விளி

    சமீப காலங்களில் எனக்கு பெரிதாக வேலை எதுவும் இல்லை (மத்த நேரத்தில் கிழிச்சியான்னு கேட்காதீங்க) என்னளவில் அன்றாடப் பணிகள் என்பவை கணக்கில் வராது.ஆக்கறது துன்றது வேலைக்கு போறதெல்லாம் ஒரு பொழப்பான்னு கேக்கற ஆளு நான்.அன்றாட உலகியலில் இருந்து மீறி தன் உள்ளத்திற்காக எதையாவது செய்ய வேண்டும் என்பது என் எண்ணம்.இலக்கியவாதிகளின் சேர்க்கை வேறு ,பின்ன அப்படித்தான் இருக்கும் .

வேறு ஒன்றும் இல்லை ஒரு மாதமாக இலக்கியத்திலிருந்து விலகி இருக்கிறேன்.அதனால் நிறைய நேரம் இருக்கு. கொஞ்ச நாள் வாசிப்பு எழுத்து எல்லாம் இல்லாமல் இருக்கத் தோன்றியது. நினைவறிந்த நாளில் இருந்து நான் வாசிக்காமல் இருப்பது கடந்த ஒரு மாதமாகத்தான்.பலருக்கு இருக்கும் பல addictions போல எனக்கு புத்தக வாசிப்பு ஒரு மனதை மயக்கும் போதை தான். என்னுடைய மன வலுவை (will power) செக் பண்ண தோன்றியது. தமிழ் ஆங்கிலம மொழிபெயர்ப்புகள், புனைவுகள், அபுனைவுகள் எதுவுமே வாசிக்காமல் முதல் இரண்டு நாட்கள் எனக்கு புது அனுபவமாக இருந்தது.எந்த சூழலிலும் ஒரு பத்து நிமிடம் கிடைத்தாலும் சிறுகதையோ நாவலோ எடுத்து வாசிப்பது என் பழக்கம் என் மூத்த மகள் ஓவியா பிறந்து சில மணி நேரங்களில் மருத்துவமனையில் பார்க்க வந்த என் தம்பி தினகரன் உனக்கு வேற எதாவது வேணுமா என்று கேட்டபோது “ குட்டி விகடன் வாங்கிட்டு வா என்றேன்.எல்லாரும் சிரிச்சாங்க.எங்க அம்மா “அடப்பாவி மகளே பிள்ள பெத்து ஒரு மணி நேரத்துல கதை படிக்கறவ நீதான்” என்றார்கள். பள்ளி கல்லூரி காலங்களில் முக்கியமான தேர்வுகளுக்கு முன் ஜெயகாந்தனையோ கிராஜநாராயனையோ வாசிப்பது என் வழக்கம்.அப்படி மனம் ரிலாக்சாக இருந்தால் எனக்கு தேர்வில் நான் படித்த பாடங்கள் அச்சடித்தது போல நினைவுக்கு வரும்.எப்பொழுதும் தேர்வுகளில் முதலிடம் பெற்றிருக்கிறேன்.என்னைச்சுற்றி எப்பவும் புத்தகங்கள் இருக்கும் இப்ப போன் கிண்டில் என மாறியிருக்கிறேன்.இப்ப விஷயம் இதுதான். வாசிப்பின்றி வாழ முடியுமா என்ற challenge ல் இருக்கிறேன்.நாலு பக்கம் வாசிப்பதற்குள் சலிப்படைபவர்களுக்கு இது சிரிப்பாக இருக்கும் வாழ்க்கையில் இல்லாதது எது? நான் இங்கு ஒரு இலக்கிய கிறுக்கு.
    வாசிப்பற்ற இந்த சூழலில் சமூக வலைதளங்களில் சில பல காணொலிகள் ,அன்றாட வாழ்க்கை திரைச்சொட்டுகளை பார்க்கிறேன் youtube facebook என்று எனக்கு தெரியாத உலகில் வலம் வருகையில் நான் கவனித்த ஒரு வித்தியாசமான விளி தான் இதை பதிவு செய்ய காரணம். விளி என்றால் என்னவென்று நிச்சயம் இந்த தலைமுறைக்குத் தெரியாது. விளி என்பது மற்றவர்களை அழைக்கும் சொல்.
இன்றைய இளம் பெற்றோர் பிறந்து ஒரு மாதம் முதல் பதின் வயது வரையுள்ள எல்லா பிள்ளைகளையும் இவங்க அவங்க என்று மரியாதையாக அழைக்கிறார்கள்.எனக்கு முதலில் இது திகைப்பாக இருந்தது .நன்கு கவனித்த பின்னரே இது இப்ப எல்லாரும் பயன்படுத்தும் முறை என்று தெரிகிறது.பிள்ளைகளை பெற்றோர் நேசிப்பது மானுட இயல்பு தான்.ஆனால் என்னமோ குழந்தை என்பதே ஏதோ விஐபி போலவும் உலகில் இல்லாத அருமணி போலவும் இவர்கள் நடந்து கொள்வது எனக்கு குமட்டுகிறது. மூனு மாத கைக்குழந்தையை மேடம் அப்டித்தான் அடம் பண்ணுவாங்க, சார் தூங்காறதே பெரிய சாதனை என்கிற அளவுக்கு பெற்றோர் பேசுவது இன்று இயல்பாக உள்ளது .
      வம்சம் திரைப்படத்தில் ‘அடியே மலரு புள்ளேளேளேளே….’ன்னு கூப்பிடுவாங்களே அப்படியெல்லாம் எங்க மலைப்பகுதிகளில் கூவித்திரிந்து வளர்ந்தவள் நான்.பக்கா வட தமிழ் நாட்டுக்காரி.தனிப்பட்ட முறையில் எனக்கு எல்லாரையும நீ வா போ என்று விளிக்கவே பிடிக்கும் மரியாதை எல்லாம் மனதோடு சரி.எங்க பகுதி வழக்கப்படி பெருசுகள் கிளவிகள் அன்றாடம் காணும் செக்யூரிட்டிகள் பூக்கார அக்காக்கள் அண்ணாக்கள் எல்லாரையும் வா போ என்பேன்.அவர்களும் பதிலுக்கு அப்படித்தான் சொல்வார்கள் அது எனக்கு பிடிக்கும்.
சமத்துவம் கம்யூனிசம் என்றெல்லாம் சின்ன பிள்ளையில் இருந்தே மனதில் இருந்ததால் எவரையும் பெயர் சொல்லி அழைக்கும் இயல்புடையவள் நான்.
.ஜெயகாந்தனிடமே ஜேகே என்றே பேசியிருக்கிறேன்.சாருநிவேதிதாவை டியர் சாரு என் விளித்தே பல உரையாடல்கள் நடந்திருக்கின்றன ஜெயமோகனையும் ஜெ என்று அழைத்தே பேசியிருக்கிறேன்.இவர்களெல்லாம் என் தந்தையின் வயதொத்தவர்கள், என் இலக்கிய ஆசான்கள் ஆதர்சங்கள்.அவர்களிடமே இப்படி பேசியிருக்கிறேன்.அப்படி அழைப்பது எவருடனும் எனக்கு அணுக்கமான மனநிலையைத் தரும்.
என் தம்பிகள் தங்கைகள் என் ஜூனியர்கள் எவரும் என்னை அக்கா என்று அழைத்ததில்லை.அவர்கள் இயல்பாகவே மோனி என்று கூப்பிடும் அளவில் தான் என் தோழமை இருக்கும்..என் பிள்ளைகளே ரெண்டு முறை அம்மா என்று விட்டு ஏ மோனிகா என்பார்கள்.என் பள்ளி, ஆசிரியப்பயிற்சி தோழியர் இன்று போனை எடுத்தாலும் “அடி நாயே மோனி என்னாடி போன் பண்ணவே மாட்டியா என்றே உரையாடலைத் தொடங்குவார்கள் .அதெல்லாம் ஜென்மாந்திர பிணைப்பு .
     இப்படி பட்ட இயல்பு கொண்ட எனக்கு பெற்றோர் பிள்ளைகளை சார், ஐயா,அம்மையீர், ஐயன்மீர் மாண்புமிகு என்ற ரேஞ்சில் விளிப்பது வேடிக்கையாக உள்ளது.ஈராயிரக் குழவிகள் என்று இவர்களை கவிஞர் மகுடேஸ்வரன் சொன்னது சரிதான்.எல்லாம் குழவிக்கல்லுங்க தான். குழந்தைகள் இயல்பாக அழுது அடம்பிடித்து அடி வாங்கி கீழே விழுந்து எழுந்து வளர வேண்டும்.அதை விட்டு விட்டு என்னமோ முன்னாடி பிள்ளை வளர்த்தவர்களுக்கெல்லாம் எதுவுமே தெரியாது என்பது போல இவர்களே பிள்ளைகளை கூண்டில் வைத்து வளர்த்து விட்டு அப்புறம் அதுக்கு பறக்க முடியல என்று குழந்தை வளர்ப்பையே பெரிய ஸ்ட்ரஸ் ஆக மாற்றிக் கொள்கிறார்கள் .இப்படி வளரும் பிள்ளைகளால் சமூகமே பாதிக்கப்படுவது இவர்களுக்குத் தெரியுமா.

    நான் தொடக்கப்பள்ளி ஆசிரியை. வகுப்பில் ஒரு பென்சிலோ புத்தகமோ தவறி கீழே விழுந்து விட்டால் மிஸ் அதை எடுத்துக் குடுங்க என்று சாதாரணமாக என்னிடம் கேட்கிறார்கள்.ஈவ்னிங் வந்து என் புத்தகப் பையை தூக்கிட்டுப் போ என்று அன்னையருக்கு ஆணை இடுகிறார்கள்.பள்ளியில் விட வரும் பெற்றோரை என் செருப்பை கழற்றி வெளியில் வை, பென்சிலை ஷார்ப் பண்ணி நோட்டை பையிலிருந்து எடுத்து வச்சிட்டு போ என்றெல்லாம் அதிகாரமாகச் சொல்கிறார்கள்.மழலை மொழியில் இல்லை.கடுகடுப்பான முகங்களுடன் சிடுசிடுக்கிறார்கள். குனிஞ்சு ஒரு பொருளை எடுக்கத் துப்பில்லை.இதுல ஆணவ மசுரு வேற.தவறான செல்லங்கொஞ்சுதல்களால் இப்பிள்ளைகள் தங்களைத் தாங்களே பெரும் பொக்கிஷங்களாக, தம் பெற்றோருக்கு பிறந்த வரமாக எண்ணிக் கொள்கிறார்கள்.தமக்கு வேலை செய்ய கிடைத்த அடிமைகளாகவே பெற்றோரை நடத்துகிறார்கள். அதையே சமூகத்திடமும் எதிர்பார்க்கிறாரக்ள். எதையும் மிகைப்படுத்தவில்லை.அன்றாடம் இது போல் பல நிகழ்வுகளைப் பார்க்கிறேன்.

     நீங்களே பொது இடங்களில மால்களில் தொடர்வண்டிகளில் சிறு பிள்ளைகளையும் பெற்றோரையும் கவனித்து பாருங்கள்.எந்நேரமும் பிள்ளைகளுக்கு ஏவல் செய்து கொண்டு அவர்களை please  பண்ணும் பெற்றோர்.அவர்கள் பிள்ளைகளின் முகங்களே முன் உள்ள பிள்ளைகளுக்கும் தற்போதைக்கும் உள்ள வேறுபாட்டை காண்பிக்கும்.
நாங்கலெல்லாம் பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கும் ஊரில் உள்ள பெருசுகளுக்கும் பக்கத்து வீட்டு அக்காக்களுக்கும் தண்ணிக்குடமும் பெட்டியும் பையும் தூக்கிச் சுமந்து, மாவு அரைத்து தந்து, திட்டுகளும் அடிகளும் வாங்கியவர்கள். இதையெல்லாம் சொன்னால் பூமர் என்பார்கள் .இருக்கட்டும்.அதற்காக எல்லாருமே கண்டிக்காமல் விலகிவிட முடியாது.
     முதலில் குழந்தைகளை வா போ அவ இவ அவன் என்றெல்லாம் சொல்லுங்க.அது இயல்பானது தான். சிறிய தவறுகளுக்கு கண்டியுங்கள் திட்டுங்கள். உங்க பிள்ளைகளும் இந்த உலகில் மனிதர்களாகப் பிறந்தவர்கள் தான்.தேவலோக வாசிகள் அல்ல.எல்லா சங்கடங்களையும் பழக்குங்கள்.அவர்கள் மனம் புண்படட்டும் .அப்பத்தான் உலகை எதிர்கொள்ள இயலும்.
   பதினான்கு வயதுவரையுள்ள பள்ளி அளவிலான மாணவர்களுடன் தினமும் உரையாடுகிறேன்.நிறைய பேருக்கு யூடியூப் இன்ஸ்டாவில் சேனல் ஆரம்பித்து ஃபேமஸ் ஆகி சம்பாதிக்கனும் என்பதே இலக்காக உள்ளது.சொகுசாக வளரும் பிள்ளைகள் அவர்கள் காணும் உலகின் இயல்பில் இருக்கிறார்கள். ஆனால் பெரிய பெரிய இலக்குகள் கடின உழைப்பு சின்சியாரிட்டி என்பதெல்லாம் அரிதாகி விட்டிருக்கிறது.இதற்கான விளைவுகள் இன்னும் சில தசாப்தங்களில் தெரியும் .
    எங்க அப்பா ஒரு கதையை சுவாரசியமாக சொல்லுவாங்க.எங்க பெரியப்பா ஸ்டீபன் லயனல் ஐயர் அவர்கள் குடும்பத்தில் மூத்தவர்.அவர்  முதன்முதலில் ஆசிரியப்பயிற்சிக்கு சென்று லீவில் வீட்டிற்கு வந்த போது எங்க தாத்தா ஞானமுத்து ஐயா
“ வாங்க ஸ்டீபன் .உக்காருங்க” என்று மரியாதையாக கூப்பிட்டிருக்கிறார். அப்ப எங்க பாட்டி எஸ்தர் டீச்சர் “உங்க அப்பா ஒரு மாய்மாலக்காரர்.சொந்த மகனைப் போயி வாங்க என்று திடீர் மரியாதை கொடுக்கிறார் பாருங்க” என்று ஏசினார்களாம்.
   காதலிக்க நேரமில்லை படத்தில் டிஎஸ் பாலையா “ அசோகர்  உங்க மகரா? என்று கேட்பார். ன் னுக்கு பதில் ர் விகுதி. இதெல்லாம் அப்ப சும்மா காமெடியா நடந்தவை.
ஆனால் நிச்சயமாக இன்றைய இளம் பெற்றோர் சீரியசாகவே “இது எங்க மகர்.எல்கேஜி படிக்கிறாங்க.”என்று அறிமுகம் செய்தாலும் செய்வார்கள்.நிஜமான மாய்மாலக்காரர்கள்.
கவுண்டமணி சொல்ற மாதிரி ர்ர் வுட்டீங்களான்னு கேட்க வேண்டியது தான்.
    இதையெல்லாம் பார்த்து விட்டு பேசாம நம்ம இலக்கிய உலகத்துக்கே போயிடலாம்னு வாசிப்பு விரதத்தை முடிச்சு கிண்டில் புக்சை திறந்துட்டேன். எப்ப பாரு சோறு ஆக்கறது வீட்டை சுத்தம் பண்றது சாமி கும்பிடறது சினிமா பாடலுக்கு ரீல்ஸ்பண்றது, சினிமா கிசுகிசு என்று சோஷியல்மீடியா ஆழாக்கு உலகு எனக்கு மூச்சு முட்டுது.   அதைவிட பஷீரும் தி.ஜானகிராமனும் எஸ்.ராமகிருஷ்ணனும் வாழ்ந்த உலகு எத்தனையோ பரந்து விரிந்தது.அது தான் எனக்கான உலகம் .

Leave a comment