ரோஹித் வெமுலா

ரோஹித் வெமுலா

DATE

இளங்கவிஞனின் கடைசிக் கவிதை

இயற்கையை நட்சத்திரங்களை விரும்பாத கவிஞர்களுண்டா.ஒரு தேர்ந்த படைப்பாளியின் நடையினைப்போன்ற தற்கொலை வாக்குமூலத்தை வாசித்த எவருக்கும் ஒருநொடி அதன் இழப்பு மனதில் அழுத்தாமலிருக்குமா?
ஒரே ஒரு வெமுலாவின் உள்ளமா அக்கடிதம்? புரையோடிப் போயிருக்கும் இத்தேசத்தின் கோர யதார்த்தத்தில் ஒவ்வொரு நொடியும் அழுத்தப்பட்டு மூச்சுத் திணறிக்கொண்டிருக்கும் லட்டோபலட்சம் உயிர்களின் குரலன்றோ.
பகவத் கீதையும் அத்வைதமும் அறநெறிகளும் உலகிற்கு அளித்த தேசமென்று கூறிக்கொள்ளும் பாரதத்தின் மனசாட்சியை பார்த்து வெமுலா எழுப்பிய கேள்விகளுக்கு யார் பதிலளிக்க இயலும்.
தாழ்த்தப்பட்ட மக்கள் உயர் கல்விக்கோ உயர் அதிகாரங்களுக்கோ வருவதை ஏற்றுக்கொள்ள இயலா இடைநிலை, உயர்சாதி மனநிலைகளுக்கு பலியானவனே வெமுலா.
இன்றும் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் விடுதிகளிலும் பணியிடங்களிலும் சாதியின் பெயரால் ஒதுக்கப்பட்டே உள்ளனர் தாழ்த்தப்பட்டோர் என்பதே உண்மை.
அரசியல் சட்டங்களில் மட்டும் இட ஒதுக்கீடு அளித்துவிட்டால் ஆண்டாண்டு காலமாய் இருக்கும் சாதிப் பிளவுகள் மாறிவிடுமா?அவை வெறும் ஓட்டு வங்கியாக மாற்றப்பட்டுவிட்டன.மக்களின் மனங்களில் சமூகத்தின் பார்ஙையில் மாற்றங்கள் வர வேண்டும். அதற்கான விழிப்புணர்வு வந்தால் மட்டுமே இதற்குத் தீர்வு.
ஆளும் அதிகாரங்களும் சாதிய உணர்வாளர்களும் எங்களை எதுவும் செய்ய இயலாதென இறுமாந்திருக்கும் மத வெறியர்களும் குற்றமற்ற ஆத்துமாவின் இரத்தத்திற்கு என்ன பதில் கூறப்போகிறார்கள்.
பதினெட்டாம் பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் இந்தியாவில் கூட்டங்கூட்டமாய் மக்கள் மதம் மாறியதன் அடிப்படை இத்தலைமுறைக்கும் தெரியட்டுமே.சாக்கடைப் புழுக்களென எண்ணப்பட்ட சேரிகளின் மக்களை உணவும் கல்வியும் ஈர்த்ததில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்.நீ வேறு மதத்தில் சென்று வசதியாய் மாறிவிடக்கூடாது.எம் மதத்தில் உனக்கு எந்த உரிமையும் அளிக்க மாட்டோம் என்பது எந்த நியாயம்.
இந்தியாவின் போலி முகங்களை இனியும் மறைக்க முடியாது.
காற்றில் கரைந்துவிட்ட இளம் ரோஹித்களின் மரணம் இன்னும் எத்தனை காலம் தொடரும்.

வானங்களையும் நட்சத்திரங்களையும் நேசித்த நீ
மண்ணிற்கு அன்பை கற்பிக்கச் சென்றுவிட்டாய்!!
சமத்துவத்தை சட்டத்தில் மட்டும் பகட்டாய் கொண்ட
ஒரு சமூகத்தின்
உண்மை நரகலை,
பலகோடி உயிர்கள் அன்றாடம் உழலும் யதார்த்தத்தை,
நிணமும் குருதியுமான அதன்
குரூர உள்ளத்தை
உலகிற்கு இயம்பிச் சென்றுவிட்டாய்!!!
நீங்கள் என்றென்றும்
அதிகார மட்டத்தை அடைய இயலா
மிக அற்பமான எம் கால்களின் தூசி போன்ற கல்வியையும்
எங்கள் மேசைகளின் கீழ் சிதறும் துணிக்கைகளையும் பொறுக்கிக் கொள்ள யாமளித்த
பெரும்பேற்றை உவகித்து
எம்மை தலைமுறைகளாய்
வணங்கிக் கொண்டிருங்களென்று
பெருங்கருணை(!)
காட்டிய பழம்பெருமை பேசும்
இத்தேசத்தின் முகரூபத்தை
காண்பிக்கும் சிறு துளியாய்
காற்றினில் கலந்துவிட்டாய்!!
எவர் கூற இயலும்
உன் அம்பாறத்தூணியின்
கேள்விகளுக்கு விடையை!!
என் செய்யப்போகிறோம் வெமுலா
குற்றமற்ற
இரத்தசாட்சியாய் மரித்த
உன் இளநெஞ்சின்
முடிவற்ற கனவுகளுக்கு!!!

மோனிகா மாறன்
வேலூர்.

மோனிகா மாறன்.

மோனிகா மாறன்

Leave a comment