கல்பொரு சிறுநுரை–தினமணி


       

                              கல் பொரு சிறுநுரை

                                                    -மோனிகா மாறன்.

       பிப்ரவரி மாதம் என்றாலே காதலர் தினக்கொண்டாட்டங்களும் ,அதற்கான எதிர்ப்புகளும் வாடிக்கையாகிவிட்டன.

       காதலர் தினக் கொண்டாட்டங்கள் என்ற பெயரில் நடக்கும் மிகப்பெரிய வியாபார மேசடிகள்  நம்மை அறியாமலேயே இளைஞர்களின் வாழ்வில் ஆதிக்கம் செலுத்துகின்றன..இன்றைய கமர்ஷியல் நுகர்வோர் யுகத்தில் தீபாவளி,கிறிஸ்துமஸ்,ஹோலிப் பண்டிகை போன்றவை எப்படி வழிபாடுகள்,,பண்டிகைகள் என்பனவற்றை மீறி பலகோடி வியாபாரங்களாகிவிட்டனவோ,அதே போன்றே  வேலண்டைன்ஸ் டே,நண்பர்கள் தினம் போன்றவையும் மாறிவிட்டன.காதலர் தினக்கொண்டாட்டங்களின் பிண்ணனியில் உலகின் பல முக்கிய வியாபார நிறுவனங்களும்,பெரு முதலாளிகளும் இலாபம் அடைகின்றனர்..காதலர் தின பரிசுப் பொருட்கள்,உடைகள்,அலங்காரப் பொருட்கள்,பூக்கள்,பூங்கொத்துகள்,விலையுயர்ந்த நகைகள்,,பார்ட்டிகள்,ஸ்மார்ட்  போன் ஆபர்கள்,அலைபேசி நிறுவனங்களின் சலுகைகள்,வாழ்த்து அட்டைகள் என்று பல ஆயிரங்கோடி வியாபாரம் உலகம் முழுவதும் பிப்ரவரி மாதத்தில் நடக்கிறது.அவற்றின் மறைமுக விளம்பரங்களே தொலைக்காட்சிகளும்,சமூக  ஊடகங்களும் இவற்றை முன்னிறுத்தி இளைஞர்கள் இழுப்பது.இந்த நுகர்வோர் கலாச்சாரத்தின் தொடர்ச்சியே பொது இடங்களில்  இளைஞர்களும் இளம்பெண்களும் நடந்து கொள்ளும் எரிச்சலூட்டும் நிகழ்வுகள். வெறும் காதலர் தினமாக மட்டும் இருந்தது இன்று காதலர் வாரமாக மாறி ரோஜாப்பூக்கள் தினம், காதலை கூறும் தினம்,சாக்லெட் தினம்,கரடி பொம்மை தினம்,முத்த தினம்,கட்டியணைக்கும் தினம் போன்ற கீழ்த்தரமான முட்டாள் தனங்களாக பரிணமித்திருக்கிறது.காதலர் தினத்தில் ஒரு காதலனோ,காதலியோ இல்லாவிடில் இளைஞர்களுக்கு அவர்கள் நட்பு வட்டத்தில் அது அவமானமாக கருதப்படும் அளவிற்கு அவர்களுக்கு மூளைச்சலவை செய்யப்பட்டிருக்கிறது என்பதே யதார்த்தம்.

        நம் சமூகத்தில் இருபதாண்டுகளுக்கு முன் காதலர் தினம் என்றால் எவருக்கும் தெரியாது.உலகமயமாக்கலின் விளைவாக இன்று இந்தியா உலக அளவில் மாபெரும் வேலண்டைன்ஸ் டே சந்தையாக மாறியுள்ளது.

எல்லா காலகட்டடங்களிலும் காதலர்களும்,காதலும் நம் மண்ணில் உண்டு..அது மனித குல இயல்பு,இயற்கை.ஆனால் இன்றைய காலகட்டத்தைப்போன்று  அர்த்தமற்ற கேளிக்கையாக,முரட்டுத்தனமான,ஸ்டேக்கிங் என்று பெண்களைப் பின்ஙதொடர்ந்து தொல்லை தரும், கொடூரத் தன்மை கொண்டதாக காதல் என்றும் இருந்ததில்லை என்பதை எவரும் மறுக்க இயலாது.எனில் இதன் சமூகக் காரணம் என்ன? 

         பொதுவாக நம் இந்திய,தமிழ்ச் சமூகச் சூழலில் எந்த  உணர்வுமே,  மிகைப்படுத்தப்பட்ட நாடகத்தன்மை கொண்டதே.பக்தி,.இனம் மொழி என்று எதைப்பற்றியுமே இங்கு உணர்வுப்பூர்வமான கருத்துகளே நிலவுகின்றன.”தாய் தடுத்தாலும்,தமிழை விடேன்”,வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்,தமிழெங்கள் மூச்சு “என்பன போன்ற மிக உயரிய சொற்றொடர்களை அவற்றின் உண்மை பொருளுணராமல் வெறும் முழக்கங்களாக மட்டுமே நாம் பயன்படுத்துகிறோம் என்று கூறினால் சினம் கொள்வர்.ஆனால் தமிழ் மொழியினைப் பற்றிய உண்மை வரலாறோ,,தரவுகளோ அதன் தொன்மை பற்றியோ, இரண்டுவரி சொல்லுங்கள் என்றால் எவராலும் கூற இயலாது.

     நம் சமூகத்தில் திரைப்படங்கள் தான் எல்லாமே.திரைக் கதாநாயகன்  ‘இது தமிழ் நாடு தமிழில் பேசு என்று ஐ்நா.சபையில் உட்கார்ந்து பேசினால் கூட  கைத்தட்டி  பெருமிதம் கொள்ளும் நாம்  அன்றாட வாழ்வில் தமிழில் பேசுவதை இளக்காரமாகவும்  குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்டுவதையும்  தமிழ் வழிக் கல்வியையும் மட்டமாகவும் எண்ணுகிறோம் என்பதே மறுக்க இயலா உண்மை.

      இந்த இரட்டைவேட மனநிலை தான் காதல் பற்றியும் நம் சமூகத்தில் நிலவுகிறது.நூற்றாண்டு விழா கொண்டாடிய தமிழ் சினிமாவில் காதல் அற்ற திரைப்படங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.இதிகாசக் காதல்,அரசர்களின் காதல்,ஏழை  பணக்காரக் காதல்,கல்லூரிக் காதல்,மதம்  தாண்டிய காதல்,இனம் தாண்டிய காதல்,,,பார்க்காமலே காதல்,பள்ளிக்கூடக்காதல் என்று காதல் சினிமாவில் படும் பாட்டினை விவரிக்கத் தேவையில்லை.காதலை வெவ்வேறு கோணங்களில் காண்பிப்பவரே முக்கிய இயக்குனர்.எந்த இசையமைப்பாளருக்கும் அவரது காதல் பாடல்களே முக்கிய அடையாளங்கள்.சிறந்த திரையிசைப் பாடல்களை எழுதிய கவிஞர்களும் காதல் பாடல்களால் தான் அடையாளப் படுத்தப்படுகிறார்கள்.இலக்கியம் என்று எடுத்துக் கொண்டால் கொஞ்சம் பேர் படிக்கும் சிற்றிதழ்,தீவிர இலக்கியங்கள் முதல் வெகுஜன பபத்திரிக்கைகள் வரை காதல் பற்றி எழதப்படாத தளங்களே இல்லை  எனலாம்.கவிதைகள்,நாவல்கள்,சிறுகதைகள் 

 என்று இலட்சக்கணக்கான பக்கங்கள் காதலைப் பற்றி எழுதப்பட்டாகி விட்டது.ஆனால் நம் அன்றாட வாழ்வில் சமூகத்தில் காதலும்,காதலர்களும்  வைக்கப்பட்டுள்ள இடம் என்பது கீழானதே என்பது தானே யதார்த்தம்.இன்றைய தமிழகச் சூழலில் சாதிகளை மீறிக் காதலிப்பவர்கள் எதிர்கொள்ளும் மிரட்டல்களும்  ,ஆணவக் கொலைகளும்  நம் சமூகத்தின் இரட்டை மனப்பான்மைக்கு ஆதாரம்..எனில் திரையரங்க இருட்டில்,அந்தரங்க வாசிப்பில் மட்டும் கிளர்ச்சி கொள்ளவும்,ரசிக்கவும்,காதல் என்பதை ரகசிய இன்பமாக மாற்றியதில் சமூக ,அரசியல் காரணங்கள் பல உண்டு.

     முப்பதாண்டுகளுக்கு முன் பெண்களைப் பொது வெளியில்காண்பதும் ,தனியாக பேசுவதும் இயலாத காரியம்.இன்றைய காலமாற்றத்தில் ஆண்களுக்கு இணையாக பெண்கள் அனைத்து துறைகளிலும்,அனைத்து இடங்களிலும் இருப்பது சாதாரணமாகி  விட்டது.எனவே ஆண் பெண் நட்பும்,ஈர்ப்பும்  தவிர்க்க இயலாதவை.ஆனால் அவையெல்லாம் சரியான புரிதல்களுடன்,ஆரோக்யமான மனநிலையில் உண்டாகின்றனவா என்றால் இல்லை என்பதே நிதர்சனம்.எந்த சமூக மாற்றத்தையும் எதிர் கொண்டு அதனை ஆராய்ந்து எதிர் கொள்வது என்பதே சரியான அணுகு முறை.அதை விடுத்து எல்லாவற்றையும் மூடி மறைத்து பண்பாடு கலாச்சாரம் என்று மொண்ணைத்தனமாகப் பேசி கண்மூடித்தனமாக முடிவுகளை எடுப்பதும்,காதலர்களை எதிர்ப்பதும் எவ்விதத்திலும் தீர்வாகாது.

             உலக மயமாக்கலின் மூலம்  பல நல்ல மாற்றங்களும்,விழிப்புணர்வுகளும் உண்டாகியுள்ளன என்பது உண்மை.பல் வேறு நோய்களுகளுக்கெதிரான தடுப்பு முறைகள்,மகளிர் தினம்,மார்பகப் புற்று நோய் விழிப் புணர்வு,எயட்ஸ் விழிப்புணர்வு ,குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு,கணிணி மயமான வாழ்வு,என்றெல்லாம் பல்வேறு நன்மைகள் நம்மிடையே உருவாகியுள்ளன.

இவற்றில் காதலர் தினக் கொண்டாட்டங்கள் போன்றவை நிச்சயம் தேவையற்ற வியாபாரங்கள் என்பதை இளைஞர்கள் புரிந்து கொள்ளுதல் அவசியம்.அதே வேளையில் கலாச்சாரப் பாது காவலர்கள் என்ற பெயரில் நம் பண்பாட்டினைப் பற்றிய அடிப்படிப் புரிதல்கள் அற்ற கூட்டம் தனி மனித சுதந்திரத்தில் அத்து மீறி நுழைவது ஏற்க இயலாதது.காதலிக்கவே கூடாது என்று இவர்கள் தடுப்பதெல்லாம் மனித இயல்புகளுக்கு எதிரானது.

         நம் குழந்தைகளுக்கு சரியான புரிதல்களை நாம் உண்டாக்க வேண்டும்.அவர்களை நாள் முழுக்க தொலைக்காட்சிகளிலும்,சமூக ஊடகங்களிலும்   அமர விட்டுவிட்டு,உலகையே கரங்களிலுள்ள போன்களில் தந்து விட்டு நீ அந்நிய கலாச்சாரத்தை பின்பற்றக் கூடாது.,நம் முறைப்படி தான் வாழ வேண்டும் என்றெல்லாம் குருட்டுத்தனமாக வற்புறுத்துவது எத்தனை அபத்தமானது.
     மேலை நாடுகளில் காதலுக்கும், திருமணத்திற்கும்   எந்த தொடர்புபையும் அவர்கள் வைப்பதில்லை.பதின் பருவத்தில் காதல்.,பிடித்திருந்தால் திருமணம்,ஒத்துப் போகும் வரை சேர்ந்து வாழ்தல்,பிடிக்கவில்லை எனில் பிரிவு,பின் மற்றொரு காதல்,திருமணம் .,என்பதெல்லாம் அவர்கள் சகஜமாக ஏற்றுக் கொண்ட ஒன்று.ஆகவே அங்கு வேலண்டைன்ஸ் டே என்பதும் ஒரு கொண்டாட்டமாக உள்ளது.

ஆனால்  நம்  நாட்டிலோ காதல் என்பது திருமணத்தை மையமாக்  கொண்டது.நம் சமூகத்தில் காதல் என்பது திருமணம் ,உறவுகள்,குடும்பம் குழந்தைகள், சார்ந்துள்ள சுற்றத்தினர்,பொருளாதாரம் என்று பல்வேறு பரிமாணங்கள் கொண்டது.காதலிப்பது என்பது வெறும் கேளிக்கையல்ல அது நம் வாழ்வின் அடுத்த ஐம்பதாண்டு காலம் தொடரும்  உறவு என்பதை நம் பிள்ளைகளுக்கு தெளிவாக உணர்த்துதல் அவசியம். .அவற்றையெல்லாம் நம் பிள்ளைகள் உணர வேண்டும்.அதை விட்டு வெறும் கமர்ஷியல் கொண்டாட்டங்களும் கேளிக்கைகளும் தான் காதல் என்று விட்டு விடக் கூடாது.

        தமிழ் சமுதாயத்தின் அடையாளமாகக்  காதலையும்,வீரத்தையுமே நம் இலக்கியங்கள் கூறுகின்றன”.கல்பொரு சிறு நுரை “என்ற   ஒரு வரி குறுந்தொகையில் வரும் .காதலனைக் காணாவிடில் கல்லின் மீது மோதும் சிறு நுரையைப் போன்று கொஞ்சங்கொஞ்சமாய் காணாமல் போய்விடுவேன் என்று தலைவி கூறும் பாடல் இது.காதல் எப்பொழுதும் இத்தகைய நுட்ப உணர்வு தான்.அடர் கானகத்தில் எவரும் அறியாமல் மலரும் சிறு மலரைப்போல்,குருவியின் அடிவயிற்றில் சிறு பூஞ்சிறகின் வெம்மை சிலிர்ப்பு போன்ற எளிமையானதும்,உன்னதமானதுமானது தான் காதல்.அதற்கு எவ்வித அலங்காரங்களோ,பூச்சுகளோ,ஆடம்பரங்களோ அரைகூவல்களோ தேவையில்லை.

     

    ஒரு ஆண், ஒரு பெண்  என்பது மட்டுமே போதும் காதலிப்பதற்கு.அது மானுட குல இயல்பு.தன் சந்ததியை உருவாக்க எண்ணுவது எந்த உயிருக்கும் அடிப்படை உணர்வு.வலிமையான தன்னைக் காக்கும் ஆளுமை கொண்டஆணைத் தேர்ந்தெடுப்பதும்,தன் சந்ததியைத் தாங்கும் உடல் கொண்ட அரவணைக்கும் பெண்ணைத்தேர்ந்தெடுப்பதும் இயற்கையாகவே உண்டான உள்ளுணர்வுகள்.அவற்றை அர்த்தமற்ற கேளிக்கைகளாக்கும் இத்தகைய கொண்டாட்டங்கள் நெறிப்படுத்தப் படுவதே நம் சமூகத்திற்கு தேவை.காதலும் ,ஈர்ப்பும் வாழ்வின் சிறு பங்கு மட்டுமே ,அதையும் தாண்டி உலகில் எத்தனையோ மகத்துவங்கள் இருக்கின்றன.அவற்றை அடைய காதல் அடித்தளமாக இருக்க வேண்டும் என்ற தெளிவுகளை நம் பதின் பருவத்தினருக்கு கல்வியின் மூலமும் ஊடகங்கள் மூலமும் அளிப்பதே அனைவரின் கடமை.அப்படியில்லாமல் மூர்க்கத்ஙதனமாகக் காதலை எதிர்ப்பதும்,காதலர்களை விரட்டுவதும் அது இன்னும்  இன்னும் அவர்களைத் தூண்டுவதாகவே அமையும்.

             ஏறத்தாழ பதினைந்தாண்டுகளுக்கு முன்  நீதான் துணை என்று முடிவெடுத்த போது இருவருக்கும் மற்றவரின் பெயர் மட்டுமே தெரியும்.இனம்,மதம், எல்லவற்றையும் கடந்து காதலித்து மணம் புரிந்து,இன்று அந்த உன்மத்தம் பண்மடங்கு  பெருகி  பேரன்பாய் பெருங்காதலாய்  கனிந்து, இக்கொண்டாட்டங்களை புன்னகையுடன் கடந்து செல்ல இயலுவதாலேயே இதனை என்னால் எழுத முடிகிறது.காதலர் அனைவருக்கும் நல் வாழ்த்துகள்.

           

நன்றி .தினமணி14-2-2017

,

        
           

             

     

          

Advertisements

நினைவின் ஓசை

நினைவின் ஒலிகள்
          மோனிகா மாறன்

நெஞ்சத்தைக் கீறி 
நினைவில் நுழைந்து
என்னுள் உறைகின்றன
உந்தன் பார்வைகள்!
உளறலாய் குழறலாய்
கவிதையாய் சிணுங்கலாய்
நான் காதலை
வெளிப்படுத்துகையில்
ஒரே கணப் பார்வையில்
உயிர்த்துடிப்பை தொட்டுவிடும்
விரல்நுனி ஸ்பரிசத்தில்
உள்ளத்தின் 
ஆழ்ந்த ஒலியாய்
யதார்த்தமாய் வெளிப்படும்
ஒற்றை வார்த்தையில்
உலகின் நேசமனைத்தும்
ஒருசேர என்மீது வைத்திருப்பதை
எத்தனை இயல்பாய்த்
தெரிவித்துவிடுகிறாய்!!!