புத்தகம்-1 ஜெயகாந்தனின் ‘அப்புவுக்கு அப்பா சொன்ன கதைகள்’

ஜெயகாந்தனின் தொடர் நாவல்களில் ஒன்று.ஆலிவர் ட்விஸ்ட் போன்ற ஐரோப்பிய மரபுகளுக்கு எதிராக குழந்தைகளின் குதூகல உழைப்பினைப் பற்றிய இந்திய மரபின் நோக்கில் எழுதப்பட்ட மிக முக்கிய குறு நாவல் இது எனலாம்.

       அப்பு விவரமான குழந்தை.அவனுக்கு எல்லாம் தெரியும் என்றே ஜெயகாந்தன் இக்கதையினைத் தொடங்குகிறார்.ஒரு விதத்தில் இதுவே இக்கதையின் மையம் எனலாம்.ஆம் குழந்தைகள் என்பவர்கள் நம் சினிமாக்களில் ,காட்சி ஊடகத் தொடர்களில்,விளம்பரங்களில் வருபவர்கள் போன்று கற்றுக் கொள்பவர்கள் அல்லர்.அவர்கள் அறிந்தவர்கள்.நுண்ணுணர்வு கொண்ட அனைவரும் இதை உணர்ந்தே இருப்பர்.என் இளமைக்காலங்களில் நான் பிற குழந்தைகளை விட அறிந்தே இருந்திருந்தேன்.ஆகவே அப்புவைப் பற்றி அறிய இவ்வுணர்வு அவசியமாகிறது.

      அப்பு வாழ்ந்து கெட்ட ஒரு பெரிய குடும்பத்தின் கடைசி வாரிசு.அவன் பள்ளிக்கு ஒழுங்காகச் செல்லாமல் கிராமத்தில் திரிபவன்.தான் செய்யாத ஒரு தவறின் பழியிலிருந்து தப்ப அம்மாவின் ஆசியுடன் மதராஸப்பட்டிணம் என்னும் சென்னைக்கு தன் தந்தைத் தேடிச் செல்கிறான்.இந்தியா விடுதலை பெறுவதற்கு அண்மையான காலத்தில் நடக்கும் இக்கதையில் அக்கால ரயில் பெட்டிகள்,பட்டிண வாழ்வு என்று அனைத்தும் வருகின்றன.பட்டிணத்தில் தன் தந்தைக்கு மற்றொரு குடும்பம் இருப்பதையும் தந்தையின் பெருந்தன்மையையும் அறிகிறான்.

    இந்த நேரத்தில் இவள்,பாட்டிமார்களும்,பேத்திமார்களும் என்னும் கதைகளின் தொடர்ச்சியே இக்கதை.இருந்தாலும் இது தனியாக ஒரு நாவலாகவும் உள்ளது.

     அப்புவுக்கும் அவனுக்கு கிடைக்கும் ரயில்ஸ்நேகிதனான பழக்கடைக்காரரருக்குமான உறவு,அப்பு சென்று அவன் பழக்கடையில் வேலை செய்வது எல்லாம் மிக இயல்பாகவே அவன் குணத்தை அறிய வைக்கின்றன.ஒரு சிறுவனின் பார்வையில் ஏறத்தாழ அறுபதாண்டுகளுக்கு முந்தைய மெட்ராஸ் நகரத்தை நமக்கு காண்பிக்கிறார் ஜேகே.எழும்பூர் ரயில் நிலையமும்,டிராம் வண்டிகளும் அப்புவுக்கு அளிக்கும் குதூகலத்தை நமக்கும் அளிக்கின்றன.

    மிகப்பெரிய ஜமீன் போன்று வாழ்ந்த அப்புவின் தந்தை சிங்பிகாரம் பிள்ளை பட்டிணத்தில் ஒரு எளிய இரவு தேரக் காவலாளியாக இருப்பது நம் இந்திய தேசத்தின் அக்காலகட்டத்தின் வெளிப்பாடாகவும் உள்ளது.

  ” நாடாண்ட மன்னரெல்லாம் ,”..என்பது போன்று முந்தைய நாவல்களில் சிலுக்கு சிங்காரம் என்று மைனராக வலம் வந்த சிங்காரம் பிள்ளை நலிவுற்று நோயாளியாக இந்நாவலில் வருகிறார்.

    நம் இந்திய தேசத்தின் பழம்பெருமைகளெல்லாம் மறைந்து பட்டினியிலும் பஞ்சத்திலும் ஐரோப்பியருக்கு அடிமையாய் மாறிய அவலந்தான் இந்நாவலின் இழை என்றே நான் எண்ணினேன்.எந்நிலையிலும் நேர்மை கொண்ட சிங்காரம் பிள்ளைதான் நம் இந்திய தேசத்தின் ஆன்மா.ஏழ்மை  நிலையிலும் அவர் தன் உயரிய பண்புகளை இழக்காமல் மகனுக்கும் அதனை கடத்துகிறார்.ஜெயகாந்தனின் படைப்புகளில் ஓங்கி ஒலிக்கும் அவரது பிரச்சாரம் இந்நூலிலும் ஒலிக்கிறது.பள்ளிகள் குழந்தைகளை எப்படி கசக்கிப்பிழிகின்றன,அவை எப்படி தனி மனித சுதந்திரத்தை அழிக்கின்றன என கூறுகிறார்.இவை இன்றைய காலத்தில் மிக அவசியமானவை என்றே கருதுகிறேன்.

          பணமும் வசதிகளும் சமூகத்தின் போலி மரியாதைகளுமே வாழ்வு என்று கற்பிக்கப்படும் இன்றைய தலைமுறையில் ஜெயகாந்தனைப் போன்று ஆன்மாவின் குரலை உரத்து கூறிய வலுவான எழுத்துகளே என்னைப்போன்றவர்களின் பற்று எனலாம்.இலட்சியங்களும் உண்மையும் மனசாட்சியின் குரலும் வாழ்வின் ஆதாரம் என்று கற்பித்த மகாத்துமாவின் குரலாகவே இங்கு ஜெயகாந்தன் பேசுகிறார்.

      தன் குடும்பத்தின் பரம்பரை சொத்துகள் எதுவும் தன் மகனுக்கு வேண்டாம் என்று வலுவாக மறுக்க சிங்காரத்தினால்  முடிகிறது.இவையெல்லாம் அழிந்துவிட்ட கடந்த கால நீதி என்று விட்டு விடாமல் நடைமுறையில் பின்பற்ற முடியும் என்பது இதன் அடிநாதம்.

      அப்பு கட்டிடம் கட்டும் தொழிலாளர்களுடன் இணைந்து வேலை செய்வது,அவனுக்கு கிடைக்கும் நண்பன் மாணிக்கம் என்று மிக சுவாரசியமான கதை நடை.மாணிக்கத்தை தன் கிராமத்திற்கு அப்பு கூட்டி வந்து தன் ஊரையும்,உறவினர்களையும் காண்பிக்கும் காட்சிகள் மிக அழகானவை.அப்புவின் அம்மா அம்மாக்கண்ணு,அத்தை காந்திமதி,அக்கரையிலிருக்கும் மீன்கார வெள்ளையம்மாள் எல்லோரும் இதன் முந்தைய நாவலின் தொடர்ச்சியாக வருகிறார்கள்.அவை இன்னும் நன்றாக இருக்கின்றன.அக்கரை மீனவக்குப்பத்தின் அம்மிணியம்மாவைத் தன் தந்தை இரண்டாவது திருமணம் செய்திருப்பதை அப்பு  உணர்ந்து ஏற்பது,மாணிக்கம் அதனை இடித்தரைக்கையில் அது நான் சம்மந்தமில்லாதது,அவர்கள் சொந்த விருப்பம் என்று அப்பு கூறுவது அவன் சிறுவனில்லை என்பதற்கு ஆதாரம்.

    விளக்குச்சாமி,வைத்தி என்று அனைத்து கதாபாத்திரங்களும் நம்முடன் உரையாடுகின்றனர்.

     சில இடங்கள் நடக்க இயலா சாத்தியங்களாகத் தோன்றினாலும் ஜெயகாந்தனின் எழுத்து நம்மை இழுத்துக் கொள்கிறது எனலாம்.

      தனிமனித சுதந்திரம் பற்றி எப்பொழுதும் வலியுறுத்தும் ஜெயகாந்தன் இங்கும் அதனைக் குழந்தைகளின் குரலாகப் பேசுகிறார்.எனினும் அனைத்துக் குழந்தைகளும் அப்புவல்ல உயரிய பண்பு கொள்வதற்கு.சமூகத்தின் கண்டிப்புகளுக்கு கட்டுப்படாமல் வளரும் குழந்தைகள் குற்றவாளிகளாக மாறுவதையும் நாம் கண்டவாறே இருக்கிறோம்.அந்நிலையில் குழந்தைகள் குறிப்பிட்ட வயது வரையிலாவது கல்வியறிவினைப் பெறுவது அவசியம் என்றே நான் கருதுகிறேன்.கல்விக் கூடங்களின் நடைமுறைகள் மாற்றப்படல் வேண்டும்.அதற்காக பள்ளிகள் முழுமையாக புறக்கணிக்கப்படலாகாது.

    எப்படியாயினும் உண்மையான படைப்பு.

   ‘கஷ்டப்படுவோமே! முடிஞ்சவரைக்கும் கஷ்டப்பட்டால் தான் பின்னால் சுகம் ஏற்படும்.”

“மகற்கு தாயார்

மணாளரோடு ஆடிய

சுகத்தைச் சொல்லெனில் 

சொல்லு மாறெங்ஙனே?

போன்ற பல வரிகள் எனை வசீகரித்தவை.

          

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s