நிறம்-அழகான பதிவு

முகப்பு
அறிமுகம்
கதைகள்
நூல்கள்
வெண்முரசு
புகைப்படங்கள்
தொடர்புக்கு
பதிவுகள்
தேடு
 
« கரடி [சிறுகதை]பாலியல் எழுத்தா? »
நிறம்
சமூகம், வாசகர் கடிதம் May 12, 2015
36
அன்புள்ள ஜெ,
நிறவெறி குறித்த இந்த பதிவு என் நெஞ்சை வருடியது!
http://aveenga.blogspot.com/2009/08/blog-post_08.html
உங்கள் கருத்து?
விஜயசங்கர்
அன்புள்ள விஜயசங்கர்,
ஆத்மார்த்தமான பதிவு. நான் இதைப்பற்றி ஆழமாக நினைத்த ஒரு தருணம் சமீபத்தில் வந்தது என் பெண் சைதன்யா ஒருநாள் ”அப்பா எனக்கு ஐம்பது ரூபாய் வேண்டும்” என்று கேட்டாள். ”எதுக்குடி ஐம்பது ரூபாய்?” என்றேன். ”என்னோட ஃப்ரன்டு லாவண்யாவுக்கு பர்த்டே கிஃப்ட் குடுக்கணும்”
வழக்கமாக இதற்கெல்லாம் இருபது ரூபாய்தான் கணக்கு. அதில் நாலைந்து பெண்களாக ஏதாவது சின்ன பரிசு வாங்கி கொடுப்பார்கள். அதற்கு வண்ண தாளில் பொட்டலம் கட்டுவது பெயர் ஒட்டுவது என்றெல்லாம் ஏகப்பட்ட சடங்குகள் உண்டு. ஐம்பது ரூபாய் எதற்கு என்று கேட்டேன்
”லாவண்யாவுக்கு யாருமே கிஃப்ட் குடுக்க மாட்டாங்கதானே…அதுக்குதான்” என்றாள். ”ஏன் கிஃப்ட் குடுக்க மாட்டாங்க?” ”ஏன்னா அவளுக்கு ஃப்ரன்ட்ஸே கெடையாதுல்ல?” ”ஏன் ஃப்ரண்டிஸ் கெடையாது?” ”அவள்லாம் கறுப்புதானே? அதான்”
எனக்கு கொஞ்சநேரம் புரியவில்லை. ”கறுப்பா இருந்தா என்ன?” என்றேன். ”அய்யோ அப்பா , மக்கு மாதிரி பேசாதே. கறுப்பா இருக்கிற பொண்ணுகூட ஃப்ரன்டா இருந்தா கேவலம்தானே? அதான்”
உண்மையில் அதுதான். மேலும் விசாரிக்க விசாரிக்க ஆச்சரியம் தாளவில்லை. அவள் படிக்கும் கிறித்தவ கான்வென்டில் வெண்ணிறத்துக்கு மட்டும்தான் மதிப்பு. பத்து பெண்கள் அபாரமான சிவப்புநிறம். இரண்டு முச்லீம் பெண்கள். நாலைந்து நாயர் பெண்கள். சில கிறித்தவ மீனவப் பெண்கள். ”கறுப்பு டீச்சர் வந்தால்கூட அவங்க கிட்ட மட்டும்தான் பேசுவாங்க. ஸ்கூல் டிராமாவுக்கெல்லாம் அவங்கள மட்டும்தான் சேத்துப்பாங்க…”
அந்த வெண்ணிறப் பெண்கள் பிற பெண்களிடம் நட்பாக இருப்பதில்லை. தங்களுக்குள்தான் நட்பாக இருப்பார்கள். ”நாம நல்ல கொழந்தைங்களா இருந்தா சிலசமயம் நம்மளை சேத்துப்பாங்க” என்றாள் சைதன்யா. அந்த நட்புக்காக மற்ற பெண்கள் நடுவே அடிதடி, போட்டி.
ஒரு நாலைந்து பெண்கள் தீவிரமான கருப்பு நிறம். அவர்களை எவருமே பொருட்படுத்த மாட்டார்கள். என்ன கொடுமை என்றால் அந்தப் பெண்களுடன் பிற கறுப்புப் பெண்களும் சேர்ந்து கொள்ள மாட்டார்கள். அவர்கள் தனியாகத்தான் வர வேண்டும், தனியாகத்தான் போக வேண்டும்.
”மிஸ் எல்லாம் அவங்களை நல்லாவே அடிப்பாங்க. கறுப்பு சனியனேன்னு திட்டுவாங்க” எனக்கு அதிர்ச்சி. அப்படி திட்டுவார்களா என்ன? ”இங்கு தீந்து போச்சுன்னு சொன்னப்ப உன் உடம்பிலே தொட்டு எழுதுன்னு எங்க ஸிஸ்டர் சொன்னாங்க” அந்த சிஸ்டர் அதிவெண்மை கொண்ட சிரியன் கிறித்தவப்பெண்.
”லாவண்யாவுக்கு நீ மட்டும்தான் ஃப்ரன்டா?” என்றேன். ”ஆமா. நானும் கொஞ்சம் கறுப்புதானே. அதனால நான் அவளுக்கு ஃப்ரன்டு. அவ எனக்கு தினமும் நெல்லிக்கா கொண்டு வருவா” நெல்லிக்காய் நாலைந்து நாள் வராவிட்டால் அந்த நட்பும் சிதைவுற வாய்ப்பிருப்பதை மறுக்க முடியாது.
நான் லாவண்யாவுக்கு நூறு ரூபாய்க்கு ஒரு பரிசு வாங்கி கொடுத்தனுப்பினேன். ”நீ இதை எல்லா பொண்ணுகளும் பாக்கிற மாதிரி அவளுக்கு குடு” என்றேன். ”மத்த பொண்ணுகள் என்னை கிள்ளுவாங்களே” ”என்ன பாப்பா நீ? நீதானே கிளாஸிலே கிள்ளல் எக்ஸ்பர்ட்?” ”அது சரிதான்…..” பிறகு ”நானும் பயங்கரமா கிள்ளட்டா?” என்று அனுமதி கோரி பெற்றுக் கொண்டாள்
என்ன நடக்கிறது நம் பள்ளிகளில்? மெல்ல மெல்ல நாம் பண்பாட்டுப் பயிற்சி இல்லாத ஒரு வர்க்கத்தை ஆசிரியர்களாக அனுப்பிக் கொண்டிருக்கிறோமா என்ற எண்ணம் ஏற்பட்டது. நானும்தான் பள்ளியில் படித்திருக்கிறேன். என் கிளாஸில் சுதாகரன் என்ற நாயர் பையன் மட்டும்தான் சிவப்பு. அவனை போட்டு மொத்தி எடுப்போம். செவத்த பயலே என்று அழைத்தால் அவன் வந்து வணங்கி நின்றாக வேண்டும். இல்லாவிட்டால் அடிதான். கல்லூரியில் சிவப்பு நிறமான அய்யர் பையன்களை சட்டையை கழற்றி கிளாஸில் கண்ணீர் மல்க அமரச் செய்வோம்.
இப்போது இந்த அளவுகோல் இன்னும் குரூரமாக ஆகிவிட்டிருக்கிறதா என்ன? அல்லது கான்வென்டுகளில் அப்படி ஆகிறதா?
விசித்திரமான ஒரு பண்பாட்டுத் திருப்பம் நமக்கு நிகழ்ந்திருக்கிறது. சங்க இலக்கியத்தில் அழகிய பெண்ணின் நிறம் என்பது மாமை தான். அதாவது மாந்தளிர் நிறம். மாநிறம். ஆனால் கண்ணகி செந்தாமரை நிறம். அந்த இடைவெளிக்குள் நம் அழகு மதிப்பீடு தலைகீழாக ஆகிவிட்டிருக்கிறது.
அருண்மொழிக்கு அவள் சிவப்பா இல்லையே என்ற ஆதங்கம் உண்டு. எனக்கு என் தங்கை ஒரு பெண் பார்த்தாள். நான் மலையாளப்பெண்ணை மணக்க விரும்பவில்லை, எனக்கு தி.ஜானகிராமனின் கதாநாயகிதான் இலட்சியம். நான் பெண் பார்க்கவே செல்லவில்லை. அந்தப் பெண்ணை அருண்மொழி ஒருமுறை நேரில் பார்த்தாள் ”அப்படி செவப்பா இருக்கிறாளே, நீ எதுக்கு வேண்டம்னு சொன்னே?” என்றாள். ”சிவப்பா இருந்தா வேண்டாம்னு சொல்லக் கூடாதா?” என்றேன்
”நல்ல செவப்பா இருக்கா. உனக்கெல்லாம் கொழுப்பு. திமிர். பெரிய இவன்னு நெனைப்பு…”என்றாள் அருண்மொழி கோபமாக. இன்று வரை புரிந்து          கொள்ள முடியாமல் இருப்பது இந்த கோபம்தான் .
நண்பர் யுவன் சந்திரசேகரின் மனைவி உஷா நல்ல கறுப்பு நிறம். யுவன் உஷா உஷா என்று உருகும் ஆசாமி. அவன் தீ நிறத்தில் இருப்பான். நான் அருண்மொழியிடம் உஷா கறுப்புதான் என்றேன். ”என்னைவிடவா?” ”ஆமாம்” அதன் பின்னர்தான் கொஞ்சம் சமாதானம்.
தமிழில் நாம் கடந்தாகவேண்டிய பண்பாட்டு அகழி இது
ஜெ
நிறம் இனம்:கடிதங்கள்
மறுபிரசுரம்/ முதற்பிரசுரம் டிசம்பர் 2009
36
தொடர்புடைய பதிவுகள்
அசுரர் இன்று
சென்னையின் அரசியல்
அசோகமித்திரன்,வெண்முரசு,சென்னையில் சாதி
காஷ்மீர் கடிதம்
புலியும் புன்னகையும்
ஒரு வெறியாட்டம்
சேவை வணிகர்கள்
டாக்டர்கள் என்னும் சேவைவணிகர்கள்
கேரளக் குடிநிறுத்தம்
தேர்வு – ஒரு கடிதம்
வல்லுறவும் உயிரியலும்
கழிப்பறைகள்- கடிதங்கள்
பொறியியல்- ஓர் ஆசிரியரின் கடிதம்
விதிசமைப்பவனின் தினங்கள்
கடிதங்கள்
ஆசிரியர், கடிதம்
ஆசிரியர்கள்,கடிதங்கள்
ஜக்கி, கடிதம்
கடிதங்கள்
மொழி-கடிதங்கள்
Tags: சமூகம்., வாசகர் கடிதம்
10 commentsSkip to comment form ↓
ஜெயமோகன்
December 23, 2009 at 10:58 am (UTC 5.5) Link to this comment
i have posted now in my own version of what you ve written in ur blog
Complexion of the skin By Writer Jeyamohan
Source: uthamanarayanan.sulekha.com

Complexion of the skin By Writer Jeyamohan

http://uthamanarayanan.sulekha.com/blog/post/2009/12/complexion-of-the-skin-by-writer-jeyamohan.htm

லக்ஷ்மி பாலகிருஷ்ணன்
December 23, 2009 at 11:08 am (UTC 5.5) Link to this comment
//என் கிளாஸில் சுதாகரன் என்ற நாயர்பையன் மட்டும்தான் சிவப்பு. அவனை போட்டு மொத்தி எடுப்போம். செவத்த பயலே என்று அழைத்தால் அவன் வந்து வணங்கி நின்றாக வேண்டும். இல்லாவிட்டால் அடிதான். கல்லூரியில் சிவப்பு நிறமான அய்யர் பையன்களை சட்டையை கழற்றி கிளாஸில் கண்ணீர் மல்க அமரச்செய்வோம்.// இது மட்டும் ரொம்பவே பண்பாட்டு பயிற்சியுடைய செயலா? நிறத்தின் பொருட்டு ஒருவரை அவமதிப்பது குரூரம் என்றால் அது எந்த நிறத்தின் பொருட்டு என்றாலும் தவறுதானே? ஒரு வேளை தமிழ் இணையத்தில் இது அரசியல் சரித்தன்மை உடைய விஷயம் என்பதால் சிவப்பு, நாயர்/அய்யர் பையன்கள் போன்றவற்றை துன்புறுத்துவது சரியாகி விடுமோ என்னவோ..

ஜெயமோகன்
December 23, 2009 at 11:14 am (UTC 5.5) Link to this comment
அது சரி என சொல்லப்படவில்லை. ஆனால் அதை ஆசிரியர்கள் செய்யவில்லை

Dondu1946
December 23, 2009 at 3:40 pm (UTC 5.5) Link to this comment
//என்ன நடக்கிறது நம் பள்ளிகளில்? மெல்லமெல்ல நாம் பண்பாட்டுப் பயிற்சி இல்லாத ஒரு வற்கத்தை ஆசிரியர்களாக அனுப்பிக் கொண்டிருக்கிறோமா என்ற எண்ணம் ஏற்பட்டது. நானும்தான் பள்ளியில் படித்திருக்கிறேன். என் கிளாஸில் சுதாகரன் என்ற நாயர்பையன் மட்டும்தான் சிவப்பு. அவனை போட்டு மொத்தி எடுப்போம். செவத்த பயலே என்று அழைத்தால் அவன் வந்து வணங்கி நின்றாக வேண்டும். இல்லாவிட்டால் அடிதான். கல்லூரியில் சிவப்பு நிறமான அய்யர் பையன்களை சட்டையை கழற்றி கிளாஸில் கண்ணீர் மல்க அமரச்செய்வோம்.//
காரணம் என்னவாக இருக்கும்? ஒருவித பொறாமை என்பதாக வைத்து கொள்ளலாமா? பின்னோக்கி பார்த்து அனலைஸ் செய்ய முயற்சிக்கலாமே.

ஒரு கிளாசில் சராசரி தரத்தில் மார்க்குகள் வாங்கும் பையன்களுக்கு வகுப்பில் எப்போதுமே முதல் ரேங்கில் இருந்து ஆசிரியர்களுக்கு பிரியமான மாணவர்களுக்கும் தர்ம அடி அவ்வப்போது தரப்படும்.

அதே சமயம் முயன்றும் அதிக அளவில் மதிப்பெண்கள் எடுக்கவியலாத மாணவரை மட்டம் தட்டும் ஆசிரியர்களும் உண்டுதானே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

K.R அதியமான்
December 23, 2009 at 3:42 pm (UTC 5.5) Link to this comment
தென் இந்தியர்கள், குறிப்பாக தமிழர்களின் ஒரிஜினல் கலர் கட்ட கருப்பாக இருந்திருக்கலாம். ஆரிய வருகை (படை எடுப்பு அல்ல, வருகை அல்லது migration)க்கு பிறகு, mixing ஆகி, synthesis ஆகி, கட்ட கருப்பிலிருந்து, நல்ல ‘சிகப்பு’ வரை ஒரே குடும்பத்தில், clan இல் இன்று பார்க்க முடிகிறது.
அதுதான் பிரச்சனையே. வட இந்தியர்கள், சீனர்கள், ஆப்பரிக்க இனத்தவர்கள், அய்ரோப்பிய caucasens போன்று ஒரே நிறம் இங்கு இல்லாததால் இது போன்ற விளைவுகள்.

நான் நல்ல ‘சிகப்பு’ என்று பாராட்டுவார்கள். இதமாக இருப்பதால் ஏற்றுக் கொள்வதுண்டு !!! ஆனால் கருப்பு நிறம் தான் நமது வெய்யிலுக்கு ஒத்துவரும் நிறம்.

shaan
December 23, 2009 at 5:48 pm (UTC 5.5) Link to this comment
தமிழ் நாட்டில் நான் சிவப்பு. இங்கே லண்டனில் உண்மையான வெள்ளையர் மத்தியில் நான் கறுப்பு. என்று திருந்துவார்களோ நமது மக்கள்? தென்னிந்தியர்கள் மீது பொறாமை கொண்ட பல வடக்கத்தியர்கள் ‘உவ்வே, சென்னையில் எல்லாரும் கறுப்பு’ என்கிறார்கள். ஆனால் அதே வடக்கத்தியர்களை தான் ஆஸ்திரேலியாவில் ‘கறுப்பு நாயே’ என்று நைய்ய புடைக்கிறார்கள் வெள்ளையர்கள். அப்போது மட்டும் ‘இன வெறி ஆஸ்திரேலியா ஒழிக’ என்று கோஷம் போடுகிறார்கள் இந்த புத்திசாலிகள். எனது வடநாட்டு நண்பன் ஒரு செய்தியைப் யூட்யூபில் பார்த்து விட்டு ‘சென்னையில் எல்லோரும் கருப்பாக இருப்பார்கள் என்று கேள்விப்பட்டேனே, ஆனால் இவர்கள் வெளுப்பாக இருக்கிறார்களே’ என்று கேட்கிறான். என்ன சொல்ல.

இங்கு எனக்கு ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது. நான் அமெரிக்காவில் இருந்த போது என்னுடைய நண்பனிடமும் அவன் மனைவியுடனும் அவர்களுடைய 3 வயது மகளைப் பற்றி பேசிக் கொண்டிருந்தபோது அவள் ‘fair’ என்று கூற வந்ததை வாய்தவறி ‘white’ என்று கூறி விட்டேன். அந்த சின்ன குழந்தை உடனே கோபத்துடன் ‘I am not white, I am BROWN’ என்று தான் ‘brown’ என்பதை மிகவும் பெருமையாக சொன்னாள். இதற்குக் காரணம் அவள் படிக்கும் பள்ளியில் அவரவர் இனத்தின் மீது பெருமையாக இருக்க கற்றுக் கொடுத்திருப்பதே.

இந்தியாவில் காணும் வெள்ளை மோகம் நமது மக்கள் இன்னமும் அடிமை எண்ணம் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள் என்பதயே காட்டுகிறது. வெள்ளையர்கள் வரும் முன் யாரும் கறுப்பு/வெளுப்பைப் பற்றி கவலைப்பட்டதில்லை. இந்தியாவின் பண்டைய ‘sex symbol’ ஆன கண்ணனும், காமனும் கூட கறுப்பு நிறம் தான் என்பது நமது மக்கள் பலருக்கு புரிவதில்லை. அதே நேரம் மேற்கத்திய நாடுகளில் இப்போது வெள்ளை நிறம் என்பதை விட ப்ரௌன் நிறத்தின் மீது மக்கள் மோகம் கொண்டவர்களாக இருப்பதால் ‘tanning’ சிறந்த வியாபாரமாகி விட்டது.

ஜெயமோகன்
December 23, 2009 at 5:51 pm (UTC 5.5) Link to this comment
அன்புள்ள டோன்டு

வெள்ளைநிறமே உயர்ந்தது என்பது நம் பண்பாட்டில் வேரூன்றியது. ஆகவே பொறாமைதான் அதற்குக் காரணம். ஆனால் அது பையன்கள் உலகின் ஒருவகையான சில்மிஷத்துடன் போகும். அரசுப்பள்ளிகளில் பொரித்த மீன் கொண்டு வரும் பையன்களை மற்றவர்கள் தாக்குவதுகூட உண்டு.

ஆனால் வெள்ளைநிறம் மீதான அடிமைத்தனம் என்பது அதல்ல

shaan
December 24, 2009 at 12:54 am (UTC 5.5) Link to this comment
@அதியமான்,
தமிழர்களின் உண்மையான நிறம் கறுப்பு என்பது கருப்பாக இருக்கும் தமிழர்கள் செய்யும் பிரச்சாரம். தமிழ்க்கடவுளான முருகப்பெருமானை செவ்வேள் என்று தான் குறிப்பிடுகிறார்கள். ஒருவகையில் ஐரோப்பியர்கள் கூட ஒரு காலத்தில் கருப்பாகத் தான் இருந்தனர். நாம் எல்லாருமே ஆப்பிரிக்காவில் இருந்து வந்தவர்கள் தான். தட்ப வெப்ப நிலைமைக்கு ஏற்ப நிறம் மாறியது, அவ்வளவே (பின்னர் கலப்பின மணம் இருந்தது என்பதுவும் மறுப்பதற்கில்லை).

வட இந்தியர்கள் அனைவரும் சிவப்பு என்று உங்களுக்கு யார் சொன்னது? எனக்கு நிறைய கருத்த வட இந்திய நண்பர்கள் இருக்கின்றனர். ஐரோப்பியர்களில் கூட ஸ்பெயின் நாட்டவர் பலரும் ப்ரௌன் நிறம் தான். ஆப்பிரிக்காவிலும் லிபியா, எகிப்து போன்ற நாட்டில் பலர் சிவப்பாக இருக்கின்றனர். அது போலவே சீனர்கள் வெளுப்பிலிருந்து ‘dark brown’ வரை வேறுப்பட்ட நிறமுடையவர்களாக இருக்கின்றனர். அதுமட்டுமல்ல, சீனர்களும் தென்கிழக்கு ஆசியர்களும் தென்னிந்தியர்களிடம் இருந்து தோன்றியவர்கள் என்று கடந்த வாரம் வெளியான பன்னாட்டு மரபியல் ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. ஆப்பிரிக்காவிலிருந்து நிலம் வழியாக தென்னிந்தியா வந்த மனிதர்கள் பின்பு வட இந்தியாவிற்கும் தென்கிழக்கு ஆசியாவுக்கும் பரவினர் என்று அந்த ஆராய்ச்சி கூறுகிறது. இந்த ஆராய்ச்சியின் முக்கியத்துவம் என்னவென்றால் இதில் இந்தியா, சீனா, ஜப்பான் உட்பட 10 நாடுகள் ஈடுபட்டு இந்த முடிவுக்கு வந்துள்ளன. “கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றி மூத்த குடி தமிழ் குடி” என்பது உண்மைதான் போல.Scientific consortium maps the range of genetic diversity in Asia, and traces the genetic origins of Asian populations

Dondu1946
December 24, 2009 at 5:14 am (UTC 5.5) Link to this comment
//வெள்ளைநிறமே உயர்ந்தது என்பது நம் பண்பாட்டில் வேரூன்றியது. ஆகவே பொறாமைதான் அதற்குக் காரணம். ஆனால் அது பையன்கள் உலகின் ஒருவகையான சில்மிஷத்துடன் போகும்.//

ஆனால் அவர்களில் சில பையன்கள் பெரியவர்கள் ஆனாலும் அதே மனப்பாங்குடன் இருக்கிறார்கள். அவர்களில் சிலர் ஆசிரியர்களாகவும் ஆகிறார்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

sivasakthi
July 4, 2010 at 2:19 am (UTC 5.5) Link to this comment
நம் மக்கள் இந்த விஷயத்தில் திருந்துவார்கள் என்ற நம்பிக்கை இல்லை.

காரணம் ஒன்று: போன வாரம் கூட நான் கேட்ட ஒரு செய்தி. என் உறவினர் குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு வரன் கிடைப்பதில் உள்ள சிக்கல் அவள் மாநிறம் என்ற காரணம் மட்டுமே. மிக உயர்ந்த படிப்பு, நல்ல குடும்பம் எதுவும் விலை போகவில்லை.

காரணம் இரண்டு: இது இன்னுமே ஆபத்தானது. ஆண்களுக்கான சிகப்பழகு கிரீம்கள். இதுகாறும் பெண்களுக்கே முக்கியமென கருதப்பட்ட சிகப்பழகு இப்போது ஆண்களுக்கும் அத்தியாவசியம். இது பெண்ணுரிமையின் வெற்றி என்றோ ஆணாதிக்கத்தின் வீழ்ச்சி என்றோ எண்ணி பெருமை பட முடியாது.
“உத்தியோகம் புருஷ லக்ஷணம்” என்ன ஆயிற்று?

Comments have been disabled.
வெண்முரசு நாவலை படிக்க

வெண்முரசு விவாதங்கள்

முந்தைய பதிவுகள் சில
கேளிக்கை எழுத்தாளர் vs சீரிய எழுத்தாளர்
கும்பமேளா 8
வெண்முரசு- சுயராஜ்யா கட்டுரை
சாருவுக்கு ஒரு கடிதம்
ஊட்டி சந்திப்பு அலைகள்…
கைதிகள் – கடிதங்கள்
அவுஸ்திரேலியாவில் தமிழ்
நட்பு-ஒரு விளக்கம்
அயோத்திதாசர் என்னும் முதல்சிந்தனையாளர்-4
இந்திய சிந்தனை மரபில் குறள் 5
பதிவுகளின் டைரி
May 2015
M T W T F S S
« Apr    
  1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29 30 31
கட்டுரை வகைகள்

காந்தி இன்று
காந்தி- இந்தியாவின் வை.ஃபை. suneel krishnan
நித்ய சைதன்ய யதியும் காந்தியும் suneel krishnan
பகத்சிங் – காந்தி – தமிழ் இந்து suneel krishnan
Ecce Homo (இவன் மனிதன்!) suneel krishnan
காந்தியின் விளையாட்டு தோழர் – நாராயண் தேசாய் suneel krishnan
விவாத இணையதளங்கள்
வெண்முரசு விவாதங்கள்
விஷ்ணுபுரம்
கொற்றவை
பின் தொடரும் நிழலின் குரல்
பனிமனிதன்
காடு
ஏழாம் உலகம்
அறம்
வெள்ளையானை
குருநித்யா
விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்
சொல்புதிது குழுமம்

அண்மைப் பதிவுகள்
நிறம்- கடிதம்
இணையச் சமநிலை பற்றி… – மதுசூதன் சம்பத்
அழியும் பாரம்பரியம் -மார்க்ஸியம் -கடிதங்கள்
‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘காண்டவம்’ – 4
சாலியமங்கலம் பாகவத நிகழ்ச்சி
உலகத்தொழிலாளர்களே- ஒரு கடிதம்
‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘காண்டவம்’ – 3
தனிவரிசை
பின் தொடரும் நிழல்
‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘காண்டவம்’ – 2
Subscribe in Email
Subscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email
RSS Feeds
 Subscribe in a reader
Copyright
©2015 Writer Jayamohan
Copyright related: Articles published in this website can be shared freely on the Internet. But in order to publish the articles – in part or in full – on other mediums and formats such as print, television, or e-book, prior permission needs to be obtained from the author.
©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.
Desktop Version | Switch To Mobile Version

Advertisements

மரங்களை வெட்டுபவர்களா பழங்குடிகள்? – Dinamani – Tamil Daily News

http://www.dinamani.com/editorial_articles/2015/05/07/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D/article2801101.ece

மோனிகா மாறன்