ரயில் அடுக்கும் உணவு அரசியலும்

சமீபத்தில் இணையமெங்கும் பகிரப்படும் இந்த பழைய பித்தளை பாத்திரத்தை பார்த்திருப்பீர்கள். நம்மவர்கள் இப்படிப்பட்ட பழைய சென்டிமென்ட்களை வெறித்தனமாக ஷேர் பண்ணுவார்கள்.

உண்மையில் அதற்குப் பின்னுள்ள எந்த அரசியலும் நடுத்தர வர்க்கத்திற்கு தெரிவதில்லை. இத்தகைய பித்தளை பாத்திரங்களை அக்காலத்தில் பயன்படுத்தியவர்கள் யாரென்று பார்த்தால் அது சுலபமாக புரியும்.உயர் வகுப்பு பிராமணர்களும் வசதியான செட்டியார்களும் தான். அவர்கள்தான் காசிக்கும் பிற புண்ணிய தலங்களுக்கும் யாத்திரை செல்லும்போது இவ்வாறு கொண்டு செல்வார்கள். ஏனென்றால் அவர்கள் மற்றவர்களிடமிருந்து எந்த உணவையும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அரிசி பருப்பு என்று பொருட்களாக வாங்கி அவற்றையும் “ஜலப்ரோதனம் “என்று சொல்லும் தண்ணீர் தெளித்து தீட்டு கழித்துவிட்டு தான் சமைப்பார்கள். அதற்காகத்தான் இந்த பாத்திரங்கள். மற்ற இடைநிலை சாதிகளும் தாழ்த்தப்பட்டவர்களும் போகும் வழியில் உள்ள ஊர்களில் கிடைக்கும் உணவுகளை வாங்கி சாப்பிட்டுவிட்டு செல்பவர்கள். எனவே அவர்கள் யாரும் இந்த பாத்திரங்களை பயன்படுத்தியதில்லை. இன்னும் சொல்லப்போனால் பித்தளை , செம்புப் பாத்திரங்கள் போன்றவற்றை உயர் சாதியினரே பயன்படுத்தினர். மற்றவர்களெல்லாம் மண் பானைகளையும் ஈயச்சட்டிகளையும் தான் பயன்படுத்தினார்கள்.

இன்று அவற்றை நமது பாரம்பரியமாக பதிய வைக்கிறார்கள். இதன்மூலம் அவர்கள் பின்பற்றிய முறைகள்தான் சரியானவை என்று மறைமுகமாக நம்மிடையே பரப்புகிறார்கள்.

இதேபோன்று திருநெல்வேலி மதுரை மாவட்டங்களின் உணவுகள் பற்றி ஒரு சென்டிமென்டான அழகிய பதிவு ஒன்று பகிரப்படுகிறது. உளுந்தங்களி சொதி புளிக் கூட்டு பாவக்கா பருப்பு என அதில் கூறப்படும் உணவுகளை சற்று கவனித்துப் பார்த்தால் அவையெல்லாம் சைவப் பிள்ளைமார்களின் உணவு என்று நாம் தெரிந்து கொள்ளலாம்.காந்திமதி ஆச்சி என்று வரும்போதே அதிலுள்ள சாதிய உட்பிரிவை நாம் உணர்ந்து கொள்ளலாம். திருநெல்வேலிக்கும் எனக்கும் ஸ்னானபிராப்தி கிடையாது. அதனால் இந்த உணவுகளை பற்றி எனக்கு முழுமையாக தெரியாது. எங்க முன்னோருக்கு முன்னோர் எல்லாம் ஒரு காலத்துல திருநெல்வேலியில் இருந்ததா சொல்லுவாங்க. அவ்வளவுதான் நான் பக்கா வடார்க்காடு. எனது மூத்த சகோதரராக நான் நினைக்கும் கதைசொல்லி பவா செல்லதுரை அண்ணனுடைய சில உரைகளை நீங்கள் கேட்டிருக்கலாம். அவர் பேசும் அதே ஸ்லாங் தான் என்னுடையதும்.

“அந்த ஆயா தான் அப்டி சொல்லுச்சி”இந்த ஸ்டைல் எட்டிப்பார்த்தா அது எங்க நார்த் ஆர்காட்.அதைப்பற்றி தனியாக ஒரு பதிவில் எழுதுகிறேன். அப்படித்தான் மதுரையைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஆனால் மதுரக் காரன்டா திருநெல்வேலிக் காரன்டா என்றெல்லாம் இந்த உணவுகள் பகிரப்படுகின்றன. அக்காலங்களில் இந்த உணவுகளையெல்லாம் எளிய மக்கள் யாரும் இவர்கள் சொல்லும் அளவிற்கு பயன்படுத்தியதில்லை. மேலும் இப் பதிவுகளில் அசைவ உணவுகளே இருக்காது. ஆடும் கோழியும் மீனும் கருவாடும் இல்லாமல் தமிழ்நாட்டில் எந்த பாரம்பரிய உணவும் இருக்காது. ஆனால் இவர்கள் மறைமுகமாக சைவ உணவுகளே நம் பாரம்பரியம் என்று மனதில் பதிய வைக்கிறார்கள். இது புரியாமல் நாமும் ஃபேஸ்புக் வாட்ஸ்அப் ட்விட்டர் என்று இவற்றை பரப்பிக்கொண்டு இருக்கிறோம். இவற்றில் உள்ள எளிய அரசியலை புரிந்து கொண்டாலே எல்லாருக்கும் உண்மை தெரியும்.

இப்பதிவிற்காக வாசகசாலை நண்பர்கள் யாரும் என்னை பேஸ்புக் பெரியாரிஸ்ட் வரிசையில் சேர்த்து விட வேண்டாம்.திராவிடம் பெரியார் போன்ற வார்த்தைகளே எனக்கு ஆகாது.

நான் வணங்கும் என் ஆசான்கள் பாரதி தொடங்கி ஜெயகாந்தன், ஜெயமோகன், நாஞ்சில் நாடன் தி ஜானகிராமன் சுஜாதா பாலகுமாரன் லாசாரா சுந்தர் ராமசாமி என அனைவரும் பிராமணர்கள் அல்லது தங்களை பிராமண நெறியின் வழிவந்ததாக பிரகடனப்படுத்திக் கொண்டவர்களே.எனவே இது சாதாரண பிராமண துவேஷப் பதிவு அல்ல.

ஆகையால் இணையத்தில் பகிரப்படும் தகவல்களில் மறைந்துள்ள சாதிய வேறுபாடுகளை உணர்வது அவசியமானது என்பதை பதிவிட விரும்புகிறேன்.