தென்னங்கீற்று ஊஞ்சலிலே

நம் மனங்களில் ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு நினைவு படிந்திருக்கும். நான் பிறந்து வளர்ந்த ஜவ்வாது மலையென்றாலே எங்க ஊரின் அமைதி தான் எனக்கு நினைவில் நிறைந்திருக்கிறது.இப்போ எல்லாம் மாறி இருக்கலாம்.ஆனால் நாங்கள் வளர்ந்த காலங்களில் ஜேஎம்எஸ் பஸ் ஹாரன் சவுண்ட், சைக்கிள் மணிச் சத்தங்கள், மாடுகள் கத்துவது கோழிகளின் கொக்கரிப்புகள்
எல்லாமே துல்லியமாக கேட்கும் அளவிற்கு அமைதியான ஊர் எங்க மலை.அப்பவெல்லாம் வானொலியில் சினிமா பாடல்கள் கேட்பது என்பதே பெரிய லக்சுரி தான்.
இப்படியான சூழல்களில் நல்ல குரல் வளம் கொண்டவர்களுக்கு நிறைய மவுசு உண்டு.எங்கள் பள்ளியிலேயே ஆசிரியர்கள் நல்லா பாடும் மாணவர்களை வகுப்புகளில் பாட வைப்பார்கள்.அதெல்லாம் எங்களுக்கு டைம் பாஸ்.
எங்க வீட்டில் அப்பாவின் பாடல்கள் எப்பவும் கேக்கும்.ஆமாம் எங்க அப்பாவுக்கு ரொம்ப அருமையான குரல்.அக்கால டிஎம்எஸ் ,டிஜிஎஸ் தினகரன் குரல்களின் சாயல் அப்படியே இருக்கும். அப்பா நிறைய கிறித்தவ கீர்த்தனைகள், கண்ணதாசன் பாடல்களை ரொம்ப நல்லா பாடுவார்.ஆனால் நான் எழுதப்போவது சில துள்ளலான பாடல்கள் பற்றி.


தென்னங்கீற்று ஊஞ்சலிலே தென்றலில் நீந்திடும் ஓலையிலே …ஆஆஆஆஆ என்று அப்பா பாடுவது இப்பவும் என் காதுகளில் ஒலிக்கிறது.ஜெயகாந்தனின் திருப்பத்தூர் நண்பர்கள் வட்ட சஹ்ஹிருதயர்களில் எங்க தந்தை பிரின்ஸ் நீலும் முக்கியமானவர்.ஆகவே ஜேகே எழுதிய பாதை தெரியுது பார் படத்தின் இப்பாடல் அப்பாவுக்கு தேசிய கீதம்.ஜேகே பற்றி பேசும்போதெல்லாம் பாடுவாங்க.பாரதி ஜெயகாந்தன் மொழிநடைகளில் பித்து கொண்ட எனக்கு இப்பாடலின் ஒவ்வொரு வரிகளும் அத்தனை நெருக்கமானவை.

தென்னங்கீற்று ஊஞ்சலிலே
தென்றலில் நீந்திடும் சோலையிலே
சிட்டுக்குருவி ஆடுது
தன் பெட்டைத் துணையை தேடுது
ஹ்ம்ம் ம்ம்
சிட்டுக்குருவி ஆடுது
தன் பெட்டைத் துணையை தேடுது

ஆஆஆஆஆஆஆஆஆஆ
ஆஆஆஆஆஆஆஆஆஆ

நீல மேகம் ஏழு வண்ண
ஆடையோடு உலாவுது
வானை பூமி அழைக்குது
தொடுவானில் இரண்டும் கலக்குது

அருவி பாடி அழைக்குது கடல் அலையில் கலக்க துடிக்குது என்ற வரிகளெல்லாம் இறவாப்புகழ் பெற்றவை.

நான் பல நேரங்களில் நினைப்பதுண்டு இப்படி இயற்கை, குருவி, தென்னோலை, பாரதி, ஜெயகாந்தன், அப்பா என்று ரசிக மனத்துடன் மட்டுமே வாழ்வு இருந்திருக்கலாம். உலகியலின் அன்றாட நெருக்கடிகள், புழுதி, செக்கு மாடு போல சுற்றிவரும் வேலைகள், மனித மனங்களின் குரூர பிராண்டல்கள்,பணம் சொத்து எல்லாம் நமக்கெதுக்கு. எங்காவது காட்டருவியில் மரத்தடியில் மலையை பார்த்துகிட்டு இலையை புல்லை ரசிச்சிகிட்டு அப்பாகிட்ட கதை பேசிட்டு இருந்திருக்கலாம் என்று.

ஆஹா எனக்கு என்ன பேராசை.எஸ்கேபிசம்.என்ன  செய்வது அவையெல்லாம் கனவுகள்.அட்லீஸ்ட் பாடல்களிலாவது கரைந்து விடலாம் .  ஜானகி மற்றும் பி பி சீனிவாஸ் குரல்களில் இப்பாடல் எத்தனை அற்புதங்களைச் செய்கிறது.மலையாள இசையமைப்பாளர் எம் பி சீனிவாஸ் ஜேகேவுக்காக இசையமைத்த பாடல்.அந்த இசை என்னை எங்கோ தனிமைக்கு இயற்கைக்கு அழைத்துச் செல்கிறது.இப்பாடலின் தொடக்க இசையை கேட்கையில் ஒவ்வொரு முறையும் கண் கலங்குகிறேன்.ஆஆஆஹா என்று சீனிவாஸ் பாடுகையில் சிகரெட் புகை மணக்கும் அப்பாவின் கைகளின் ஸ்பரிசத்தை உணர்கிறேன்.80களில் இலங்கை கூட்டுத்தாபன வானொலி ஒலிபரப்பில் தினமும் இரவுகளில் இப்பாடலை ஒலிபரப்பு வார்கள்.

சின்ன பிள்ளையிலிருந்து கேட்டு கேட்டு இது அப்பாவின் அடையாளமாகவே என் மனதில் நின்று விட்டது.நாங்கள் தவறவிட்டது, அப்பாவின் குரலை பதிவு செய்யாதது.இனி கிடைக்குமா அந்த கம்பீரக் குரல்.நான் சின்ன பிள்ளையிலிருந்தே அப்பா பைத்தியம் என்று எல்லாருக்கும் தெரியும். ஆகவே இப்ப அந்த பாடல்களை கேட்டுக்கொண்டே பைத்தியமாகிறேன்.என் இந்த மனநிலை என் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் நல்லாவே தெரியும்.அதைப்பற்றி கூட என்னிடம் நிறைய பேசியிருக்கிறார்கள்.அவர்களற்று தனித்தியங்க சொல்லித் தந்தார்கள்.எனக்குத்தான் அப்ப தெரியலை. அது எப்படி சாத்தியமாகும்.

    பாதை தெரியுது பார் படத்தின் மற்றொரு பதிவு செய்து படமாக்கப்படாத பாடல் “சின்ன சின்ன மூக்குத்தியாம் செகப்பு கல்லு மூக்குத்தியாம்”

   வெற்றிலை போட்ட உன் வாய் சிவக்கும்.கன்னம் வெட்கத்தினாலே சிவப்திருக்கும்.” என்று அப்பா பாடுவது அத்தனை துள்ளலாக இருக்கும்.இந்த பாடல்களை அப்பாவை பாடச்சொல்லி ஜெயகாந்தனே கேட்பார்.

       அப்பா ரசித்து பாடும் மற்றொரு பாடல் 

    “என்னாடி முனியம்மா ஒன் கண்ணுல மையி.

மாடு ரெண்டும் மதுரவிள

மணிகள் ரெண்டும் தஞ்சாவூரு

குட்டி ரெண்டும் கும்பகோணம்”

விளாத்திகுளம் ஸ்வாமிகள் எழுதி டிகே எஸ் நடராசன் பாடிய இப்பாடலின் இசை இன்றும் உயிர்ப்பானது.இசைக்கு உள்ள சிறப்பு அது நம்மை வாழ்ந்த காலங்களுக்கு அழைத்துச் செல்லும்.

நீங்களும் இப்பாடலைக் கேளுங்களேன்.

https://youtu.be/Dw77uCP_PdI?feature=shared

Leave a comment