புத்தகம்-2   விஷ்ணுபுரம்..தேடல் வெளி ..ஜெயமோகன்.

    மனவெளியின் அத்தனை நுட்பங்களையும் அடைய வழிவகுக்கும் தமிழின் முக்கிய படைப்பான விஷ்ணுபுரம் அற்புதமான உலகம்.

      நுழைந்து விட்டால் அவ்வுலகிலிருந்து வெளிவர மனமிருக்காது.இதனை வாசித்த காலம் முதல் இதைப்பற்றி நான் எழுதாமலேயே இருந்தேன்.

    விஷ்ணுபுரம் மட்டுமே இத்தனை ஆண்டுகள் பேசாமலே என் மனதிலேயே இருந்தது.அதற்குரிய இடம் அமைய காலம் கனிந்ததாகவே எண்ணுகிறேன்.நான் எழுதுவது மிகக் குறைவானதே.அதிகம் வாசிப்பேன்.

  விஷ்ணுபுரம் பற்றிய இணையத் தகவல்கள்,குழு விவாதங்கள் எதையும் அறியாமல்தான் தான்வாசித்தேன்.அது என்னுள் இயல்பாகவே நுழைந்து விட்டது.என்  வாசிப்பனுபவம்காரணமாக இருக்கலாம்.

  

” ,என் அலைகள் பூரணமாய் அடங்கிவிட்டிருந்தன.மனம் வெட்ட வெளியாக இருந்தது”இவ்வெளிப்பாட்டை மாபெரும் விஷ்ணு ஆலயத்தின் மூலம் அறிய வைக்கிறது.திருவடியின் தேடல்களில் தொடங்குகிறது..ஆலயத்தின் ஒவ்வொரு பகுதியும் நம்மை இழுத்துக்கொள்கின்றன.ஜெயமோகனின் எழுத்து வன்மை பற்றி புதிதாக கூற வேண்டியதில்லை.எனினும் ஒவ்வொரு கல்லையும் ,சிலையையும் நுட்பமாய் அறியச்செய்கிறது என்பதை சொல்லியே ஆகவேண்டும்.

       என் தேடல்கள்,வினாக்கள் பித்து கொண்ட மனநிலை கொந்தளிப்பு எதுவுமற்ற தனிமை எல்லாம் அறிந்த ஏகாந்தம் எதுவுமறியா பரப்பிரம்மம் என்று எல்லாவற்றையும் உணரவைத்தது விஷ்ணுபுரம் 

    .அத்தனை உளத்தேடல்கள் இருந்தால் மட்டுமே இத்தகைய ஓர் காவியம் சாத்தியம்.இறைவனின் பாதத்தை தரிசிப்பதும் பாதபூஅஜையும் உணர்த்துவது எதனை?

   பள்ளிகொண்ட பரமனை காலங்காலமாய் தரிசித்து நிற்கும் வெளி எது?

     தொழுநோயாளியின் பாதங்களை உணரும் கணம் எது?புனிதங்கள் எல்லாம் அறுவறுபெபடையும் கணம் எது?எல்லாவற்றிற்கும் விடை தான் விஷ்ணுபுரம்.

  இந்நூலிற்கு எழுதப்பட்ட விமர்சனங்களே பல ஆயிரம் பக்கங்கள் இருக்கலாம்.நான் உணர்வதை மட்டுமே இங்கு எழுதுகிறேன்.இம்மாபெரும் ஆலயம்,,அதன் ஒவ்வொரு பகுதியும் என்னுள் நிலைத்துவிட்டன என்றே உணர்கிறேன். .

     இச்செவ்வியல் படைப்பின் கதையையும் சுருக்கத்தையும்  ஏற்கனேவே பலர் பதிவிட்டிருக்கலாம்.என்வாசிப்பில் உடன் வந்தவற்றை மட்டுமே சுட்ட விரும்புகிறேன்.

  சித்திரையும் ,லலிதாங்கியும்,பத்மாட்சியும்,ஷங்கர்ஷணனும்,லட்சுமியும்,தாத்தாவும் சூர்யதத்தரும் என ஒவ்வொரு நிலையிலும் நம்மை அழைத்துச் செல்கின்றனர்.காலபிரக்ஞையின்றியே நான் இப்படைப்பினை அறிகிறேன்.எது முதல் எது நடுவில் எது இறுதி என்பதெல்லாம் நம் வசதிக்கு பிரிப்பவையே.உண்மையில் அனைத்தும் ஒன்றே..இந்நாவலில் நடக்கும் அனைத்தும் ஏற்கனவே விஷ்ணுபுரத்தில் நடந்தவை என்று வருகிறது.ஆம் அனைத்தும்  இவ்வுலகில் நடந்தவை தான்.எனில் நாம் ஒவ்வொருவரும் தேடுவது மீண்டும் மீண்டும் அதைத்தானா என்பதே இதன் சாரம்.

    அஜிதர் ஞானசபையில் விவாதிக்கும் பகுதியை எத்தனை முறை வாசித்தேன் என்று தெரியவில்லை.

  உங்கள் உள்ளங்கள் ஒன்றாகட்டும்.

அனைத்துமாகி நிற்கும் இந்த ஒன்று எது?

இப்படி எத்தனையோ வரிகளில் நிலைத்து நின்றேன்.

   தத்துவ விசாரங்கள் வரும் பகுதிகளை வாசிக்கும்போது   ஒரு நிறைவும் வெறுமையும் ,கலந்த  மனநிலை இருந்தது

.எத்தனை எத்தனை உட்கூறுகள்?இத்தேசத்தின் இந்த ஆழ்ந்த அறிவும் ஞானத்தேடலும் எங்கே?எந்நிலையில் இவ்வுயர்வு நிலைகுலைந்து தாழ்வுற்றது? என்ற எண்ணம் எழுந்தவாறே இருந்தது.எங்கே நாம் விலகிச் சென்றோம்?இவையெல்லாம் விடையற்றவை என்பதையும் அறியவைப்பதே இதன் சிறப்பு.

      எந்த ஒரு படைப்பையும் இதனை முன்னரே வாசிக்கவில்லையே என்று எண்ணவைப்பதே அதன் வெற்றி என்று யாரோ எழுதியதாக நினைவு,ஜெமோ எழுதியதாகவே இருக்கலாம்.அப்படி என்னை உணரவைத்ததது விஷ்ணுபுரம் .

     இதிலுள்ள அத்தனை வினாக்களும் அனைவரும் கொள்வதே.இத்தகைய ஞானமும் தர்க்கங்களும் நம் தேசத்தின் அடையாளமாக இருந்த காலகட்டம்  எப்படி மறைந்தது?எங்கே நாம் தவறினோம் என்ற எண்ணம் உருவாகாமல் இல்லை.அதற்கான விடையையும் அதிலேயே பெற்றேன்.எல்லாவற்றிற்கும் அழிவும் உண்டு.அவை மீண்டும் வேறொரு வடிவில் பிறக்கும்.

    இந்நாவலில் வரும்அனைவரும் பெண்கள் உட்பட தேடல்கள் மிகுந்தவர்களாகவே உள்ளனர்.இத்தனை கூர்மையானவர்கள் யதார்த்த உலகில் இருப்பார்களா என்றும் தோன்றாமலில்லை.இவ்வுலகில் இல்லாதது எது?ஆம் நாம் தேடுவதையேக் கண்டடைகிறோம்.

  “ஓடையருகே நின்ற புங்க மரத்தில் தளிர் இலைகள் நிரம்பியிருந்தன.காற்றில் அது சலசலத்தது.அதில் பறவைகளின்கூட்டமான துயில் கலையும் ஒலி கேட்டுக்கொண்டிருந்தது.தூரத்து இலவ மரத்தில் கொத்துக்கொத்தாகக் காய்கள் தெரிந்தன.சற்று வான் ஒளி அதிகரித்த போது ,அவை குருவிகள் என்று தெரிந்தது.அவை எழுந்தும் பறந்தும் கூவியபடி திரும்ப வந்து அமர்ந்தும் புலரியைக் கொண்டாடிக் கொண்டிருந்தன.குளிர்ந்த காற்று தூய்மையான  தளிர் மணத்துடன் இருந்தது.இத்தனைக்குப் பிறகும் உலகம் இப்படி முழுமையுடனும் தூய்மையுடனும் இயங்குவது அதிசயமாகப் பட்டது.”

    இது ஷங்கர்ஷணன் தன் மகன் அனிருத்தனை இழந்த பின் கொள்ளும் நிலை.எத்தனை ஆழமான கருத்து, அழகான நடை.என் மனதில் இருந்த எத்தனையோ குழப்பங்களில் இத்தகைய வரிகள் உடன் வந்ததுண்டு. நெருக்கமானவர்களின் மரணம்,ஏன் சில துரோகங்கள் கூட இத்தகைய மனநிலைக்கு நம்மை அழைத்துச் செல்லும்.ஆசிரியரின் இத்தகைய புரிதல்கள் எனக்கு இணக்கமான வாசிப்பனுபவத்தைத் தந்தவை.நான் எத்தனை துயரம் கொள்கிறேன்,உலகம் எத்தனை அமைதியாக அழகாக இருக்கிறது என்ற பித்து மனதில் எழுந்த என் இளமைக்காலங்களை நினைவூட்டும் இப்பகுதி மிக உண்மையானது.

  “அது இங்கும் இல்லை.அது எங்கும் இல்லை.அது எங்குமுள்ளது.அது மேல் கீழற்றது.உள்வெளி அற்றது.அது வடிவமற்றது.அனைத்து வடிவங்களுமானது.அது குணங்களற்றது.அனைத்து குணங்களுமானது.அதை நெருப்பென்போம்.அது நெருப்பு.அதை நீரென்போம்.அது நீர்.அது என்போம்.இது என்போம்.அது இது.இங்கு நாம் விஷ்ணு என்கிறோம்.அது விஷ்ணு.”

  ஞான சபை விவாதத்தில் இவ்வாறு விவரிக்கப்படுவதை உணரும் தருணமே நாம்  நம்முடைய இருப்பினை அறியவைக்கிறது எனலாம்.நாம் எ துவாக உணர்கிறோமே அதுவே நாம்.பிரபஞ்சத்தின் பிரம்மாண்டத்தை மனித மனம் உணர்ந்து தன் இருப்பு எத்தனை எளிதானது,தான் இதில் ஒரு துளி மட்டுமே என்று எண்ணவைக்கும் தருணமே இதன் உச்சம்.இப்படைப்பின் பல பகுதிகளில் அவ்வாறு என்னை உணர்ந்தேன்.இளமையில் இத்தகைய தேடல்கள் கொண்ட நிலையில் அதனைக் கண்டடைவது பெரிய சவாலாகவே இருக்கும்.அதில் வெல்வது  என்பதே வாழ்வின் முழுமை.அதனை நான் அடைந்தது இலக்கியத்தின் மூலமே.நிச்சயம் விஷ்ணுபுரம் அதில் முக்கிய இடம் கொள்கிறது.இப்படைப்பினை சில மாதங்கள் வாசித்தேன்.அக்காலம் முழுவதுமே அதிலேயே இருந்தேன்.இத்தனை உள்ளுணர்வுடன் ஊன்றி நான் வாசித்த நூல்கள் சில மட்டுமே.

    சோனா நதியும் அதன் சிவந்த நீரும் அதன் பாதைகளும்,நதியின் நீரோட்டமும் சுழிகளும்,பெரிய காண்டாமணியான சுவர்ணகாண்டமும் இதன் ஒரு அங்கமாக நாவல் முழுவதும் வருகின்றன. 

      பிராமணர்கள் உணவு உட்கொள்ளும் பகுதி உண்மையில் உணவின் மீதானது மட்டும்தானா?அன்னமும் ,நெய்நும்,பருப்பும்,அப்பமும்,சோற்றுமலைகளுமாய் உணவினைக் காண்கையில் எழும் உணர்வு எது?இத்தனை உணவினை ஒன்றாய்க் காண்கையில்,அதற்கு மானுடர் அடித்துக் கொள்கையில் உண்மையில் அதைப்பற்றிய அனைத்து வியப்புகளும் உனைகின்றன.இது உணவில் மடெடுமன்று காதலில் ,காமத்தில்,தெய்வீகத்தில்,பொருளில்,நகையில்,அழகில் என்று அனைத்து தரப்புகளிலும் இப்படைப்பில் காண்பிக்கப்படுகின்றன.எதன் மீதான உச்சகட்ட அறிதல் வெறுமையை,இவ்வளவு தானா,இதற்குத்தானா என்று உணரவைக்கும் தருணங்கள் இப்பனைப்பின் ஊடாக பிணைந்து வருவதாகவே எண்ணுகிறேன்.
    பள்ளிகொண்ட விஷ்ணுவின் உருவம் உண்மையில் உருவானது எப்படி,அதன் ஆதிவடிவம் என்ன என்பதெல்லாம் எனக்கு விருப்பமான பகுதிகள்.திருவடி கருவறையின் ஒளியில் விஷ்ணுவின் பாதங்களை தரிசிக்கிறான்.விரிந்த விரல்களும்,குவிந்த குதிகாலும்,உட்பக்க வளைவில் சங்கு சக்கரம் கொண்ட அக்காட்சியின் தரிசனம் என்னுள் என்றும் நிலைத்தது.

      இந்நாவலை வாசிப்பதற்கு முன் பலமுறை நான் தரிசித்த ஆலயங்கள் எல்லாம் ,இதனை வாசித்த பின் வேறு அர்த்தங்களை அளித்தன.வேலூர் அருகிலுள்ள பள்ளிகொண்டாவில் உத்திர ரங்கநாதர் ஆலயத்தில் சயன நிலையில் காட்சியளிக்கும் விஷ்ணுவின் காட்சியில் நான் உணர்ந்தது அதைத்தான்.கரிய பெருமானின் திருமேனி ,அவன் பாதங்களின் காட்சியில் கண்டது எதனை?அஜிதரும்,திருவடியும்,பிங்கலனும் தரிசித்த அதே காட்சியைத்தான் என்றே உணர்கிறேன்.

      காவேரிப்பாக்கம் திருப்பாற்கடலில் பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் சந்நிதியிலும் இப்படித்தான் நான் உணர்ந்தேன்.பள்ளிகொண்ட கோலத்திலுள்ள பெருமானின் உருவங்கள் எல்லாம் எனக்களித்த காட்சி விஷ்ணுபுரம் தான் என்பதே இப்படைப்பின் தாக்கமாக தோன்றுகிறது.இப்படைப்பு எந்நாளும் என்னுடன் தொடரும்.

      இறுதிப்பகுதியில் பெரும் வெள்ளத்தில் இந்நகர் மூழ்குகிறது.பிரளயத்தில் அழியும் உலகம் ஏறத்தாழ உலகின் காவியங்கள் அனைத்திலும் உண்டு.இப்படைப்பில் மிகப்பிரம்மாண்டமாய் உருவாகும் நகரும்,ஆலயமும் இறுதியில் சிதிலங்களாய்,இடிந்து,அழிந்திருப்பது மனதை நெருக்கும் பகுதிகள்.

     விஷ்ணுபுரம் வாசித்த பின் ஏற்படும் வெறுமை ,இத்தனை நாட்கள் உடன் வந்த நதியும்,கதைகளும்,பாதமும் எங்கே என்ற எண்ணமும் என்னில் இருந்துகொண்டே இருந்தது.

  மிக அற்புதமான படைப்பு.இலக்கியத் தேடல்கள் கொண்ட அனைவரும் வாசிக்க வேண்டிய புத்தகம்.
          

Advertisements

3 thoughts on “புத்தகம்-2   விஷ்ணுபுரம்..தேடல் வெளி ..ஜெயமோகன்.

  1. Pingback: புத்தகம்-2   விஷ்ணுபுரம்..தேடல் வெளி ..ஜெயமோகன். – மோனிகா மாறன்

  2. Pingback: புத்தகம்-2   விஷ்ணுபுரம்..தேடல் வெளி ..ஜெயமோகன். | மோனிகா மாறன்

  3. Pingback: விஷ்ணுபுரம்- அற்புதமான உலகம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s