காலா- ஓவியத் தேர்வில் கட்டுரை.

காலா படத்தின் குறியீடுகள்,பேசப்படும் சமூக நீதி,வசனங்கள்,இந்துத்துவ எதிர்ப்பு என்று பல்வேறு கோணங்கள் அலசப்பட்டுவிட்டன.அவற்றை பற்றி நான் புதிதாக எதுவும் சொல்லிவிட இயலாது.

இங்கு ஒரு சினிமா ரசிகையின் பார்வையை மட்டுமே பதிவு செய்ய விரும்புகிறேன். ஏறத்தாழ தமிழின் சிறந்த படங்கள்,பொழுதுபோக்கு படங்கள்,விருது பெற்ற படங்கள் என அத்தனை சினிமாக்களையும் பார்த்துள்ளேன்.உலகத் திரைப்படங்களை விட்டு விடலாம்.தமிழ் சினிமாவின் ஐம்பதுகளில் வந்த திரைப்படங்கள் முதல் எம்ஜிஆர்,சிவாஜி, என்று நடிகர்கள் முதல் ராமண்ணா,பீம்சிங் கேஎஸ்ஜி,ஷ்ரீதர்,பாலச்சந்தர்,எஸ்பி முத்துராமன், மகேந்திரன்,பாலு மகேந்திரா,பாரதிராஜா,மணிரத்னம்,பாலா என்று அத்தனை இயக்குனர்களின் படங்களையும் பார்த்திருக்கிறேன்.பொதுவாக என் வயது நண்பர்கள் பெரும்பாலானோர் பார்க்க சலித்துக்கொள்ளும் மிகப்பழைய பாகவதர் கால திரைப்படங்களைக் கூட நான் பார்ப்பதுண்டு.

எதற்காக இதைச்சொல்கிறேன் என்றால் சினிமாவை வெறும் நடிகர்களின் படமாக எண்ணாமல் அதன் இயக்குநர்,பாடலாசிரியர்,இசையமைப்பாளர்,எடிட்டர்,ஒளிப்பதிவாளர் என்று அனைவரின் பங்களிப்பாகவே பார்க்க வேண்டும் என்பதே சிறுவயதிலிருந்தே என் எண்ணம்.இதற்கு என் அப்பா தான் காரணம்.எங்கள் ஜவ்வாது மலையில் டெண்ட் கொட்டகையில் படம் பார்த்த காலங்களிலேயே ,நாங்கள் படம் பார்த்து விட்டு வந்தால் எங்களிடம் “யார் டைரக்ஷன்?”என்று அவர் கேட்பார்.அதற்காகவே நான் இயக்குநர் பெயரை பார்த்து தெரிந்து வைத்திருப்பேன்.எனவே சினிமா பற்றிய தெளிவான பார்வை எனக்கு எப்பொழுதும் உண்டு.ஒரு கலையாக,ஒரு படைப்பாக ஒரு திரைப்படம் உருவாக ஒட்டுமொத்த உழைப்பு தேவை என்பதையும் உணர்ந்தே இருக்கிறேன்.

நான் சினிமா பார்க்க கற்றுக்கொண்டது சிற்றூர் மக்களுடன்.அவர்கள் எப்படி படத்தை பார்ப்பார்கள் என்ற கோணத்தை அவர்களுடன் பேசி அறிந்திருக்கிறேன்.இப்பொழுதும் நகர்ப்பகுதி சாதாரண மக்கள் வாழும் இடத்தில் தான் பணியாற்றுகிறேன்.எனவே மக்கள் எப்படி ரியாக்ஷன் தருகிறார்கள் என்று நேரடியாக அறிகிறேன்.

சினிமாக்களில் கூறப்படும் கருத்துகள் எந்த அளவிற்கு மக்களை சென்று சேரும் என்பதும் எனக்கு தெரியும்.எம்ஜிஆர்,சிவாஜி திரைப்படங்களும்,பாடல்களும் சொல்லிய கருத்துகளை எல்லாம் மக்கள் ஏற்றுக் கொண்டிருந்தால் இன்று தமிழ்நாடே நேர்மையாய்,அறவழியில்,ஊழல்களற்று இருக்குமே.

சினிமா மட்டுமே பொழுதுபோக்காக ,சமூகத் தொடர்பாக இருந்த காலத்திலேயே அவையெல்லாம் வெறும் பாடல்களாக கடந்து விட்டன.இன்றைய இணைய பொழுது போக்கு வெளியில் ஒரு திரைப்படத்தின் கருத்துகள் மக்களை மாற்றிவிடும் என்று நம்புவதெல்லாம் அபத்தமானது.

ரஞ்சித் தன் திரைப்படத்தில் எதைப்பற்றி வேண்டுமானாலும் பேசலாம் .ஒரு படைப்பாளியாக அது அவரது இடம்,அவரது சுதந்திரம்.

ஆனால் குறைந்த பட்சமாக திரைப்படம் என்பது விஷூவல் மீடியா என்ற அடிப்படை செய்தியை மட்டுமாவது மனதில் வைத்து இயக்குநர்கள் செயல்படவேண்டும் என்பது என் எண்ணம்.

இத்திரைப்படத்தில் பேசப்படும் அத்தனை இசங்களையும், அதை விட அதிகமாக வாசித்திருக்கிறேன்.அவையெல்லம் சமூகத்தின் பண்பட்ட முன்னேற்றத்தை விரும்பும் எவருக்கும் ஏற்புடையவையே.ஆனால் ஒரு திரைப்படத்தில் அதனை எப்படி பதிவு செய்திருக்க வேண்டும்? எல்லாரும் பக்கம் பக்கமாகப் பேசுகிறார்கள்.ஒரு காட்சியாவது பேசப்படும் கருத்தை பதிவு செய்திருக்கிறதா?என்றால் இல்லை என்றே கூறலாம்.

வழக்கமான தாதாயிசம்,குடும்ப செண்ட்டிமெண்ட், காதல் காட்சிகள் ,இது அதிக பட்ஜெட் படம் என்பதால் எல்லா காட்சிகளிலும் கூட்டம்,குறைந்த பட்சம் பத்து பேர் இல்லாமல் ஒரு பிரேம் கூட இல்லை. ரஞ்சித் தான் கூற வந்த கருத்துகளை யாரையாவது பேச வைக்கிறார்.அவ்வளவு தான்.இதில் இயக்குநரின் தனித்த அடையாளம் எது? திரைக்கதை என்பதே இல்லை.சந்தோஷ் நாராயணனின் இசை மட்டுமே படத்தை காப்பாற்றி இருக்கிறது.

ஓவியத் தேர்வு எழுதும் அறையில் அமர்ந்து கட்டுரை எழுதியிருக்கிறார் ரஞ்சித்.அவ்வளவு தான்.சினிமாவில் கேமரா,கோணங்கள் பற்றியெல்லாம் மகேந்திரன்,மணிரத்னம்,பாலா போன்ற சிறந்த இயக்குநர்களின் படங்களின் சில காட்சிகளிலேயே நாம் தெரிந்து கொள்ளலாம். இயக்குநர் தன் கோணத்தை காட்சியாக பதிவு செய்ய வேண்டும்.அது தான் பார்வையாளரின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

முள்ளும் மலரும் போன்ற திரைப்படங்கள் அதற்கு சிறந்த உதாரணம்.ரஜினிகாந்தின் மிகச் சிறந்த திரைப்படம் அது.திரைக்கதை எத்தனை தெளிவாக இருக்க வேண்டும் என்பதற்கு இதைப் போன்ற படங்களே சிறந்த எடுத்துக்காட்டு.

திரைக்கதை சுவாரசியமாக இருந்தால் மட்டுமே அத்திரைப்படத்தின் தாக்கம் என்றும் நிலைபெறும்.எம்ஜிஆரின் எங்க வீட்டுப்பிள்ளை போன்ற பல திரைப்படங்கள் இதற்கு சான்று.ஐம்பதாண்டுகள் கழித்தும் இன்றும் ரசிக்க முடிவதே அத்திரைப்படத்தின் வெற்றி.அதெல்லாம் வணிகப்படம் என்று ஒதுக்கினால்,ரஞ்சித் தான் எடுப்பது இலட்சிய,கலைப்படம் என்று அறிவித்து விடலாம்.ரஜினிகாந்தை வைத்து விளம்பரப் படுத்திவிட்டு குறியீட்டை பாருங்கள் என்று கூறுவதெல்லாம் சப்பைக்கட்டுதான்.

இத்திரைப்படத்தில் கூறப்படும் இந்துத்துவா எதிர்ப்பு,பெண்களின் தைரியம், சமூக நீதி என்பதெல்லாம் விமர்சனங்களில் மட்டுமே கூறப்படுகின்றன. பேஸ்புக்கிலும் ,ட்விட்டரிலும் உள்ள அறிவாளிகள் அவற்றை தேடிக் கண்டுபிடித்து சொல்கிறார்கள்.ஆனால் திரைப்படத்தை பார்த்த எனக்கு எதுவும் மனதில் பதியவில்லை என்பதே உண்மை.

இப்படி கருத்துகளை மட்டுமே கூற வேண்டும் என்றால் அவற்றை புத்தகமாக எழுதிவிடலாம்.திரைப்படம் என்ற வலுவான ஊடகம் எதற்கு?

ஒரு கேங்ஸ்டர் படத்தை எடுத்து அதில் ஆங்காங்கே வசனங்களை வைத்துவிட்டால் அது புரட்சி படமாக ஆகிவிட முடியாது.திரைமொழியைச் சரியாக பயன்படுத்தினால் மட்டடுமே அது பார்வையாளனைச் சென்றடையும்.

Advertisements

சென்று வா பாலகுமாரா..

பாலா என் பதின்ம வயதுகளில் நானறிந்த பெயர்.வாசிப்பின் ஆரம்ப காலகட்டத்தில் இருக்கும் எவரும் பாலகுமாரனைக் கடந்தே வந்திருக்க இயலும்.

மெர்க்குரிப்பூக்களின் சியாமளியும்,இரும்பு குதிரைகளின் விஸ்வநாதனும்,கரையோர முதலைகளின் ஒவ்வொரு கதைமாந்தரும் இளமையில் என்னை ஈர்த்தவர்களே.

தீவிர இலக்கிய வாசிப்பிற்குள் வருவதற்கு முன் பாலாவின் எழுத்துகள் எனக்கு மிகவும் பிடித்தமானவை.பாலாவின் எழுத்துகளை 99% வாசித்துள்ளேன் என்பதை பெருமிதத்துடனே பதிவு செய்கிறேன்.

கிறித்தவ குடும்பத்திலிருந்து வந்த எனக்கு ஆழ்வார்கள்,நாயன்மார்கள் கதைகள் அறிமுகம் பாலகுமாரன் எழுத்துகளிலேயே.அருணகிரிநாதர்,வில்லிப்புத்தூரார்,மகாபலி,சதாசிவப் பண்டிதர் ,கோச்செங்கணன் என்று பல்வேறு வரலாற்று கதாபாத்திரங்களை அறிமுகமானது பாலகுமாரனின் எழுத்துகள் மூலமே.

அகல்யா,பயணிகள் கவனிக்கவும்,திருப்பூந்துருத்தி,என் கண்மணித் தாமரை,ஏதோ ஒரு நதியில்,சரஸ்வதி,முதிர்கன்னி என்று ஒவ்வொன்றும் ஒரு களம்.பாலாவின் எழுத்துகள் வாசிப்பவரை இழுத்து தன்னுள் ஒன்ற வைப்பவை.

பெண்களின் மன ஓட்டத்தை ஒரு கோணத்தில் எழுதியவர் பாலகுமாரன்.என்னுடைய பதினெட்டு வயதில் பாலாவைப் படித்த.ஒரு ஆணைத்தான் திருமணம் செய்ய வேண்டும் என்று எண்ணியிருந்தேன்.இப்போழுது அவையெல்லாம் கிண்டல்களாகத் தோன்றினாலும் அந்த வயதில் அது மிகப்பெரிய யதார்த்தம்.எந்த உறவையும் புரிந்து கொள்ள வேண்டும் என்ற உணர்வை அளித்தவை பாலாவின் எழுத்துகள்.

” காமத்தை எழுதி விற்பவர் என்றெல்லாம் பாலாவைப் பற்றிய விமர்சனங்களை படிப்பதற்கு முன்பே அதனை வேறெதோ ஒரு வடிவில் புரிந்து கொண்டேன்.அதுவரையில் இலக்கிய எழுத்தாக ஜெயகாந்தனை மட்டுமே வாசித்திருந்தேன்.

வணிக எழுத்துகளில் சலிப்படைந்த பின் தீவிர இலக்கியத்திற்குள் நுழைந்து டால்ஸ்டாய்,தஸ்தவேயஸ்கி,ஜெயமோகன்,சாரு,எஸ்ரா என்று வாசித்து திஜா,லாசாரா,புதுமைப்பித்தன் என்று சென்ற வாசகி நான்.ஆகவே வாழ்வின் ஒரு காலகட்டத்தில் பாலகுமாரனை வாசிப்பது நல்லதே.வாசிப்பினை நல்ல அனுபவமாக்கக்கூடிய சுவாரசியமான நடை அவருடையது.அது தேடல் உள்ளவர்களை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச்செல்லும்.

தனித்திரு,மனதிற்குள் பேசு என்ற்ல்லாம் சொல்லித்தந்தது “இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா”

அதன்பிறகு உடையார்’ பாலாவின் கடும் உழைப்பினால் தஞ்சைபெரிய கோவிலை நேசிக்க வைத்த படைப்பு,அருண்மொழியும்,பஞ்சவன்மாதேவஅயும்,ராஜேந்திரனும்,கருவூர்த்தேவரும்,நித்த வினோதனும்,சாவூர் பரஞ்சோதியும்,புகழியும் நம்மை வேறொரு உலகிற்கு கொண்டு.செல்வர்.இந்நாவலில் பல வரலாற்றுப் பிழைகள்,மக்களின் வாழ்க்கை பற்றிய தவறான தகவல்கள் இருந்தாலும் படிப்பதற்கு நல்ல சுவாரசியமான எழுத்து..இப்பொழுதும் மனதிற்கு லேசான எழுத்துகள் தேவைப்படும் பொழுதுகளில் நான் வாசிப்பது உடையாரைத் தான்.

தீவிர இலக்கியங்களுக்குள் நுழைந்த பிறகு பாலகுமாரனின் எழுத்துகளை விட்டுவிட்டேன்.இருந்தாலும் வணிக எழுத்துக்கும் மேற்பட்ட தரம்கொண்ட பாலாவின் தீவிர வாசகி நான்.

வாழ்வின் சின்ன சின்ன நுட்பங்களை எளிமையாகச் சொல்வதில் பாலா ஒரு சிறந்த குரு.அவர் மூலமே நான் முதலில் ஆன்மீகத் தெளிவு பெற்றேன்.என் கல்லூரி நாட்களில் பாலாவுக்கு பலமுறை கடிதங்கள் எழுதியிருக்கிறேன்.

தமிழின் சிறந்த.படைப்பாளிகளில் ஒருவரான பாலகுமாரனுக்கு அஞ்சலி.

சென்று வா பாலா.

ஜெய் குரு ராயா

யோகி ராம் சுரத்குமார்

பெரியார் சிலைகளை உடைத்தெரியுங்கள்!!

தமிழக அரசியல் களம் என்பது எப்பொழுதும் தேவையானவற்றை விட்டு சல்லிக்கு உபயோகமற்ற விவாதங்களையே மையப்படுத்தி செல்லும் என்பதற்கு தற்பொழுது நடக்கும் பெரியார் சிலை விவாதங்களே சிறந்த உதாரணம்.

ஈவெரா சிலைகளை உடைப்போம் என்று பாஜாகாவின் எச்.ராஜா கூறியிருப்பதற்கு எதிரான கருத்துகள் அனைத்தும் வரவேற்கத்தக்கவையே.இருப்பினும் ,இவையெல்லாம் மக்களை திசைதிருப்ப செய்யப்படும் தரமற்ற விவாதங்களே.எச்.ராஜா எதிர்பார்த்த ஊடக வெளிச்சத்தை அவருக்குத் தேவையற்று தருகிறார்கள்.

சமூக வலைதளங்களில் பொங்கும் பலருக்கும் ஈவெராவைப் பற்றிய தெளிவு எவ்வளவு இருக்கும் என்று தெரியவில்லை.திமுகவினரும்,பெரியாரிஸ்ட்டுகளும் முட்டு கொடுக்குமளவிற்கு தமிழகத்தில் பெரியாருக்கு எந்த வித புகழும் இல்லை என்பதே யதார்த்தம்.பெரியாரின் எந்த கொள்கையையும் திராவிடக் கட்சிகளே பின்பற்றுவதில்லை.இந்த செயலில் அஇஅதிமுகவினர் எவ்வளவோ பரவாயில்லை.நாங்கள் சாமி கும்பிடுகிறோம் என்று பகிரங்கமாக ஒப்புக்கொள்வார்கள்.திமுகவினர் கொல்லைப்புறமாகச் சென்று கிடாய் வெட்டி, சாமியார்களின் கால்களில் விழுவார்கள்.பேச்சில் மட்டும் முழங்குவார்கள்.

பிறகு எதற்கு இவர்கள் பகுத்தறிவு பேசவேண்டும்?கொள்கைகளை குழி தோண்டி புதைத்து விட்டு சிலைகள் மட்டும் எதற்கு? பெரியாரின் சிலைக்கு மாலை போடுவதே அவர் காலமெல்லாம் பேசிய பேச்சிற்கு எதிரானது என்றாவது இவர்களுக்குத் தெரியுமா?

தனிப்பட்ட முறையில் ஈவெராவின் கருத்துகளே தவறானவை என்பதே என் எண்ணம்.அவர் எதையும் முழுமையாக ஆராயாமல் மேலோட்டமாகச் சில கருத்துகளை முரண்பாடாகப் பேசி கைதட்டல் வாங்கினார் என்பதே உண்மை.என் கல்லூரி நாட்களில் பெரியாரின் அனைத்து எழுத்துகளையும் தேடித்தேடி வாசித்திருக்கிறேன்.அப்பொழுது எனக்கு பெரியார் என்றால் மிகப்பெரிய ஆளுமை என்ற எண்ணம்.ஆனால் அவரது பேச்சுகளையும்,எழுத்துகளையும் வாசித்த பிறகே அவையெல்லாம் தட்டையான வாதங்கள் என்று புரிந்தது.எளிய மக்களின் எந்த வித தேவைகளையும் நிறைவேற்றாமல், அவர்களின் நம்பிக்கைகளை எள்ளி நகையாடுவது என்பதே எத்தனை மோசமான அரசியல் என்பது கூர்மையான எவருக்கும் புரியும்.

பெரியாரின் பிரச்சாரங்கள் தவறானவை என்பதற்கு இன்றைய திராவிட முன்னேற்றக் கழகமும்,திராவிடர் கழகமும் அடைந்துள்ள நிலையே சரியான ஆதாரம்.அவர்களுக்கு கொள்கையுமில்லை,கோட்பாடுமில்லை.நமது இந்தியாவின் பாரம்பரியம் ,கலாச்சாரம் பற்றிய எந்த வித அடிப்படை புரிதல்களும் இல்லை.வெறும் மேடைப் பேச்சுகள் மட்டுமே இவர்கள் பாரம்பரியம்.சாதிகளுக்கெதிராக எந்த வித சரியான நடவடிக்கைகளும் எடுக்கவில்லை.இவர்களே இன்னும் இடைநிலைச் சாதிகளை வளர்க்கிறார்கள் என்பதே உண்மை.

பெரியாரின் கருத்துகளால் தான் இட ஒதுக்கீடு வந்தது,பெண்ணுரிமை வந்தது,கல்வி பரவலாகியது என்றெல்லாம் இணையத்தில் பிதற்றும் அறிவாளிகளுக்குத் தெரியவில்லை,இவையெல்லாம் எந்த தனிமனித முயற்சியானாலும் வரவில்லை என்று.கால மாற்றங்களால் பெரியார் இல்லை என்றாலும் இவை இங்கு நடந்துதான் இருக்கும்.

போலி பெரியாரியம் பேசும் திராவிட இயக்கத் தோழர்களே ,பெரியாரின் எந்தக் கொள்கையையும் பின்பற்றாத உங்களுக்கு அவர் சிலை எதற்கு? அதை உடைக்க எச்.ராஜாக்கள் தேவையில்லை.அவர் கொள்கைகளை உடைத்தெரிந்த நீங்களே அவர் சிலைகளையும் உடைத்தெரிந்து விடுங்கள்.அது தான் சரி!!!

மண்மொழி-குறுந்தொகை-1

குறுந்தொகை 138, கொல்லன் அழிசி, மருதத் திணை – தோழி சொன்னது – தலைவன் கேட்குமாறு, தலைவி சொல்லுவதைப் போன்று, தோழி சொன்னது 

கொன்னூர் துஞ்சினும் யாந் துஞ்சலமே
எம் இல் அயலது ஏழில் உம்பர்
மஊழ்த்தயிலடி இலைய மா குரல் நொச்சி
அணி மிகு மென் கொம்பு
மணி மருள் பூவின் பாடு நனி கேட்டே

image

             சிறு வயதில் எப்பொழுதும் நான் இருக்குமிடம் ஏரிக்கரைதான்.எங்கள்  வீட்டிலிருந்து ஐம்பதடி தொலைவில் வனத்துறையின் மரக்கன்றுகள் வளர்க்கும் நர்சரியைத் தாண்டினால் ஏரிதான்.சிறிய நீர்ப்பரப்புதான் எனினும் அது என்னுள் நிறைந்தது.மாலை வேளையில் சூரியன் தங்க நிறங்கொண்டு சிவந்து ஏரி நீரில்   உண்டாக்கும் தோற்றங்கள் எவரையும் ஈர்ப்பவை.அவ்விடமும் அங்கிருக்கும் பறவைகளும்,சின்னஞ்சிறிய பூக்களும்,மீன்களும்,அல்லி மலர்களும்,கரையாரத்தில்மஞ்சளும் சிவப்புமான புளியம்பூக்களும் ,காட்டுவாகை மரங்களும் எனக்களிக்கும் அந்தரங்க
மகிழ்வினை நான் மீண்டும் பெற்றது சங்க இலக்கியத்தில் தான்.அம்மொழியும் இயற்கையும் அளிக்கும் பேருவகை என்றும் மாறாதவை.
    இக்குறுந்தொகைப்பாடலில் தலைவி இரவில் உறங்காமல் விழித்திருக்கிறாள்.ஊர்துஞ்சும் யாமப்பொழுதுகள் காதலிப்பவர்களுக்கு சுகமான துயர்களே.இயற்கையுடன்,பூக்களுடன்,விலங்குகளுடன் இணைந்த வருணணைகளே சங்க இலக்கியங்களை செவ்வியல்கள் ஆக்குகின்றன.நொச்சிமரத்தின் இலைகள் மயிலின் கால்கள்
போன்ற வடிவம் கொண்டவை என்பது மயிலையும் நொச்சியையும் நுட்பமாய் கவனிப்பவருக்கே புரியும்.வளமையான அழகிய நொச்சிமரங்களைக் காண்கையிலேயே அது விளங்கும்.நொச்சி மரத்திலிருந்து பூக்கள் விழும் மெல்லிய சத்தத்தை கேட்டவாறு படுத்திருக்கிறாள்.அது துயரத்தை விவரிக்கும் ஒலியாகவே இங்கு கூறப்படுகிறது.நொச்சி மலர் கிளையினின்று வீழ்வதைப் போன்று அவள் மனதிலிருந்து காதலனின் மீதான அன்பு விழுகிறது.மனம் ஆற்றாத துயருறுகிறது என்பதை எத்தனை அழகாக விவரிக்கிறார்.இப்பாடல்கள் அந்தரங்கமான வாசிப்பனுபவத்தை அளிக்க வல்லவை.

 சுறாங்கெனி…

   

  நான் தொடக்கநிலை  வகுப்புகளில் படிக்கையில்  எங்கள் பள்ளிக்கு அங்குள்ள அத்திப்பட்டு புனித வளனார் ஆசிரியப் பயிற்சி நிறுவனத்தில்  படிக்கும் அண்ணன்கள் பயிற்சி வகுப்புகளுக்காக வருவார்கள்.

    வழக்கமான ராஜேஸ்வரி,சுகுணா ராஜவேணி டீச்சர்களும்,ராமமூர்த்தி, ராதா சார்களும் கற்றுத்தரும் 

” தேவே உன்னைப் போற்றிடுவோம்.

ட்விங்கிளு ட்விங்களுவும்”

 எங்களுக்கான சலிப்பூட்டும் கறை படிந்த கரும்பலகைகளும்,மங்கிப்போன மகாத்துமாவும்,அழுக்கடைந்த நேருவும் உள்ள வகுப்பறைகள் திடீரென ஆசிரியப்பயிற்சி மாணவர்களால் பொலிவு பெறும்.அழகழகான படங்களும்,சார்ட்களும்,அறிவியல் ஆய்வுக் கருவிகளும் போர்டில் வரையும் பெரிய ஜ்யோமெட்ரி பாக்சுமாய் பள்ளியே  திருவிழாவாய் மாறும்.விளையாட்டு வகுப்புகளில் விசில் சத்தங்களும்,பெரிய பெரிய கால்பந்துகளும் டென்னிகாய்ட்  வளையங்களும், ஆரஞ்சுப் பழங்கள் போன்ற மெத்து மெத்தென்ற மஞ்சள் வண்ணப் பூப்பந்துகளும்  குதூகலத்தை அள்ளி வரும்.

    அப்படிப்பட்ட இனிய காலங்களில் அந்த அண்ணன்கள் பாடியபோது தான் நான் முதன்முதலில் அத்தனை உற்சாகமான ஒரு பாடலைக் கேட்டேன்.  “அரிசிருக்கு பருப்பிருக்கு ஆக்க முடியல

அடுப்பிருக்கு நெருப்பிருக்கு சேக்க முடியல

சுராங்கெனி சுராங்கெனி 

சுராங்கென்னிக்கா மாலுக்கெண்ணா வா!

மாலு மாலு மாலு 

சுராங்கெனிக்கா மாலு ” 

    வித்தியாசமான தமிழில் ஒலித்த அப்பாடல் எங்களின் பிரிய  கீதமானது.

   அவற்றின் அர்த்தங்களெல்லாம் புரியாமல் நாங்கள் பாடி ஆடிக் கொண்டிருந்த நினைவுகள் இன்றும் அப்படாலுடன் சேர்ந்து வருகிறது.

  “சின்ன மாமியே உன் சின்ன மகளெங்கே

 பள்ளிக்குச் சென்றாளோ படிக்கச்சென்றாளோ”  

  என்று இலங்கை கூட்டுத்தாபன ஒலிபரப்பு வானொலியிலும்,எங்கள் பள்ளியிலும் கேட்ட அந்தப் பாடல்களெல்லாம் என்றென்றும்  உற்சாகத்தை அளிப்பவை .எத்தனை காலங்கள் ஆனாலும் மகிழ்வான தருணங்கள் மறைவதில்லை.பாடலைக் கேட்கும் எவருக்கும் ஆடத்தோன்றும்.70களில் உருவாகி இருபதாண்டுகளுக்கும் மேலாக கல்லூரி மாணவர்களின் கோரஸ் பாடலாய் புகழடைந்த அப்பாடல் எத்தனையோ பேருக்கு மலரும் நினைவுகளை மீட்டுத் தருபவை.

  எங்கள் ஜவ்வாது மலைக்கு வரும் எல்லா சுற்றுலா பேருந்துகளிலும்,வேன்களிலும்,கல்லூரி வாகனங்களிலும் இப்பாடல் ஒலிக்கும்.இன்பச் சுற்றுலாக்களுக்கு  மேலும் ஒளியேற்றிய பாடல் அது.

    நினைத்தவுடன் ஸ்மார்ட் போன்களிலும்,இணையத்திலும்,தொலைக்காட்சியிலும் எந்த பாடலையும் கேட்டு ஐம்பது நொடிகளில் சலிப்புற்று அடுத்த பாடலுக்குச் சென்றுவிடும் இன்றைய வீடியோ தலைமுறை ,இப்படி ஒரு  பாடல் மட்டுமே உருவாக்கிய அதிர்வுகளை நிச்சயம் மிஸ் செய்கிறார்கள்.

    விஷேச வீடுகள்,இறப்பு வீடுகள்,கோவில்கள் என்று நிகழ்வுகளில் ஒலிக்கும்  பாடல்கள் மரங்களையும்,வயல்களையும் தாண்டி எங்களை நோக்கி வரும் அற்புத கணங்கள்…

     இலங்கை கூட்டுத்தாபன வானொலியிலும்,அகில இந்திய சென்னை வானொலியிலும்  பாடல்  ஒலிபரப்பிற்காக  இரவு பத்து மணிவரை காத்திருந்து நேயர் விருப்ப  பாடல்களைக் கேட்டதும்,ஊரே சேர்ந்து ஒலிச்சித்திரங்களை  கேட்டதும் இப்பொழுது எண்ணினால் வியப்பு தான்.ஒரு பாடலை கேட்பது அரிய நிகழ்வாக இருந்த போது தான் அதற்கு அத்தனை மதிப்பும் உணர்வும் இருந்தது.  

   அப்படிப்பட்ட மிக புகழ்பெற்ற பாடல் தான் சுறாங்கெனி.. 

   எனது தனிப்பட்ட நினைவாக என்றும் நிற்பது,,.என் மூத்த சகோதரன் ஸ்பென்சர் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பல ஆண்டுகள் எங்கள் இல்லத்தின் பேசா இறைவனாய் எங்களுடன்  இருந்தான்.ஒரு கல்லூரி மாணவர் குழு  எங்கள் வீட்டிற்கு முன் இப்பாடலைப் பாடிய  போது படுக்கையிலிருந்து துள்ளித்துள்ளி மகிழ்ந்து அவன் சிரித்தது என்றும் என் நினைவுகளில் .அத்தனை குதூகலமான பாடல் அது.

    இலங்கையைச் சேர்ந்த  சிலோன் மனோகர்  பாடிய பைலா பாடல்கள் இவை என்பதெல்லாம் நான் பிறகு அறிந்து கொண்டவை.

       இத்தனை காலங்களுக்குப் பின்னும் அதே உணர்வை உற்சாகத்தை அளிக்கக்கூடிய எந்த கலை வடிவும் போற்றத்ததகுந்ததே.அதுவே ஒரு படைப்பாளியின் வெற்றி.

குதூகலமான பாடல்களைத் தந்த மனோகருக்கு   அஞ்சலி.

ஜவ்வாது மலைக்குன்றுகளில் …

இயற்கையை விடச் சிறந்த தோழமை எதுவுமில்லை.ஆவணிமாத மழையினால் மண் பூரித்து மரங்களெல்லாம் மலர்ந்து பசுமை போர்த்திய ஜவ்வாது மலை என் பால்யகால நினைவுகளைக் கொண்டு வருகிறது.

        

ஐந்து நிமிடங்களுக்கு ஒருமுறை மாறும் வானிலை  மேகங்கள் மூடுகின்றன,சட்டென சூரியன் ஒளிர்கிறது,சாரல்மழை  பொழிகிறது.சூழ்ந்திருக்கும் மலைக் குன்றுகளின் மீது வெண்ணிற மஞ்சுகள் போர்த்தி மங்கும் காட்சி ஓர் உவகை.சிறிது சிறிதென மேகங்கள் விலகி இச்சந்தன மலைகுன்றுகள் காட்சியளிப்பது ஓர் மகிழ்வு.
        

சாமைப்பயிர் அடர்ந்து பசுமையாய் எங்கும் பரந்திருக்கிறது.இம்மலையின் பெரும்பான்மை பயிர் சாமை தான்.அதற்கு அதிக உழைப்பு தேவையில்லை.விதை விதைத்து ஆடு மாடுகளிடமிருந்து பயிர்களைக் காப்பாற்றினாலே போதும்.பூச்சிக்கொல்லி,உரங்கள்,நீர்பாய்ச்சல் ,களையெடுப்பு எதுவும் தேவையில்லை.

        பழங்குடிகளின் வாழ்வு இத்தகைய  சிக்கல்களற்ற எளிய சுழற்சி தான்.அவசரங்களற்ற மலைப்பகுதியும் ,இம்மண்ணும் என்னுடன் என்றும் இணைந்தவை.

        


எட்டி மரங்களும்,நீர் மருத மரங்களும் அடர்ந்து செழித்து காட்டுக்கொடிகளால் சூழப்பட்டுள்ளன.

   சிறிய மலை ஆறுகளும்,ஓடைகளும் நீர்ப்பெருக்கில் சுழல்களில் நிறைகின்றன.

  மண்ணில் இந்த அமைதியும்,வளமும் பசுமையும் காண்பது பேருவகை. 

ஞாநிக்கு அஞ்சலி

   அரசியல் விமர்சகரான ஞாநியைப் பற்றி  அவர்  எழுதிய  “ஓ பக்கங்கள்”  மூலமே  எனக்கு அறிமுகம்.நான்  பள்ளியில் படித்துக் கொண்டிருந்த காலம்.அரசியல்  பற்றியெல்லாம்  ஆழமான புரிதல்கள் அற்று ,ஏதேனும்  மாற்றங்கள்  நிகழும்  என்று நான் உளமாற  நம்பிய  உணர்ச்சிகரமான  வயது அது.

      கருணாநிதி,ஜெயலலிதா,எம்ஜிஆர்  என்று  எல்லா அரசியல்  வலிமை கொண்ட  தலைவர்களைப்   பற்றியும்  வெகுஜன  இதழ்களில்  புகழுரைகள் மட்டுமே  வெளிவந்த  நேரத்தில்  தைரியமாக  அனைவரையும்  விமர்சித்து ஞாநி  அவர்கள்  எழுதியது  அந்த  வயதில்  எனக்கு  உண்மையில்  மிகவும்  பிடித்திருந்தது. அவரது பல்வேறு  அரசியல்,இலக்கிய  கொள்கைகளில்  முரண்பாடுகள்  உண்டென்றாலும் இலட்சிவாதங்களை  எழுத்துடன் நிறுத்தாமல்  செயல்பட்ட அவரைப் போன்றவர்கள் இன்று அரிதானவர்கள்  என்பதை எப்பொழுதும் நினைப்பேன்.

          தனிப்பட்ட முறையில் என் அரசியல் சிந்தனைகளை மாற்றியமைத்தவர்களில்   திரு. ஞாநி,திரு. துக்ளக் சோ ஆகிய இருவரும் மிக  முக்கியமானவர்கள்.

          அவர்கள்  எப்பொழுதும்  எதிர்மறை விமர்சனங்கள் கொண்டிருந்தாலும், வளைந்தும் குழைந்தும்  அடிவருடிக் கொண்டிருக்கும்  நம் சூழலில்  இத்தகைய  எதிர்ப்புக் குரல்கள் எப்பொழுதும் மிக முக்கியமானவை.அந்த வகையில்  ஞாநி தமிழகத்தின் அறிவார்ந்த அரசியல்  குரலில் முக்கியமானவர்.அவருக்கு என் உளமார்ந்த அஞ்சலி.