்தனை வலு கொண்டது.அவையெல்லாம் உண்மையில் பழமை என்று கூறப்பட்டாலும் ,மிகச்சிறந்த உளவியல் முறைகள்.

      ஆண்டாள் கூறும் பாவை நோன்புகளின் உள்ளுறை மனதையும்,உடலையும் வருத்தி நம் கட்டுக்குள் கொண்டு வந்து இறைவனை நினைப்பது தான்.இத்தகைய நோன்புகளையும்,விரதங்களையும் பின்பற்றியவர்களுக்குத் தெரியும் அதன் அருமை.இவை நம் உடலையும்,மனதையும் தெளிவாக்கி  வலுவூட்டுகின்றன.

     நம் இன்றைய வாழ்வு முறையில் எந்தக்கட்டுகளும் இல்லை.அதனாலேயே இளவயதிலேயே பல உடல், மன நோய்கள்.நம் முன்னோர்களின் முறையான வாழ்வு நெறிகள் நிதானமானவை.அவசரத்தில் ஓடி,அவசரமாய் வாழ்வை முடிக்கும் இன்றைய ஸ்மார்ட்போன் தலைமுறை கட்டாயம் பின்பற்ற வேண்டியன.

   ஆண்டாளின்    பாசுரங்கள்   அவளின் அழகிய     மொழி வளத்தையும்,எளிய சங்கத்தமிழையும் ஒருஙெகே கொண்டது.இயற்கையை வாழ்வுடன் இணைத்த வாழ்வு முறையின் மிகச்சிறந்த பாடல்கள் ஆண்டாளின் பாசுரங்கள்.

  மையிட்டெழுதோம்,மலரிட்டு நாம் முடியோம்.நெய்யுண்ணோம் பாலுண்ணோம் என தளை தட்டாத வரிகளின் எளிய அழகியலே ஆண்டாளின் சிறப்பு.அழகுபடுத்துதல் பெண்ணின் இயல்பு.அவற்றை செய்யாமல் இருக்கிறோம் என்கிறாள்.நாம்  விரும்பும் ஒன்றினை செய்யாமலிருக்கும் மனக்கட்டுப்பாடே இதன் அடிப்படை.உடலை வருத்தி இறைவனை அடையும் ஆண்டாளின் நோன்பு எக்காலத்திற்கும் ஏற்றது.

                                                                                    


Advertisements