கவிதை சொல்வனம்

சிறகசைவில் பறவையாகும்
சிறுமகள்களுக்கு
‘அம்மு’ என்பது பொதுப்பெயர்
யாரும் அமர்ந்திராத
கடைசிப் படியில் குறுகி அமர்ந்து
வீட்டுப்பாடம் எழுதி
இல்லத்தை அழகாக்கும் வெண்ணிலாக்களுக்கு
‘அம்மு’ என்பது பொதுப்பெயர்
மாநகரில் சிறு பிளாஸ்டிக் குவளையில்
வெந்தயம் விதைத்து
அப்பாக்களுக்கு விவசாய
நுணுக்கங்களை
கற்பிக்கும் ஓவியாக்களுக்கு
அம்மு என்பது பொதுப்பெயர்
ஊதா வண்ணத்தை
வீடெங்கும் நிறைத்து
தகப்பன்களின் சட்டைகளையும்
பர்பிளாக்கும் இலக்கியாக்களுக்கு
அம்மு என்பது பொதுப்பெயர்
‘நாளைக்கி ஏன் நீ என்ன தண்ணியில
எறங்க விடல’ என்று அம்மாக்களை
காலங்களற்று வாழ்விக்கும்
நிரஞ்சனாக்களுக்கு
‘அம்மு’ என்பதுபொதுப்பெயர்
சட்டென ஒருநாளில் திருமணம் முடித்து
அப்பாக்களை கலங்கவைத்துச் சென்றுவிட்டு
ப்ளூமௌண்ட்டனில் மகிழ்வுச்சிதறல்களைக் கரங்களில்
ஏந்தி வந்து தாத்தாக்களாய் மாற்றும்
உன்னத உயிர்களுக்கு
‘அம்மு’ என்பது பொதுப்பெயர்.
-மோனிகா மாறன்
வேலூர