மலர்ந்தும் மலராத பித்து

நான் பத்தாம் வகுப்பு படிக்கையில் ஒரு விடுமுறை நாளின் மாலை வேளையில் எங்க ஜமுனாமரத்தூர் எஸ்தர் இல்லத்துக்கு NMS ஊழியர் ஒருவர் வந்தார்.எங்க அண்ணன் ஸ்பென்சரைப் பற்றி என் எழுத்துகளை வாசிப்பவர்களுக்குத் தெரியும்.அவன் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பதினேழு ஆண்டுகள் படுக்கையில் இருந்தான்.ஆகவே எங்க ஜவ்வாது மலைக்கு மிஷனரிகள், பாஸ்டர்கள் ஜெபவீரர்கள் யார் வந்தாலும் எங்க வீட்டுக்கு ஜெபிக்க வருவார்கள்.இதெல்லம் சின்ன பிள்ளையிலிருந்து எங்களுக்கு பார்த்து பார்த்து வழமையாக பழகிவிட்டிருந்தது.

அன்று எங்க வீட்டில் நடந்தது இதுதான்.சாட்டிலைட் தொலைக்காட்சிகள் அறிமுகமான நாட்கள்.எங்க வீட்டு ஹாலில் கட்டிலில் ஸ்பென்சர் படுத்திருக்க நாங்கெல்லாம் சுற்றி ஒவ்வொரு இடத்தில் அமர்ந்து பெரிய டிவியில் மலர்ந்தும் மலராத பாடலை சத்தமாக வைத்து பார்த்துக் கொண்டிருந்தோம்.எங்க அப்பா ஒவ்வொரு வரிக்கும் விளக்கம் கொடுக்க நாங்கெல்லாம் பரவசத்தில் நெஞ்சு விம்ம கண்களில் கண்ணீர் திரள அந்த பாடலை ரசித்துக் கொண்டிருந்தோம்.”சிறகில் என்னை மூடி அருமை மகள் போல ” என்ற வரிகளுக்கு எங்க ஸ்பென்சர் படுக்கையில் துள்ளுகிறான். கண்ணதாசன் சிவாஜி சாவித்திரி எம் எஸ் விஸ்வநாதன் டி எம் எஸ் சுசீலா என்று யாருமே சளைத்தவர்களில்லை என்று அப்பா சொல்கிறார்.” அன்பே ஆரிராரிரோ” என்று வரும் போது நாங்க எல்லாரும் பாடுகிறோம்.

எங்க வீட்டில் நாங்கள் எட்டு பேர், அது தவிர வீட்டு வேலையில் உதவும் புஷ்பா, அமுதா,அப்பாவின் சீடர்களான வரதண்ணன், சர்க்கரை சில பல அம்மாவின் எடுபிடிகள் எல்லாம் எப்பவுமே எங்க வீட்டில் தான் இருப்பார்கள்.கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள் நடு வீட்டில் ஒரு பத்து பன்னிரண்டு பேர் உக்காந்து கொண்டு ஒரு சினிமா பாடலை உணர்ச்சிகரமாக கண்ணீர் திரள பரவசத்துடன் ரசித்து பார்த்து கொண்டிருக்கும் காட்சி எப்படி இருந்திருக்கும்.அந்த ஊழியக்காரர் அன்று எங்களுடன் சேர்ந்து அந்த பாட்டை பார்த்து விட்டு ஜெபம் செய்யாமலேயே போய்விட்டார்.சரியான மெண்டல் குடும்பம் என்று மனதில் நினைத்திருப்பார்.

அந்த அளவிற்கு இப்பாடல் எங்க குடும்பத்தில் பிணைந்தது.ஏறத்தாழ நாற்பதாண்டுகளாக எங்க வீட்டில் பிறந்த அத்தனை குழந்தைகளுக்கும் அப்பாவின் அற்புதமான குரலில் தாலாட்டாக பாடப்பட்டது.

நான் தீவிர இலக்கிய வாசிப்பிற்குள் வந்து நிறைய படைப்பாளிகளுடன் உரையாடிய காலங்களில் ஏறத்தாழ அனைவருமே இப்பாடலை கொண்டாடுகிறார்கள் என்று அறிந்து ஆச்சரியப்பட்டேன்.அடடா எங்க பிரின்ஸ் நீல் எத்தனை தேர்ந்த ரசனையாளர். ஒரு சின்ன மலைக் கிராமத்தில் ரேடியோ டிவி எல்லாம் அரிதான காலத்திலேயே தன் வசீகர குரல்களால் எங்கள் உள்ளங்களில் இப்பாடலை பதிய வைத்திருக்கிறார்.

பாசமலர் திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாடல் இசை கவிதை குரல் நடிப்பு என எல்லாவற்றிலும் தமிழ் திரையிசையின் உச்சம் என்று பல தேர்ந்த விமர்சகர்கள் குறிப்பிடுகிறார்கள்.இன்று வரை தமிழ் திரையிசையில் இப்பாடலை எந்த இசையும் தாண்டவில்லை என்றே நான் நினைக்கிறேன்.

இயக்குனர் ஏ.பீம்சிங் இயக்கத்தில் 1961ல் வெளிவந்த பாசமலர் படம் இன்று பார்த்தால் கொஞ்சம் கிரிஞ்ச் தான். ஆனால் பாடல்கள் அத்தனையும் கிளாசிக்.

பாடலின் தொடக்கத்தில் வரும் மெல்லிய இசையும் சாவித்திரி குழந்தையுடன் அமர்ந்திருக்கும் காட்சியுமே அற்புதமானது.பாடலின் பிண்ணனியில் ஒலிக்கும் மெல்லிய தபேலாவும் ஆர்மோனிய இசைக்கோர்வைகளுமே இப்பாடலை அழகாக்குகின்றன.

மலர்ந்தும் மலராத பாதி மலர் போல வளரும் விழி வண்ணமே

வந்து விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக நடந்த கலை அன்னமே” இத்தனை அழகான தமிழுக்காகவே கண்ணதாசனை நான் நேசிக்கிறேன்.

நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளம் தென்றலே வளர் பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு வளர்ந்த தமிழ் மன்றமே”

என்ற வரிகள் சிலப்பதிகாரத்தின் வரிகளில் இருந்து உருவானவை என்று கண்ணதாசனே குறிப்பிட்டிருந்தார்.இத்தனை இனிய சொற்களும் பண்ணும் கொண்டதாலேயே’ என்றும் உளதெங்கள் தமிழ்”என்ற நாம் பெருமிதம் கொள்ளலாம்.தமிழில் கம்பனுக்கோ இளங்கோவுக்கோ கிடைத்திடாத பேறு கண்ணதாசனுக்கு உண்டு என்று நான் எண்ணுவதுண்டு.இலக்கியம் அறியாத பாமரனின் வாயிலும் ஒலித்த வரிகள் கண்ணதாசனுடையவை.திரையிசையின் தாக்கம் அப்படி. எத்தனையோ சனங்கள் “சட்டி சுட்டதடா கை விட்டதடா

நான் பிறந்த காரணத்தை நானே அறியுமுன்னே நீயும் வந்து ஏன் பிறந்தாய்

தாமரை மலரில் மனதினை எடுத்து தனியே வைத்திருந்தேன்”

போன்ற பாடல் வரிகளையெல்லாம் அன்றாடங்களில் சொல்வதைக் கேட்டிருக்கிறேன்.இலக்கியமும் திரைப்பாடலும் ஒன்று என்று சொல்லவில்லை.ஆனால் எந்த கலையுமே மக்களை அடைய வேண்டும்.அந்த விதத்தில் தன் கையில் இருந்த தமிழை வலுவாக பயன்படுத்தியவர் கவியரசர் கண்ணதாசன்.

“சிறகில் என்னை மூடி அருமை மகள் போல வளர்த்த கதை சொல்லவா ‘என்று பி.சுசீலா பாடுகையில் அடடா என்ன குரல் என் எவருக்கும் தோன்றும். சுசீலாவின் இளமைக்கால குரல் அத்தனை பாந்தமானது. டி எம் சௌந்தரராஜன் எல்லா பாடலையுமே கொஞ்சம் அதிக உணர்வுடன் குழைவாகத்தான் பாடுவார்.ஆனால் அதுவே இப்பாடலை இன்னும் உணர்ச்சி மயமாக்குகிறது.

சிவாஜியின் பெரிய புகைப்படத்தின் முன் சாவித்திரி குழந்தையுடன் நின்று பாடுவார். தளர்வாக பின்னப்பட்ட சுருள் கூந்தலும், அழகிய விழிகளும் செந்தூர திலகமுமாய் எத்தனை அழகான சாவித்திரி.சிவாஜியின் கம்பீரத் தோற்றம், ஹேர் ஸ்டைல் , கண்களில் கன்னங்களில் புருவங்களில் அவர் காட்டும் உணர்வுகள் என்று அத்தனையும் இப்பாடலின் பொக்கிஷங்கள்.இத்தனை ஆண்டுகள் கடந்தும் இப்பாடலை ரசிக்க காரணமாக அமைந்ததாலேயே அவர்கள் நடிகர், மற்றும் நடிகையர் திலகங்கள்.

ஏ.பீம்சிங் இப்பாடலை படமாக்கியிருக்கும் கோணங்கள் அற்புதமானவை.ஸ்டுடியோக்களுக்குள் நடந்த படப்பிடிப்புகளிலும் அத்தனை அழகு.அந்த இரண்டு குழந்தைகளும் கூட இப்பாடலை இன்னும் அழகாக்கியவை.

யானை படை கொண்டு சேனை பல வென்று ஆளப் பிறந்தாயடா ” என்று ஒவ்வொரு வரியும் ரசிக்கத்தக்கவை.எழுதிக்கொண்டே போகலாம். எம் எஸ் விஸ்வநாதன் ராமமூர்த்தி இணையரின் இசை ஒவ்வொரு வரியிலும் மனதை வருடுகிறது.

கனவில் நினையாத காலம் இடைவந்து பிரித்த கதை சொல்லவா என்று சாவித்திரி கண்ணீர் சிந்துகையில் எங்கள் குடும்பமே உணர்ச்சி வசப்படுவோம். எல்லா சூழலுக்கும் ஏற்ற மனநிலையைத் தரும் இசை.

சென்னை வானொலியில் இலங்கை வானொலியில் தொலைக்காட்சிகளில் யூடியூபில் என எத்தனை எத்தனை ஆயிரம் முறை கேட்டாலும் பார்த்தாலும் இன்னும் எனக்கு இப்பாடல் தீரவில்லை.

எல்லாவற்றையும் சொல்லி விட்டு இதையும் பதிவிட விரும்புகிறேன்.

எங்க வீட்டில் இருப்பதிலேயே கொஞ்சம் பிராக்டிகலாவர்கள் எங்க அம்மா சொர்ணம் டீச்சரும் , என் தம்பி தினகரனும் தான்.மற்ற எல்லாரும் Emotional idiots தான். “தங்க கடியாரம் வைர மணியாரம் தந்து மணம் பேசுவார் ” என்ற வரிக்கு தினகரன் “எப்படிப் பட்ட பாசமலராக இருந்தாலும் அண்ணன் மட்டும் தங்கமும் வைரமும் தரணுமா என்பான்.நாங்கல்லாம் குட்டி உங்கிட்ட நாங்க யாரும் சீர் கேக்க மாட்டோம் பயப்படாத என்போம். ஆமாம் இந்த பாடல் வரியிலும் இப்படி ஒரு கோணம் உண்டு தானே.

சின்ன சின்ன விஷயங்களையும் ஜாலியாக கொண்டாடி, வெள்ளிக்கிழமைகளில் ஒளியும் ஒலியும் பார்த்து மின்சாரம் இல்லாத இரவுகளில் எங்க வீட்டின் முன்புள்ள அமிர்தி_ வேலூர் தார்ச்சாலை யின் நடுவில் உட்கார்ந்து கதைகள் பேசி(இன்று இச்சாலையில் ஒரு நொடிக்கு பத்து வண்டிகள் போகின்றன)பேய்களுக்கு பயந்து தெய்வங்களை நம்பி வாழ்ந்த எங்கள் இளமைக்காலமும் எங்கள் ஸ்பென்சரும் எங்கள் எஸ்தர் இல்லமும் இன்று நினைத்தாலும் பெற இயலா பொக்கிஷங்கள்.அவ்வளவு வெளிப்படையாக இயல்பாக வாழ்ந்ததே உண்மையான மகிழ்ச்சி.

    ஒரு புறா முட்டையிலிருந்து குஞ்சு பொரித்தாலும், புதிய காஷ்மீர் ரோஜா மொட்டு விட்டாலும் ஆர்ப்பரித்து கொண்டாடும் இயல்பு கொண்ட எங்க குடும்பத்தில் மலர்ந்தும் மலராத பாடலும் ஒரு அங்கமே. நீங்களும் ஒரு முறை கேளுங்கள்.

Leave a comment