அறத்தை வென்ற முறம்

இதைப்பற்றி எழுதக்கூடாது என்று தான் இருந்தேன்.ஆனாலும் ….

      இதுவரை வந்த எல்லா பிக்பாஸ் நிகழ்ச்சிகளை முழுமையாக இல்லாவிட்டாலும் கூட போட்டியாளர்கள் பெயர் தெரியும் அளவிற்கு பார்த்திருக்கிறேன்.கமல்ஹாசன் வரும் வார இறுதி எபிசோட் களை கட்டாயம் பார்த்து விடுவேன்.  இந்த ஆறாம் பகுதி ஜிபி முத்து இருந்ததால் ஆரம்பத்தில் ஆர்வமாகவே  பார்த்தேன். ஆனால் ஒரு சில நாட்களிலேயே என்னால் பார்க்கவே முடியாத அளவிற்கு ஆகிவிட்டது.காரணம் எந்த சட்டமும் இல்லாமல் அராஜமாகப் பேசி நடந்துகொண்ட ஒரு போட்டியாளர்.என்னால் அத்தனை திமிரான உடல் மொழியை எந்தச் சூழலிலும் சந்திக்கவே முடியாது.பார்க்கப் பார்க்க எனக்கு  அருவருப்பாக இருந்தது.வாழ்வில் எதிலும் ஒரு நியதி இருக்க வேண்டுமென எண்ணுபவள் நான்.அப்படிப் பார்த்தால்பிக்பாஸ் என்ற கான்செப்டே தவறானது தான்.இருந்தாலும் அது ஒரு சுவாரஸ்யமான விளையாட்டாகவே எனக்கு இருந்தது.

இருப்பினும் என்னால் எந்த சூழலிலும் இத்தகைய ஆராஜகங்களை எதிர்கொள்ளவே இயலாது. விலகிச்சென்றுவிடுவதே என் இயல்பு.என்ன செய்வது லாசாராவையும் வண்ணதாசனையும் வாஞ்சிக்கும் பூஞ்சை மனத்தை என் பெற்றோர் சொர்ணமும் பிரின்சும் அளித்து விட்டனர்.நாங்களும் இந்த உலகில் ஒரு ஓரத்தில் நின்று கொள்கிறோம்.

      அத்தனை அகங்காரம், அடாவடி கட்டுப்பாடின்மை என இருந்த  அந்த போட்டியாளரை கமலஹாசனாலும் கட்டுப்படுத்த முடியவில்லை என்ற எண்ணம் எனக்கு தோன்றியதும் இரண்டாவது வாரத்திலேயே பார்ப்பதை நிறுத்திவிட்டேன்.இறுதியில் அவரே கோப்பையை வென்றிருக்கிறார்.

          அதனால் என்ன இருக்கட்டும்.நிஜ வாழ்வில் இதே போன்ற பல நிகழ்வுகளை நேரடியாக அனுபவித்திருக்கிறேன்.எத்தனை அறங்கள் பேசினாலும் உலகின் பார்வையில் வெற்றி மட்டுமே தெரியும் என்பதே யதார்த்தம்.எனவே இறுதி வாரத்தில் சமூக வலைத்தளங்களில் இதைப்பற்றிய கணிப்புகள் வரும்போதே அசீம் தான் வெல்வார் என்று எனக்கு தெரிந்திருந்தது.

               நான் எழுத நினைத்த நிகழ்வு இதுதான்.வெற்றி மேடையில் விக்ரமன் புன்னகையுடன் இரண்டாமிடத்தை ஏற்றுக்கொண்டு அறம் வெல்லும் என்று சொன்ன கணத்தில் என் கண்கள் கலங்கி விட்டன.எத்தனை முறை நான் இத்தகைய சூழலில் நின்றிருக்கிறேன் என நினைவில் வந்தது.ஆம் கடைசி நொடியில் இழந்து நின்றாலும் விக்ரமனின் அந்த புன்னகைத்த முகம் என்னை உலுக்குகிறது.இதே போன்று அத்தனை தகுதிகளும் இருந்தும் என் வாழ்வில் கல்வி, வேலை, பதவி உயர்வு என் எல்லா நிலைகளிலும் நான் ஏமாற்றப்பட்டிருக்கிறேன்.ஆகவே எத்தனை அடாவடிகள் வென்றாலும் அவற்றை புன்னகையுடன் கடக்கும் இதயங்கள் என்றும் வாழ்க.